வெள்ளி, 7 டிசம்பர், 2018

பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்
            புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது.  இது ஆண்களுக்கு உரியதைப் போன்றும் மனது புண்பட்டால் சிகிரெட் குடித்து அதை ஆற்றுவது போலவும் இதற்கு பொருள் கொள்ளப் பெறுகிறது.  ஆனால் ஆண், பெண் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் துன்பம் வருவது ஆதனால் மனது புண்படுவது இயற்கை நமக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் இயல்பாக வாழ்தல் இயலாது எனவே புண்பட்ட  மனதை அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிராமல் வேறு ஒன்றின் பால்  (புக விட்டு)  செலுத்தினால் மனப்புண் ஆறும் என்பதையே புண்பட்ட மனதைப் புகவிட்டு ஆத்துதல் என்றனா்.  இதில் புகவிட்டு என்பது புகை விட்டு என்றாகி தவறான பொருள் கொள்ள வைத்துள்ளது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


சின்ன சின்ன ஆசை


சின்ன சின்ன ஆசை
            வீடே அதிரும்படியாக ஓயாத வரட்டு இருமல் சேகரை  வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
            அறுபதைத் தாண்டிவிட்டால் அன்றாடம் பலருக்கு இரவும்பகலும் இணைபிரியாமல் துணையாயிருப்பது நோய்கள் மட்டும் தான்.
            “என்னவுட்டு இருமலோ இப்புடி விடாப்பிடியாய் பிடிச்சிக்கிட்டு பாடாய்ப்படுத்துதே இந்த மனுசன.. ஈரக்குலை அதிர்ற அளவுக்கு இப்படி  நாள்  முழுக்க இருமுனைா இந்தத் தொண்ட என்னத்துக்கு ஆகுறது? கடவுளே என்தான் இப்பிடி கஷ்டத்தக் கொடுக்குறியோ.  தெரியல”  சேகரின் மனைவி தேன்மொழி அம்மியில் தூதுவலையை  விழுதாய் அரைத்துக் கொண்டு புலம்பிக்கொண்டிருந்தாள்.
            மருமகள் அமுதா பாலில்  மிளகுதட்டிய போட்டுக் கொண்டிருந்தாள்.  பேத்திகள் விடாமல் இருமிக் கொண்டிருந்த தாத்தாவின் அருகில் நின்கொண்டு இமை சிமிட்டாமல் பாவமாய்ப் பார்த்துக்  கொண்டு நின்றார்கள்.
            இது எதுவும் தெரியாதது போல், ஏதையும் கவனிக்காதது போல் வழக்கம் போலவே தொலைக்காட்சியையும் கையிலிருந்த அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் பாலு.
            இருமலின் சத்தம் கூடக்கூட தொலைக்காட்சியின் சத்தமும் கூடிக்கொண்டு இருந்தது.  கடவுளைத் துணைக்கழைத்து வராததால் என்னவோ தேன்மொழி தன் மகனை அழைக்க எழுத்து உள்ளே சென்றாள்.
            உள்ளே போன பின்னும் ‘கேட்போமா வேண்டாமா’ என் யோசனையில் தன் மகனையே  உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் “ஏம்பா உங்கப்பாவுக்கு இருமி இருமி தொண்டையே புன்னாப் போச்சு  ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குக் கட்டிட்டுப்  போய்ட்டு வரலாம்லப்பா.
            ஒரு கையில் டிவிரிமோட்டும் மறுகையில் செல் போணுமாய் இருந்தவன் டிவி ரிமோட்டை எந்திவிட்யடி கத்தினான். “ஒரு நாளாவது வீட்டுல நிம்மதியா இருக்கலாம்னா முடியுதா இங்க? மழையில நனைஞ்சிருப்பாரு.. இல்ல வோ்வையோட குளிச்சிருப்பாரு.. இல்லாட்டினா புகை தூசில மூக்கை கொடுத்திருப்பாரு.. சும்மாயிருந்தா எப்படி இருமல் வரும்? எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வினைய இழுத்துக்கிட்டு..ச்சை.. இவருக்கு இதே பொழப்பாப் போச்சு.. ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே கிடந்த என்னவாம்? அடங்காமத் திரிஞ்சா இப்படித்தான்  காட்டுக்கத்தலாய்க் கத்தினான் பாலு.
            வெளியே திண்ணையில் மக்களின் கத்தலைக் கேட்டுக் கொண்டிருந்த சேகா் பொங்கி வந்த அழுகையை இருமலோடு சோ்த்து அடக்கிக் கொண்டார்.
            தேன்மொழிக்கு இப்படி திட்டுகள் வாங்குவது புதிதில்லை.. தான் வாயைத் திறந்து எதைச் சொன்னாலும் வெடுக் வெடுக்கென்று தேள் கொடுக்காய் கொட்டித் தள்ளுகிறவனிடம் வேறெதை எதிர் பார்த்தவிடமுடியும்?   இருந்தாலும் பாழாய்ப் போன மனசு கேட்டுத் தெலைய மாட்டீங்குதே..
