திங்கள், 19 பிப்ரவரி, 2018

தொலைத்துவிட்ட உறவுகள்

தொலைத்துவிட்ட உறவுகள்

          நான்கு நாட்களாய் எப்பொழுதும் சாப்பிடுகிற ஆயாக் கடை  வெற்றிடமாக இருப்பதை பார்க்கும் போதெல்லாம் வெறுமை மனதிற்குள் பரவுவதைத் தடுக்க இயலவில்லை அந்தோணிக்கு.. சிறுவயதிலேயே உறவுகளைப் பறிகொடுத்து வெகுதொலைவில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் அந்தோணிக்கு வெளி உணவகங்கள் எதுவுமே ஒத்துப்போகாமல் வயிறு கோளாறாகி நிறையவே சிரமப்பட்டிருக்கிறான். 
          தெருமுனையிலிருந்த ஆயாக்கடையில் ஒருமுறை சாப்பிட்ட பிறகு அம்மாவைப் போல கைமணமும், அன்பொழுகப் பேசி பரிமாறும் கவனிப்பும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.
          எழுபது வயதைக் தொட்டுவிட்ட ஆயாவின் இடுங்கிய கண்களில் ஏதோ ஒருவித சோகம் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.  பக்கத்தில், பள்ளிக்கூடப் பிள்ளைகள் கடைக்கு ஓடிவரும் போது சுட்டுவைத்திருக்கும் குழிப்பணியாரங்களை அள்ளிக் கொடுத்து ஆசையோடு முத்தம் கொடுக்கும் ஆயாவின் கண்கள் கலங்கியிருப்பதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறான்.
          ஆனால் அடுப்புப் புகையைத்  திட்டிக்கொண்டு வழிகின்ற கண்ணீரைத் துடைத்துக் கொள்வாள்.  நான்கு நாட்களாய் அலுவலக வேலை நேரங்களிலும் ஆயாவின் நினைப்பாகவே இருந்தது  அந்தோணிக்கு
          எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் ஆயாவின் கைப்பக்குவம் ஒரு கடையிலும் இல்லை.  உரைப்பு கூடவோ குறையவோ,  வெந்தும் வேகாமலும் குமட்டிக்கொண்டு வந்தது.        
          ஒரு சில நேரங்களில் எல்லாம் சரியாக இருந்தும் மனசு சரியில்லாமல் பாதிக்கும் மேல் குப்பைத் தொட்டிக்குப் போனது.
          உணவில் மட்டுமல்லாது உணா்விலும் ஆயா ஆக்கிரமத்திருந்த மனதை இல்லாத பொழுதுதான் உணர முடிந்தது.  ‘ஆயாவிற்கு  என்னவாகியிருக்கும்? வெளியூா்க்குப் போயிருப்பார்களோ? கடையை மாற்றிக் கொண்டு வேறிடம் போய்விட்டார்களா? சொந்த ஊருக்குப் போய்விட்டார்களோ?’ எந்தக் கேள்விக்கும் பதிலில்லாமல் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
          ‘போய்ட்டு வாரேன் ஆயா’னு சொல்லும் போது ‘சரிமா கண்ணு’ பத்திரமாப் போய்ட்டு வாமா ராஜா’னு ஆயா வாழ்த்தியனுப்பாத இந்த நான்கு  நாட்களும் நரகமாய்த் தெரிந்தது.
          எப்படியாவது ஆயா வீட்டைத் தேடிப் போய்ப் பார்த்துவிட வேண்டுமென்று முடிவெடித்து அசட்டுத் துணிச்சலில் விடுமுறை நாளில் அரைநாள் முழுக்க அலைந்து திரிந்து ஒரு வழியாக் கண்டுபிடித்துவிட்டான்.
          தென்னங் கிடுகுகளாய் வேயப்பட்டிருந்த குடிசைவீடு, வாசலில் கதவில்லை, கதவுக்குப் பதிலாய் கோணிப்பை தொங்கிக் கொண்டிருந்தது
          வெளியில் நின்று கொண்டு ‘ஆயா, ஆயா’ என்று கத்தினான். பதிலில்லை.  உள்ளே ரொம்ப மெதுவாய் முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
          தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்.  உள்ளே நார்க்கட்டிலில் சுருண்டுகிடந்த ஆயாவைப் பார்த்தும் பதறிப்போய் கதறினான்.  உடம்பு நெருப்பாய்க் கொதித்தது.  சிரமப்பட்டு கண் விழித்துப் பார்த்தாள்..
          ‘ஆயா.. நான் அந்தோணி வந்திருக்கேன், என்னாச்சு ஆயா? வாங்க ஆஸ்பத்திரி போகலாம்.. இருங்க.. ஆட்டோவ கூட்டிட்டு வா்றேன் அவசரமாய் ஓடி ஆட்டோ பிடித்து வந்தான்.  ஆட்டோ ஒட்டுநரும் அந்தோணியும் சோ்ந்து ஆயாவைத் தூக்கிச் சென்று ஆட்டோவில் அமா்த்தினா்.
          ‘தம்பி.. நா இந்த ஏரியாதான்.  பாவம் கிழவி, நல்ல மனுசி, யாருக்கம் எந்தக் கெடுதலும் நினைக்காது.  பெத்த புள்ளைகள்ளாம் சொத்தைப் பிடுங்கிக்கிட்டு அநாதையா விட்டுடுச்சுங்க.  வீட்டுக்கு யாரு வந்தாலும் எம் பிள்ளைங்கள பார்த்தீங்களா? நல்லாயிருக்குதுங்களா’னு கேட்டு அழும்.. உறவுனு சொல்லிக்க இதுக்குனு யாருமேயில்ல..’
          ஓட்டுநா் சொல்லச் சொல்ல கரிசல் கருணாநிதி பாடிய  ‘ஒரு ஊா்ல ஒரேயொரு கிழவி’ பாட்டுதான் ஞாபகம் வந்தது.  ச்.சே.. இப்படியுமா மனுசங்க இருப்பாங்க.  தான் சிறுவயதாயிருக்கும்போதே ஆயாவை இழந்த அந்தோணி அந்த கணமே ஆயாவைத் தத்தெடுத்துக்கொண்டான்.  இல்லாதவனுக்குத்தானே இருப்பவரின் அருமை தெரியும்.
          உறவுகளைப் பாதுகாக்க வேண்டும், பணத்தைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் உறவுகளைப் பயன்படுத்திக்கொண்டு பணத்தைப் பாதுகாக்கும் கல்நெஞ்சங்கள் என்றைக்குத்தான் திருந்துமோ?  கவலை படிந்த தாய்மை உள்ளத்தோடு மடியில் கிடத்தியிருந்த அப்பத்தாவின் தலைகோதிவிட்டான்.

-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக