வியாழன், 18 ஜனவரி, 2018

தைப்புரட்சியால் எங்கும் எழுச்சி..

தலையங்கம்

தி.பி. 2049 (கி.பி. 2018)       தைத்திங்கள்
தேன் - 2                                                          துளி -1



தமிழா் திருநாள் வாழ்த்துகள்..
   
இளையோர் ஒன்று கூடி முன்னெடுத்த தைப்புரட்சியின் விளைவாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இத்தனை ஆண்டுகளாய்க் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி புறக்கணித்தவா்கள்கூட தைமகளை உச்சிமேற்வைத்துக் கொண்டாடி மகிழ்வதனைப் பார்க்க முடிந்தது.  பெரு மகிழ்ச்சி.. உள்ளூர்த் தமிழா்கள் முதல் உலகத்தமிழா்கள் வரை தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்து பண்டைத் தமிழா் மரபுகளை, கலைகளை, பண்பாட்டுச் சிறப்புகளை உலகத்தார் கண்டு வியக்கும் வகையில் ‘தமிழா்’ என்னும் ஓருணா்வுக் குடையின்கீழ் ஒன்றிணைந்து கொண்டாடியதைக் காணக் கண் கோடி வேண்டும். சங்கத் தமிழன் மாண்பினை தங்கத் தமிழா் உயா்த்திப்பிடிப்பதைக் காணத்தானே நம் தமிழ்ச்சான்றோர் பலா் தவமாய்த் தவமிருந்தனா்.


          ஆனால் இவ்வெழுச்சியும், புரட்சியும் ஒருவாரக் கொண்டாட்டத்தோடு இம்மட்டோடு நின்று தேங்கிவிடக்கூடாது.  திருநாளின் உண்மைப் பொருள் நிறைவேறியுள்ளதா என்பதை நாம் நினைத்துப்பார்க்க வே்ணடிய நம் அனைவரது கடமை.

          ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்னும் வள்ளுவரின்  வாக்கையும், உழவரின் வாழக்கையும் காக்கத் தவறிவிட்டோம்.  பாரதியின் பாடலை வளைத்து நெறித்து ‘உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை வந்தனை செய்யும் கீழ்மை நிலை பெருகிவிட்டது.  உழவும், நெசவும், மீன்பிடியும், பனைத்தொழிலும் கண்முன்னே நசிந்து சிதைந்து காணாமல் போவதைக் கண்டும் காணாதிருப்பதுமா தமிழ் வாழ்வு?

          மண்ணை மலடாக்கி, நெகிழிகளை உரமாக்கி, மரங்களை வெட்டிச்சாய்த்து கதிரவணுக்குப் படைப்பது நன்றியாகிவிடுமா? துன்பங்கள் மாள, இன்பங்கள் மீள, நன்மைகள் ஆள,  நலங்கள் வாழ உழைப்போர் உறுபயன் பெறும் நாளே உண்மையான பொங்கல் பெருநாள்,

          மரம் வளா்த்து, மண்வளம் காத்து, மாமழை சேமித்து, மாநிலம் காத்திட இயற்கையோடியைந்த வாழ்வினை நாம் வாழ்கின்ற நன்னாளே உண்மையான நன்றித் திருநாள்.

          பொங்கல் உணவு மட்டுமன்று; அது நம் தமிழரின் உணா்வு உணா்வைப் பேணிக்காக்க உலகத்தமிழா் ஒன்று கூடி முனைந்தெழுவோம்.

          தமிழா் திருநாள் நம் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியைப் பொங்கிப் பரவி நிலைத்திடச் செய்யும் பெருநாளாக அமைய அன்புநிறை நல்வாழ்த்துக்கள்.