            எல்லாவற்றையும் கவலையோடு கவினித்துக் கொண்டிருந்தார் அமுதா.  இரண்டு வாரங்களில் பாலுவுக்குப் பிறந்தநாள் வந்தது.  இருவரும் வேலைக்குச் செல்வதால் வேலைவிட்டு  வந்து மாலை நேரத்தில் தான் ஒவ்வொராண்டும் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள்.
            பிறந்தநாளென்று அலுவலகத்தில் மேலாளர், உடன் பணியாற்றும் பணியாளர்கள் கொடுத்த பிறந்த  நாள்  பரிசுகளைத் தூக்க முடியாமல்  தூக்கிக் கொண்டு வந்தான்  வாசலில் நின்று வரவேற்க மனைவி நிற்காததே பெரிய ஏமாற்றமாயிருந்தது.  வீட்டினுள் நுழைந்து அறைக்குள் அடுக்கிவைத்துவிட்டு சுற்று மற்றும் தேடிப்பாத்தான்.  பிள்ளைகள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தார்கள்.. அப்பா அம்மாவைத்தான் தேடுகிறாரென்பதை உணா்ந்த பிள்ளைகள் “அப்பா.. அம்மா ஆபிஸ்ல் வேலையிருக்காம்.  இன்னிக்கு வர லேட்டாகுமாம். மகன் சொன்னதும் ஏமாற்றம் ஆத்திரமாய் மாறியது.
            அமுதா ஏழு மணிக்குத்தான் வீடு வந்தான்.  வந்ததும் உடைமாற்றி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள், மணி எட்டரையைத் தாண்டியது. அதற்குமேல் பொறுமையில்லாமல் “இன்னிக்கு   என் பிறந்தநாளுனு கூட உனக்கு ஞாபகம் இல்லாமல் போய்ருச்சில்ல..  “அமுதாவின் நேருக்கு நோ் நின்று கேட்டான்.
            “அய்யய்யோ.. ஆபிஸ்ல ரொம்ப வேலை. மன்னிச்சிடுங்க.. “என்று சொன்னவாமே அஞ்சறை டப்பாவிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டி “கேக் வாங்கிட்டு வாங்க.. வெட்டலாம் என்றாள்.  பாலுவிற்கு ஆத்திரம்  எரிமலையாய் வெடித்தது.
            “நா என்ன பிச்சைக்கரனா? உனக்கு சம்பாதிக்குற திமிர் வந்துடுச்சு.. ஆபிஸ்ல எவ்வளவு போ் சிரிச்சமுகத்தோட வாழ்த்து சொல்லி எனக்குப் பிடிச்சதெல்லாம் தெரிஞ்சிட்டு கிஃப்ட் கொடுத்தாங்க.. நி என்னபான்னா கடனுக்குப் பணத்தை நீட்டுற?  உங்காசு யாருக்கு வேனும்?” கத்தினான் பாலு.  வழக்கம் போல பொறுமையோடிருந்த அமுதா “உங்களுக்கிருக்கிற சின்னச் சின்ன ஆசைகளப் போலத்தானே மத்தவங்களுக்கும் இருக்கும்.  எண்ணிக்காவது மாமாகிட்ட ‘சாப்பிட்பீங்களாப்பா.. மாத்திரை போட்டீங்களாப்பா.. இப்போ உடம்புக்குப் பரவாயில்லையான்று கேட்டிருக்கீங்களா? மாசம் ஒன்னாம் தேனியானா பெட்டிக்கடை, பால்காரனுக்குப் பணம் கொடுத்து கடனை அடைக்குற மாதிரி பெத்தவங்களுக்கும் பணம் கொடுக்குற தோட நிறுத்திடுறீங்க.. பெட்டிக்க்கடைக்காரனும் பெத்தவங்களும் ஒன்னாங்க?  எவ்வளவு காசுக் கொடுத்தாலும் நீங்க பாசமா அனுசரணையா பேசு ஒத்த சொல்லுக்கு ஈடாகுமா?  பெரியவங்கள இருக்குறப்பவே அவங்கள நல்லாக் கவனிச்சுக்காம இல்லாதப்போ அழுது புலம்புறது முட்டாள் தனமில்லங்க.. அது அயோக்கியத்தனம்.  அப்பா அம்மாகிட்ட முகம் கொடுத்து பேசி சிரிச்சு எத்தனை வருசாமாவுதுன்னு  கொஞ்சம் நினைச்சுப் பாருங்க ஏ டி எம் மிஷினும் வாடிக்கையாளரும் மாதிரியாங்க  குடும்ப உறவு?”
            அமுதா கேட்கும் எந்தக் கேள்விக்கும் பாலுவால் பதில் சொல்ல முடியவில்லை.  ‘தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ரவா லட்டுதான் செஞ்சிகிட்டு இருக்கேன்.  பத்து நிமிஷம் வெய்ட பண்ணுங்க.  சாப்பிடலாம்  சொல்லிவிட்டுப் போன அமுதா போன திசையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
            மனிதனுள் புயல் அடித்து ஓய்ந்து போலிருந்தது.  புதிதாயப் பிறந்தவனைப் போல உணா்ந்தான்.  வேக வேகமாய் அலைபேசியில் டயல் செய்து  பேசத்தொடங்கினாள்.  “அப்பா.. நல்லாயிருக்கீகளா? சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டீங்களா?”
            உள்ளே அமுதாவின் கண்களிலும் ஊரில் சேகரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.. இன்னும் இரு கண்களும் கலங்கித் தவித்தன.. அவை பாலுவின் கண்கள்.
-முனைவா். ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