                              “தைபிறக்க வழிபிறக்கும் என்பா் மேலார்
                                        தமிழகத்து வழிவகுக்க வந்தாய் பொங்கல்!
                              பொய்யுறக்கம் கொள்கின்ற தமிழா் இந்நாள்
                                        பொங்கிஎழுந் தாற்பகைமை தூள்தூள் ஆகும்.
                              செய்புரக்கும் உழவோரே செங்கோல் தாங்கிச்
                                        செந்தமிழ ஆட்சியினைச் செய்வா், நம்மோர்
                              கைசிறக்கும் கலைசிறக்கும் தொழில்சிறக்கும்
                                        காலமெலாம் களிசிறக்கும் தமிழ்சி றக்கும்”
-வீறுகவியரசா் முடியரசன்


அன்பின் வாழ்த்துகளுடன்
தேமதுரம்  - ஆசிரியா்குழு


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
மு.சிவசுப்பிரமணியன்

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
தே.தீபா 
ந.முத்துமணி

கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3.














புதன், 17 ஜனவரி, 2018

உழவா் திருநாள்

உழவா் திருநாள்

         மதிய உணவு இடைவேளை.  ஆசிரியா் ஓய்வரையில் ஆசிரியா்கள் ஒருவருக்கொருவா் உணவுகளைக் பரிமாறிக்கொண்டு உண்ணத் தொடங்கினா்.

          ஆசிரியா் ஸ்டீபன் நேவிஸ்-க்கு எதிரே உட்கார்ந்திருந்த விமல் சார்-க்கு அடுத்தடுத்து அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டேயிருக்க சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து சென்று பேசுவதும், வந்து உட்காருவதுமாக இருந்ததைப் பார்த்து, சாப்பிட்டுக் கைகழுவ எழுந்த நேவிஸ் பொறுமையிழந்து கேட்டுவிட்டார்.  “சார், ஒன்று - பேசிட்டுச் சாப்பிடுங்க... இல்லைனா சாப்பிட்டு முடிச்சிட்டுப்பேசுங்க...”
          “இல்ல சார்.. சாப்பாட்டு நேரங்கிறதால அடுத்தடுத்து முக்கியமான போன் கால் வந்துட்டேயிருந்தது அதான்..”
          என்ன முக்கியமானதுனாலும் சாப்பாட்ட காக்க வைக்ககூடாது சார்.
          “ஏன் சார்.. சாப்பாட்டுக்கு என்ன உயிரா இருக்கு?  நம்மள இப்படி காக்க வைக்குறானேன்னு அது ஃபீல் பண்ணவா போகுது” சிரித்தார் விமல்.
          அப்படியில்ல விமல் சார்.  தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, தேசியக் கொடிக்கு, தேசிய கீதத்திற்குலாம் நாம் மதிப்பு கொடுக்குறாமே.. அதுக்குலாம் உயிர் இருக்குதுன்னா நாம மதிப்பு கொடுக்குறோம்?  அதுபோலதான் சார் நம்ம உணவும்.   அதுக்கும் நாம உரிய மரியாதை கொடுக்கணும் சார்.
          “புரிஞ்சுது சார்.. தப்புதான்”  என்று விமல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே செல்போன் மணி ஒலிக்க, அழைப்பைத் துண்டித்த விமலிடம் “ரொம்ப நன்றி சார்” என்றார் நோவிஸ்.
          கை கழுவும்போது பக்கத்தில் உணவுக் கழிவு தொட்டியில் சாப்பாட்டை கொட்டிக் கொண்டிருந்த மைக்கேலிடம் “சார்..... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்களே இப்படி சாப்பாட்டு வீணாக்கலாமா சார்?”
          “சாப்பிட முடிஞ்சாதான் சாப்பிட்டிருவேனே சார்.. வீட்டுல நிறைய வைச்சுவிட்டுட்டாங்க..”
          “சார் சாப்பிட முடியாதத, இராத்திரி வரைக்கும் கெடாம இருக்கும்னா கைபடாம வீட்டுக்கே திருப்பிக் கொண்டு போய்டலாமே சார் காய்கறிகள் விக்குற விலைக்கு அதை இப்படி குப்பையில போடலாமா?  உணவை வீணக்குறதுக்கும், உணவுப் பொருளைப் பதுக்குறதுக்கும் ரொம்ப வித்தியாசமில்லை சார்.... இது அறிவுரையில்ல சார்.. என்னோடே வேண்டுகோள்”
          “பரவாயில்ல சார்... நல்லதைத்தானே சொல்றீங்க, கடமையை உணா்த்துனதுக்கு நன்றி சார்”  என்றார் மைக்கேல்.
          நோவிஸ்-க்கு இந்த குணம் இன்று நேற்றல்ல.. இயற்கை உணவு, இயற்கை மருத்துவத்தில் மிகுந்த ஆா்வமுள்ள அவா் பள்ளியில் நலவாழ்வு இயக்கத்திற்குப் பொறுப்பாசிரியா் பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டார்.  பள்ளியில் நலவாழ்வுக் கருத்தரங்கம் நடத்துவது, அறிவிப்பு பலகையில் உடல் நலம் தொடா்பாக ‘தினம் ஒரு தகவல்’ எழுதி ஆசிரியா்களை அவா் வழிக்கு.  இல்லையில்லை.. இயற்கை முறை வழிக்குக் கொண்டுவந்து விட்டார்.
          பொங்கல் விடுமுறைக்கு முதல்நாள் காலையில் ஆசிரியா்கள்  அறைக்குள் நுழைந்ததும் வழக்கம்போல் ஆா்வமாய் இன்று ஒரு தகவல் வாசித்தார்கள்.. அதிலிருந்து இதுதான்.
          ‘மண்பானை மஞ்சள் கரும்போடு, ஒரு கிலோ அசிரியும் விலைக்கு வாங்கினார் விவசாயி.  பொங்கல் வைக்க’  இன்று இப்படித்தானிருக்கிறது விவசாயிகளின் நிலைமை.  விவசாயி எலிக்கறி சாப்பிடுவது நாம் சாப்பிடுவதுபோல சாதாரண செய்தியாகத் தெரிகிறது நம்மில் பலருக்கு.. வருமானச் சான்றிதழில் தொழில் விவசாயம் என்று போட்டுக் கொள்ளும் பலா் விவசாயிகளே இல்லை... சலுகைக்காய் விவசாயத் தொழில் என்று போட்டுக் கொள்ளும் பலா், விவசாயத்தால் கிடைக்கும் உணவுகளை உண்டு வாழும் இந்த தேசம் - விவசாயத்தையும், விவசாயிகளையும் ஒட்டு மொத்தமாய் என்றைக்கு மதித்து வாழ்கிறதோ அன்றுதான் உண்மையில் உழவா் திருநாள்.
          உண்மையான உழவா் திருநாளுக்காய்.... உழவன் பின்நின்று உரத்த குரல் எழுப்புகிறது நம் பள்ளி நலவாழ்வு இயக்கம் என்று ஒட்டப்பட்டிருந்தது.
          வாசித்தவா்களின் மனதில் பற்றியெழுந்த உணா்வுத்தீ, வகுப்பறைகளில் மாணவா்கள் உள்ளங்களில் சுடா்விட்டெழுந்தது.  ஒன்று பலவாய், ஒளிப் பிழம்பாய்க் கூடி அது, உழவா்களின் வாழ்விற்கு ஒளிவிளக்காய் நிச்சயமாய் மாறும்.

-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்



ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்!!
             
           அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு தான் செய்ய வேண்டும். ஆனால், அன்னதானம் ஒன்று தான் பெறுவோர் தகுதி பார்க்காமல் செய்யக்கூடிய தானம்.

          அதிதி பூஜை மற்றும் அன்னதானம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிதி பூஜை என்னும் அன்னதானத்தை பொருத்தவரை மனமிருந்தால் மார்க்கமும் நிச்சயம் இருக்கும்.

          மழை பொழியும் காரிருள் சூழ்ந்த இரவில், தனக்கு உணவு இல்லை என்றாலும் விதைநெல்லை பொறுக்கி கொண்டு வந்து, கொல்லைப் புறத்தில் விளைந்த கீரைகளை பறித்து வந்து அதிதியாக வந்த சிவபெருமானுக்கு படைத்த இளையான்குடி மாறநாயனாரின் சரிதமும், தங்கள் குடும்பத்திற்கே உணவு இல்லாத சூழ்நிலையிலும் விருந்தினருக்கு அன்னமிட்டு தாங்கள் பட்டினியால் மடிந்த மகாபாரதத்தில் வரும் உஞ்சவிருத்தி அந்தணரின் கதையும்…. அவ்வளவு ஏன், பிக்ஷை கேட்டு வந்த ஆதி சங்கரருக்கு பிக்ஷையிட எதுவுமில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷையளித்ததால் ஆதி சங்கரர் ‘கனகதாரா சுலோகம்’ பாடி தங்கநெல்லி மழை பொழிய வைத்த சம்பவமும் உணர்த்துவது இதைத் தான்.