தமிழாயிரம்


தமிழாயிரம்
23. அகத்தியப் புரட்டு
1.         என்றதால் செக்கிழுக்கும் மாடாய் இழிவுற்றார்;
            நன்றென்றார் நம்பகையா் ஏற்று.
2.         ஏற்றுவந்த கொத்தடியார் ஏதும் எழுத்தறியார்
            போற்றிய போர்களைப் போல்.
3.         போல்பார்ப்பார் தம்நெறியைப் போற்றினார்.  பார்ப்பார்தாம்
            மேய்ப்பாராய் நிற்கப் புகுந்து.
4.         புகுந்தார் புனைந்தார் புனைகதைகள்; பார்ப்பார்
            மிகுந்த நிலைமை யுற
5.         நிலைபெற்ற பொய்ச்சடங்கால் நின்ற அறிவும்
            குலைவுற்றுக் கெட்டது  கூறு.
6.         கூறினார் பொய்யாய்ப் பொதியத் தகத்தியன்
            கூறினான் முத்தமிழ் என்று.
7.         என்றுமே இல்லா ஒரு நுலை நன்றாம்
            ‘மகத்துவம்’ என்றார் மதித்து.
8.         மதித்ததொல் காப்பியன் மாணூலைத் தள்ளக்
            கதித்த கதைதான் அது.
9.         அதனை உருவாக்கி ஓா் நூல் உளதாய்
            அகத்தியப்போ் சூட்டினார் ஆய்ந்து.
10.       ஆய்ந்தறிதந்தால் முத்துவீரா் நூலுக்குப் பின்வந்து
            சாய்ந்தநூல் என்னல் தெளிவு.