  சுந்தரரின் அதிதி பூஜை செய்த அற்புதம் – நெற்குவியலில் மூழ்கிய திருவாரூர்!!

          சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணம்புரிந்து இனிய இல்லறம் நடத்திவந்த காலகட்டங்களில், அதிதி பூஜை செய்து, அடியார்க்கு தினசரி அமுது படைத்து வந்தார். இதன் மூலம் சுந்தரரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

          திருவாரூருக்கு அருகில் திருக்குவளை என்னும் பதியை ஒட்டியுள்ள குண்டையூர் என்னும் சிற்றூரில் குண்டையூர் கிழார் என்னும் நிலச்சுவான்தார் ஒருவர் வசித்து வந்தார். சுந்தரர்பால் பேரன்பும் மரியாதையும் கொண்டிருந்த அவர் சுந்தரர் பரவையாருடன் சேர்ந்து தினமும் தனது இல்லத்தில் அடியார்க்கு அமுது செய்துவருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் – சுந்தரர்க்கு தான் ஏதேனும் செய்ய விரும்பி – சுந்தரரும் அமுது செய்ய வரும் அடியவர்களும் பயன்பெறும் விதமாக நெல், பருப்பு, வெல்லம், கரும்பு மற்றும் இதர மளிகை பொருட்களை சுந்தரரின் இல்லத்திற்கு அவ்வப்போது மாட்டு வண்டிகளில் அனுப்பி வந்தார்.

          ஒரு சமயம் மழை பொய்த்ததால் குண்டையூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டு விளைநிலங்கள் வறண்டன. இதனால் சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் பெரிதும் வருந்தினார். அடியாருக்கு அமுது செய்யும் அடியாரான சுந்தரருக்கு தான் நெல் அனுப்பமுடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் சிவபெருமானிடம் இது பற்றி முறையிட்டபடி தானும் உணவு உட்கொள்ளாது உறங்கச் சென்றார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “அன்பனே வருந்தற்க… நம்பியாரூரனுக்கு நெல் அளிக்க உமக்கு படியளக்கிறோம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

          தொடர்ந்து குபேரனை அழைத்த சிவபெருமான், “குண்டையூரில் நெல்லை மலையென குவித்திடுக” என்று ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து குபேரன், ஒரே இரவில் குண்டையூர் முழுக்க மலையென நெல்லை குவித்துவிட்டான். இதனால் குண்டையூருக்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் அடைபட்டுவிட்டது.

          மறுநாள் காலை நெல் மலையை கண்டு பரவசமடைந்த குண்டையூர் கிழார், திருவாரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.

          சுந்தரரும் ஆர்வம் மேலிட உடனே குண்டையூருக்கு விரைந்து வந்து, இறைவன் ஆணையால் குபேரன் குவித்த நெல் மலைகளை கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார். ஆனால், அவருக்கு வேறு கவலை தோன்றியது. இத்தனை நெற்குவியல்களை திருவாரூருக்கு கொண்டு செல்வது எப்படி என்று சிந்திக்கலானார். ஏனெனில், அதற்குரிய ஆள்பலம் குண்டையூர் கிழாரிடம் இல்லை தன்னிடமும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

          உடனே சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளையில் எழுந்தருளியிருக்கும் கோளிலிநாதரை சென்று தரிசித்து, திருவாரூருக்கு நெல்லை கொண்டு செல்ல பூதகணங்களை அனுப்புமாறு வேண்டி ஒரு பதிகத்தை பாடினார். கோளிலி இறைவனும் அசரீரி மார்க்கமாய் “இன்று இரவு பூத கணங்களைக் கொண்டு நெல்மலைகளை திருவாரூரில் சேர்ப்பிப்போம்” என்று அறிவித்து அருளினார்.