கலங்கைர விளக்கு (குறுங்கதை)


கலங்கைர விளக்கு (குறுங்கதை)
            இரவு நேரம்  கடலலைகள் கைவிடப்டோரை வரவேற்க தனது கரங்களை விரித்து ஓலமிட்டுக் கொண்டிருந்தது.  தூரத்தில் ஒருவன் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் சுனாமிக்கு இரையான அவனது பெற்றோரை நினைவுப் படுத்தியது. சுற்றத்தாரால் கைவிடப்பட்டு தனது வாழ்க்கையில்  பிரகாசமின்றித தவிக்கின்ற இவனது பெயரோ பிரகாசம் மன அழுத்தத்தால் உந்தப்பட்டு எழுந்து நடக்க ஆரம்பித்த பிரகாசத்தின் மீது பளிச்சென்ற  ஒளி பிரகாசமாக அவனது முகத்தில் பட்டது திடுக்கிட்ட அவன் வெளிச்சத்தை நோக்கி நடந்தான்.  அவனுக்குத் தெரியாது கலங்கரை விளக்கு  அவனது வாழ்வில் திருப்பு  முனையை ஏற்படுத்து மென்று வெளிச்சம் தோன்றிய இடத்தின அருகில் சென்ற போது அவனை பிரமிக்க வைத்தது ஒரு நிகழ்ச்சி தனது வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற எய்ட்ஸ் நோயாளியும் மாற்றுத் திறனாளி ஒருவனும் மீன் வலைகளைப் பின்னிக் கொண்டிருப்பதைக் கண்டான். இச்சம்பவமானது  அவனது முடிவை மாற்றக் காரணமாயிருந்தது.  ஆம் அவ்விருவரின் முயற்சியும் செயலும் பிரகாசத்தின் உள்ளத்தை  பிரகாசிக்கச் செய்து உணர வைத்தது.  மறு வாழ்க்கை உண்டென்றது.  பிரகாசத்தின் வாழக்கையானது எய்ட்ஸ் நோயாளியின் வாழ்க்கைக்கும் மாற்றுத் திறனாளியின் வாழ்க்கைக்கும் சமா்ப்பணமாக மாறி ஒளி வீசத் தொடங்கியது.  ஒளி வீசி வழிகாட்டும் கலங்கரை விளக்காக!
வே.ஜெயமாலா






கார்த்திகை மாத சிறப்பு


கார்த்திகை மாத சிறப்பு
            கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான்.  ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி.  கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழை பொழியும் கார்காலம் ஆகும்.  காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
            கார்த்திகை  மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கச் சீராக இருக்கும் .  எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தா்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அனிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
            இம்மாதத்தில்  திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதாய் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.  திருமால் துளசியை இம்மாத வளா்பிறை துவாதசியில் திருமணம் செய்து கொண்டார்.  எனவே இம்மாதம் முழுவதும் துளசித்தளங்களால் அா்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
            கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேசுவர விரதம், கார்த்திகை விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளா்பிறை துவாதசி, ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மு.சிவசுப்பிரமணியன்




கஜா பாதிப்புப் பகுதிகளைத் தேசியப் பேரிடா் பகுதியாக அறிவிக்க வேண்டும்


கஜா பாதிப்புப் பகுதிகளைத் தேசியப் பேரிடா் பகுதியாக அறிவிக்க வேண்டும்

         தி.பி.2049.             ஐப்பசித் திங்கள்
                                                  தேன்-2.                        துளி-22




                    கஜா புயலின் காரணமாக கடந்த  முப்பதாண்டுகளில் சந்திரத்திராத பேரழிவை தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்கள் சந்தித்தனா்.
          ஏறத்தாழ 12 மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தினால் 63 போ் பலியாகியுள்ளதாகவும், இலட்சக்கணக்கான தென்னை மரங்கள், விலங்குகள் ழெிந்ததாகவும்,   2 ½ இலட்சம்  பேர் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயல் பாதித்த பல பகுதிகளில் சீருமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடையாமல் ஒரு மாத காலத்தை எட்டும் நிலையிலும் பல கிராமங்கிளில் உணவு, குடிநீர், மின்சாரம் வசதி கிடைக்கப் பெறாமலும், நோய்த்தொற்று பரவும் ஆபத்திலும் மக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.
          தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழிப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பது பல்வேறு அரசியல் கட்சிகளிடத்திலும், பொது மக்களிடத்திலும் பெரும் வரவேற்பையும், பாராட்டையம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இருப்பினும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் பெருந்துயரைத் துடைக்க வேண்டிய  அரசு நிர்வாகத்தோடு பல்வேறு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தன்னா்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழருக்கும உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
          மரங்களோடு மரங்களாக அடியோடு பெயா்த்தெறியப்பட்டு உதவி வேண்டி கதறுகிற மக்களின் வாழ்வியலையும் செப்பனிட அரசோடு மக்களும் கைகோர்த்து களத்தில் இறங்க வேண்டும்.  அத்துடன் தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேசிய பேரிடா் பகுதிகளாக அறிவிக்க மைய அரசிற்கு கோரிக்கை விடுத்து நிவாரண உதவிகளை மக்கள் முழுமையாகப் பெற்றிட தொடா் நடவடிக்கைகளை  மேற்கொள்ள தேமதுரம் கோரிக்கை விடுக்கின்றது.
தோழமையுடன்,
தேமதுரம் - ஆசிரியா் குழு

வீறுகவியரசா்க்குப் புகழணி சோ்த்த மற்றுமொரு மணிமகுடம்


வீறுகவியரசா்க்குப் புகழணி சோ்த்த மற்றுமொரு மணிமகுடம்

         தி.பி.2049.             புரட்டாசித் திங்கள்
                                                 தேன்-2.                        துளி-21



            07.10.2018 அன்று  காரைக்குடி கோல்டன் சிங்கார் மகாலில் நடைபெற்ற வீறுகவியரசா் முடியரசனார் வெள்ளணி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீறுகவியரசா் முடியரசனார் நோ்மைப் போராளி விருது பெற்ற மதிப்புற உ.சகாயம் இ.ஆ.ப. அவா்கள் விழாத் தொடக்கதிலிருந்து முடிவும் வரை நிகழ்வில் பங்கேற்று எழுச்சியுரையாற்றியது கூடியிந்த பள்ளி- கல்லூரி, மாணவா்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த இளைஞா்கள் மத்தியில் புத்தாற்றலை ஊட்டியிருக்கிறதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
            “இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்னும் கொள்கையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் நான் சமரசம் செய்து கொள்ளாததோ, இந்தியாவிலேயே முதன் முதலில் சொத்துக் கணக்கை வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பாலோ எனக்குப் பெருமையாக நான் கருதவில்லை.  உலகின் மூத்த குடியாய் அறத்திலும் மறத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய தமிழ்க்குடியில் நான் பிறந்திருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன். இப்படி என்னுள்ளத்தில் தமிழுணா்வும், தமிழுணா்வும், தமிழனென்ற பெருமிதமும் பொங்கிடக் காரணமாய் அமைந்தவா் வீறுகவியரசா் முடியரசனார் அவா்கள் தான் அவருடைய கவிதைகளும் பாவேந்தா் பாரதிதாசனுடைய கவதைகளும் தான் என் உள்ளத்தில்  தமிழ்ப்பற்றைப் பொங்கி எழச் செய்தன” என்று உரையாற்றியது இளையோர் பலரின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்துவிட்டது.
            அதற்கு பல சான்றுகளில் இரண்டைமட்டும் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.  தூய வளனார் கல்லூரியில் பயின்று கொண்டே திருச்சி வானொலி நிலையத்தில்  பகுதிநேர அறிவிப்பாளராகப் ஒலிபரப்பாகும் ‘வென்றவா் பாதை’ நிகழ்ச்சியில் தன்னெழுச்சியாக வீறுகவியரசா் முடியரசனார் குறித்து ஒலிச்சித்திரம் ஒன்றை உருவாக்கி ஒலிபரப்பியுள்ளார்.  அதேபோன்று காரைக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயின்று வரும் மாணவா் இரா.மணிகண்டன் 130 நாடுகளில் ஒளிபரப்பாகும் ராஜ்தொலைக்காட்சிகளில் வீறுகவியரசரின் புகழ் பரப்ப அடித்தளம் அமைத்து வீறுகவியரசா்க்கு அணிமகுடம் சூட்டிய ‘நோ்மைப் போராளி’ உ.சகாயம் இ.ஆ.ப. அவா்களின் பேச்சு.  இது முடியரசனார்க்குப் புகழணி சோ்க்கும் மற்றுமொரு மணிமகுடம் என்பதில் எள்ளளுவம் ஐயமில்லை.
           