          இறைவனின் பெருங்கருணையை எண்ணி மீண்டும் வியந்த சுந்தரர் மகிழ்ச்சியோடு ஆரூர் திரும்பினார்.

          இறைவனின் ஆணைப்படி அன்றிரவு, குண்டையூரில் இருந்த நெற்குன்றுகள் முழுவதையும் பூதகணங்கள், திருவாரூரில் கொண்டு வந்து குவித்தன. இதனால் திருவாரூர் வீதிகள் அனைத்தும் நெல் மணிகளால் நிரம்பி வழிந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட இயலாத நிலையில் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் முன்பாக நெல்மணிகள் குன்றென காணப்பட்டன.

          ஏற்கனவே  சுந்தரர் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்திருந்த பரவையார், “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” (குறள் 215) என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கிணங்க, அவரவர் வீடுகளுக்கு முன்னே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு மூலம் திருவாரூர் வீதிகளில் அறிவிக்கச் செய்தார். இதையடுத்து அவரவர் வீட்டு முன்பாக இருந்த நெல்மணிகளை அவரவர் எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டு நெற்குதிருக்குள் நிரப்பினர். அப்படியும் நெல்மணிகள் மிகுதியிருன்தன. அடுத்த பல தலைமுறைகளுக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்கிற இந்த அரிய நிகழ்வால் திருவாரூர் வாழ் மக்கள் பரவையாரையும் சுந்தரரையும் வாழ்த்தி வணங்கினர்.

          ஆக… சுந்தரர் ஒருவர் செய்த அதிதி பூஜையால் திருவாரூர் வாழ் மக்கள் அனைவரும் பயன்பெற்றனர். அதிதிபூஜைக்கு உதவிய காரணத்தால் சிவதரிசனம் கிடைக்கப்பெற்றார் குண்டையூர் கிழார். (இது அது  அனைத்தையும் விட பெரிய பாக்கியமல்லவா!!!)

          குண்டையூர் கிழார் வாழ்ந்த குண்டையூர் இன்றும் உள்ளது. திருக்குவளையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருக்குவளை-சாட்டியக்குடி சாலையில் உள்ளது. அங்குள்ள இறைவனின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்பாள் பெயர் மீனாக்ஷி. இது தேவார வைப்பு தலங்களில் ஒன்று. சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் இன்றும் இந்த கோவிலில் நடைபெறுகிறது. குண்டையூர் கிழாரின் திருவுருவச் சிலைகள் இக்கோவிலில் உள்ளன.

          பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லும் அதே நேரம் இதே போன்று சரித்திர சிறப்பு மிக்க தலங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சென்று வரவேண்டும்.

          சுந்தரர் கோளிலி நாதரிடம் முறையிட்டு பூதகணங்களை கொண்டு ஆரூருக்கு நெல்லை உதவிய பதிகம் ஏழாம் திருமுறை | சுந்தரர் | திருக்கோளிலி – கோளிலிநாதர். இதை தினசரி ஓதிவந்தால், உணவுக்கே என்றும் பஞ்சம்  வராது. நல்ல வேலையாட்களும் அமைவார்கள். (வேலையாட்கள் அமைகிறார்கள் என்றால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகத் தானே அர்த்தம்!). எனவே இகபர சுகங்களை தரவல்ல பதிகம் இது.

கடைசி பாடலில் சுந்தரர் பிரயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்!

நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே

கு.கங்காதேவி

திருக்குறள் பற்றிய தகவல்கள்

திருக்குறள் பற்றிய தகவல்கள்

1.திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
2.திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
3.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
4.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
5.திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
6.திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
7.திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
8.திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
9.திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
10.திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும்    இடம்பெறவில்லை
11.திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை
12.திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
13.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
14.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
15.திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
16.திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
17.திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி
18.திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு          எழுத்துகள் – ளீ, ங
19.திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்
20.திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
21.திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
22.திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
  மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
23.திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்
24.திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
25.“எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது
26.“ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
27.திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
28.திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
29.திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
30.திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி" மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

-அ.ரா.பானுப்பிரியா

சிந்திக்க சில


சிந்திக்க சில
இட்டுக் கெட்டது காது* 
*இடாது கெட்டது கண்* 
*கேட்டுக் கெட்டது குடி* 
*கேளாது கெட்டது கடன்* 
*பார்த்துக் கெட்டது பிள்ளை* 
*பாராமல் கெட்டது பயிர்*
*உண்டுக் கெட்டது வயிறு*
*உண்ணாமல் கெட்டது உறவு*

விளக்கம் :
குச்சியைச் சதா காதில் விட்டு குடைவதால் காது கெடும்.
மையை இடாததால் கண் கெடும்.
பிறர் சொல்லும் கோள் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்டால் , குடும்பம் சீரழியும்.
அடிக்கடி கேட்காததால் கடன் திரும்பி வராமல் அழியும்.
தயவு தாட்சண்ணியம் பார்த்துக் கண்டிக்காமல் இருந்தால் பிள்ளைகள் திருந்தாமல் கேட்டுப் போவார்கள்.
அடிக்கடி போய் பார்க்க வில்லையானால் பயிர் கெடும்.
அடிக்கடி உண்பதால் வயிறு கெடும்.
உறவினர் வீடுகளில் விசேஷக் காலங்களில் நாம் கலந்துக் உண்ண வில்லையானால் உறவினர் நட்புக் கெடும்.
சு.லாவண்யா


ஈசன் உபதேசித்த தலங்கள்

ஈசன் உபதேசித்த தலங்கள்*

*ஓமாம்புலியூர்*
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்* 
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

*திருவுசாத்தானம்*
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

*திருவான்மியூர்*
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்* 
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.


*திருப்பூவாளியூர்* 
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

*திருமங்களம்* 
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருக்கழு குன்றம்* 
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருமயிலை*
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

*செய்யாறு*
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

*திருவெண்காடு*
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

*திருப்பனந்தாள்* 
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

*திருக்கடவூர்* 
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

*திருவானைக்கா* 
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

*மயிலாடுதுறை* 
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

*திருவாவடுதுறை*
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

*தென்மருதூர்* 
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

*விருத்தாசலம்* 
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

*திருப்பெருந்துறை*
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

*இராமேஸ்வரம்*
திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

*உத்தரமாயூரம்*
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

*காஞ்சி* 
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

*திருப்புறம்பயம்* 
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

*விளநகர்*
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.


*திருத்துருத்தி* 
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

*கரூர்*
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

*திருவோத்தூர்* 
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

*ஓம் நமசிவாய...!*
     *சிவாய நம ஓம்...!*
நன்றி சாவன்சித்தர்
தகவல் தந்தவர் சிவனென்றிரு*ஈசன் உபதேசித்த தலங்கள்*

*ஓமாம்புலியூர்*
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்* 
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.


*திருவுசாத்தானம்*
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

*திருவான்மியூர்*
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்* 
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

*திருப்பூவாளியூர்* 
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

*திருமங்களம்* 
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருக்கழு குன்றம்* 
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருமயிலை*
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

*செய்யாறு*
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

*திருவெண்காடு*
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

*திருப்பனந்தாள்* 
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

*திருக்கடவூர்* 
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

*திருவானைக்கா* 
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

*மயிலாடுதுறை* 
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

*திருவாவடுதுறை*
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

*தென்மருதூர்* 
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

*விருத்தாசலம்* 
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.


*திருப்பெருந்துறை*
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

*இராமேஸ்வரம்*
திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

*உத்தரமாயூரம்*
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

*காஞ்சி* 
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

*திருப்புறம்பயம்* 
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

*விளநகர்*
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

*திருத்துருத்தி* 
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

*கரூர்*
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

*திருவோத்தூர்* 
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

*ஓம் நமசிவாய...!*
     *சிவாய நம ஓம்...!*
நன்றி
-        வ.மீனாட்சி