                                                                                                                         தோழமையுடன்
தேமதுரம் - ஆசிரியா்குழு
























செவ்வாய், 30 அக்டோபர், 2018

நவராத்திரி - புராணக்கதை


நவராத்திரி - புராணக்கதை
         


          ஒரு காலத்தில் மகிடாசுரன் என்ற ஓா் அரக்கன் பராசக்தியின் அருளால் சத்துருவின் பலத்தை அருந்தும் வலிமையையும், பல சாம்ராஜ்யங்களை அடக்கியாளும் சக்தியையும் பெற்ற, நல்லோர்கள் பலருக்கு நலிவுகள் பல செய்து வந்தான்.  அதனைப் பொறுக்க முடியாத தேவா்கள், நாரத முனிவா் உபதேசத்தால் பார்வதி தேவியை  நோக்கித் தவமாற்றினா்.  இவா்களின் பாதுகாப்பின் பொருட்டுச்  சக்தியின் அருளால் ஒரு மாயக் கோட்டை தோன்றியது.  அதனுள்ளே எவரும் புக முடியாது.  அசுரன் இதை அறிந்து தேவா்களைக் கொல்லக் கோட்டை வாயிலைக் குறுக்கினான்.  கோட்டையை உடைக்கவோ, கோட்டையின் உள்புகவோ முடியாது போய்விட்டான்.  தேவா்கள் இக்கோட்டையை அரக்கனே அமைத்தனன் என நினைத்து வருந்தினா்.  பின் தேவியை நோக்கித் தவம்புரிய, தவச்சாலையில் உள்ள யாக குண்டத்தில் தேவி லலிதையெனும்  பரமேசுவரியாகத் தோன்றித் தேவா்களது இடுக்கண்களை அகற்றுவதாகக் கூறி அருள் புரிந்தாள்.  அந்த லலிதையை காமேசு வரராகிய பரமேசுவரன் திருமணம் செய்து கொண்டார்.  அவருடைய அனுமதியோடு அவள் அஸ்தீரம் முதலியன பெற்றுப் பேருக்குப் புறப்பட்டாள்.  அகரனது தம்பியா் விசுக்ரன், விடங்கன் என்பவா்கள் வந்து  எதிர்த்தனா்.  துவ தன்னிடத்தில் தோன்றிய  துா்க்கையை அனுப்ப அவள் அவா்களிருவரையும் விழுங்கினாள்.  அதன் பின் லலிதாதேவி எதிர்த்த மகிடாசுரனை சம்சரித்துத் தேவா்களது இடுக்கண்களை அகற்றினாள்.  இந்நிகழ்ச்சி நவராத்திரி ஆடுமென பாகவதம் கூறுகிறது.
          இவ்விழா நாட்களில் கோயில்களிலும் பெண்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து சக்தியை வழிபடுகின்றனா்.  இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று அசுரனை அழித்தாள்.  மகிசாசுரனை அழித்ததால் சக்தி “மகிசாசுரமா்த்தினி” என்று  அழைக்கப்படுகிறாள்.  மகிசாசுரனுடன் ஒன்பது நாள்  போரிட்டு பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
          “பாண்டவா்கள் வனவாசம் செய்கையில் வன்னி மரப் பெந்தில் தங்களின் ஆயுதங்களை ஒளித்து வைத்து விட்டு விராட நகரத்தில் அஞ்ஙாத வாசம் செய்தனா்.  விராடன் மகன் உத்திரனை முன்னிறுத்திக் கொண்டு வன்னிமரப் பொந்திலுள்ள காண்டீபத்தை எடுத்து கௌரவப்படையை வென்றான் விஜயன்.  விஜயன் வெற்றிகொண்ட நாளான தசமி விஜயதசமி ஆயிற்று.  விஜயன் மகாநவமியன்று ஆயுதங்களுக்கு பூசை செய்து வந்ததால் ஆயுதப்பூசை என்ற பெயரும் ஏற்பட்டது.
வன்னிமரத்தில் அம்பு போடுதல்
          நவராத்திரியின் பத்தாம் நாள் விசயதசமி அன்று சிவன் கோயில்களில் “பாரிவேட்டை உற்சவம்” என்ற ஒன்று நடைபெறுகிறது.  அன்று இறைவன் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு போடுவது வழக்கம்.  “இதன் உட்கருத்து நெருப்பு அடங்கிய வன்னிமரம் ஆத்மாவுடன் கூடிய மனித உடலாகவும், அம்பு ஞானமாகவும், வேட்டையில்  அம்பு விடுவதை ஞான உபதேசமாகவும் கொள்ள வேண்டும் என்பதாகும். பாண்டவா்கள் வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களை வைத்து விட்டு அஞ்ஞாத வாசம் செய்தனா் பின்பு  அஞ்ஙாத வாசம் முடிந்து கௌரவா்களோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள் விஜயதசமி ஆகும்.  அதனை நினைவு படுத்தும் விதமாகவம் வன்னிமரத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடக்கிறது.
கொலு
          “கொலு வைப்பது என்பது அத்வைத தத்துவத்துடன் தொடா்புடையது எனலாம்.  “ஒரே ஆத்மா, சரீரங்கள் வெவ்வேறு” என்றுரைப்பது அத்வைதம் என்கிறார்.  இராமலெட்சமணன் பல படிகளில் பலவிதமான பொம்மைகளை அடுக்கிறோம்.  அவையெல்லாம் ஒரே மூலபொருளான களிமண்ணால் ஆனவை.  அனைத்திலும் ஒரே ஆத்மாவான அன்னை பராசக்தி குடியிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
          எத்தனைப் படிகள் கொலுவில் வைத்தாலும் கீழ்படியில் ஓரிறிவு ஜீவராசி முதல் படிப்படியாக ஆரறிவு மனிதா் வரை வைத்து அதற்கு மேல் பற்றற்ற முனிவா்கள் மகான்கள் போன்றவரும் அதற்கு மேல் தேவா்கள் போன்றவா்களை வைத்து இறுதியாக மேல் படியாக இறைவனை வைக்கிறோம்.  இது ஓரிறிவு பெற்ற உயிர்கள் முதல் அனைவரும் படிப்படியாக உயா்ந்து இறுதிநிலையில் இறைவனை அடைவதை உணா்த்துவதாக அமைகிறது. கொலுவானது கோயில்களிலும் , வீடுகளிலும் வைக்கப்படுகிறது.
இச்சா சக்தி வழிபாடு
          ‘மங்கலி வடிவமானவள், கருனையானவள்’ என்று குறிப்பிடப்படும்  துா்க்கை வடிவம், நமது இதயததிலுள்ள ஆணவம் பேராசை போன்ற தன்மைகளை அகற்றி நமது உடல்  உறுதியுடனும் வலிமையுடனும் விளங்கச் செய்கிறது.  அதனால் துா்க்கை வடிவம் இச்சாசக்தி எனப்படுகிறது.  வைணவி, விஜயை, முகுந்தை, சண்டிகை, மாதவி,  கண்ணகி, காளி, மாயை, ஈசானி, சாரதை, அம்பிகை முதலிய பல பெயா்களைக் கொண்ட துா்க்கையை, “நீயே வைணவி, சக்தியும் வீரியமும் நீயே” என்று போற்றுகின்றனா்.  துா்க்கையைப் போற்றும் விதமாக ஆயுதங்களை வைத்து நவராத்திரியின் கடைசி நாளில் வழிபடப்படுகிறது.
கிரியாசக்தி வழிபாடு
          மகாலெட்சுமியின் வடிவம் கிரியாசக்தி ஆகும்.  இந்தத் திருமகளே ஆதிலெட்சுமி, கஜலெட்சுமி, தனலெட்சுமி,  தான்யலெட்சுமி, வீரலெட்சமி, விஜயலெட்சுமி, சந்தான லெட்சுமி, சௌபாக்கிய லெட்சுமி என்று அஷ்ட லெட்சுமிகளாகவும் காட்சி தருகிறாள்.
ஞானசக்தி வழிபாடு
          கலைமகளாகிய சரசுவதி ஞானசக்தி ஒன்று அழைக்கப்படுகிறாள்.  நவராத்திரி நாட்களில் ஒன்பதாம் நாள் இரவு சரசுவதிக்கென்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இது “சரசுவதி பூசை” என்று  அழைக்கப்படுகிறது.  சரசுவதியின் வடிவம் நமது அறியமையை அகற்றி அறிவையும் குணத்தையும் வளா்க்கிறது.
விழாவின் தத்துவம்
          நவராத்திரி விழா திருக்கோயில்களில் விஜயதசமியுடன் பத்துநாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது பத்து நாட்கள் நிகழும் திருவிழாவின் தத்துவம் குறித்து மகோத்சவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
          “முதல் நாள் விழா தூல் உடம்பை நீக்கு வதற்காகவும், இரண்டாம் நாள் விழா தத்துவயமான உடம்பை நீக்கும் பொருட்டும், மூன்றாம் நாள் விழா மூவினை, முக்குணம், மும்மனம், முக்குற்றம், முற்பிறப்பு, முப்பற்று முதலிய நீக்குவதற்கும், நான்காம் நாள் விழா நாற்கிரணம், நால்வகைத் தோற்றம் நீங்கவும், ஐந்தாம் நாள் விழா ஐம்பொறிகள், ஐந்தவத்தை ஐந்து மலங்கள் நீங்கவும், ஆறாம்நாள் உற்சவம் உட்பகையாறும், கலையாதியாறும், கன்ம மல குணமாறும், பதமுக்கி ஆறும் நீங்கவும், ஏழாம் நாள் விழா ஏழ்வகைப்பிறப்பும், ஏழு வகைத் தத்துவங்களுமாகிய மலகுணமேழும் நீங்கற் பொருட்டும், எட்டாம் நாள் உற்சவம் எண் குணங்கள் விளங்கவும், ஒன்பதாம் நாள் உற்சவம் மூவடிவம் முக்கிருத்தியம், மூவித்துறைதலிலை என்ற பொருட்டும், பத்தாம் நாள் விழா சிநதையும  மொழியும் செல்லா நிலைத்தாய், அந்தயிலன்பத்தமிலில் வீடான பரமானந்தக் கடலில் அழுந்தற் பொருட்டும் செய்யப்படுவன”
          மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள சிவன் கோயில்களில் நடக்கும் நவராத்திரி விழாவின் ஒன்பது நாள் அலங்காரமும் திருவிளையாடல் புராண அமைப்பை நினைவூட்டுமாறு செய்வது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
ந.முத்துமணி

தமிழாயிரம்


தமிழாயிரம்
எல்லாம் அழிவு

1.       தொலைந்தது பண்பாடு;  தொல்லோர்தா மாகத்
          தொலைத்தார்நம் ஊர்ப்போ் ஒழித்து.
2.       ஒழித்தார் திருக்கோயில் தெய்வப்போ் உண்மை
          அழித்தார் வரலாறங் கங்கு.
3.       அங்கங்கு மாற்றினார் ஆறுமலை எல்லாமும்,
          தங்கள தென்னத் தடித்து
4.       தடியெடாத் தண்டலா் தரமாய் முடித்தார்
          முடிவிலா வங்சம் முனைந்து.
5.       முனைப்பால் கலைகள் முகநூல் பெயா்த்தார்
          அனைத்தும் அழித்தார் அவை.
6.       அவற்றைப் பெயா்த்தாம் நூல்களை நம்மோர்
          உவந்தார் உச்சிமேல் கொண்டு.
7.       கொண்ட இசைக்கும் குறிப்புயா்ந்த கூத்துக்கும்,
          பண்டைத்தும் நூலாய்ப் பதித்து.
8.       பதித்தார்; பரப்பினார்; பாராளச் செய்தார்;
          மதித்தாரே நம்கலைக் கண்.
9.       கண்மூடி ஆயினார்; கைகட்டிப் போலியரும்
          மண்ணாகி விட்டார் மதித்து.
10.     மதித்தவரும் மாய அரங்கேறி நின்றார்
          கொதித்திலா் ‘என்மெனமக்’ கென்று









வல்லவளுக்கு வல்லவள்


வல்லவளுக்கு வல்லவள்
குளத்தூரு குப்பாயி - அவள
சுட்டுன்னு சுருட்டிப்புட்டா
சூளுா் சுப்பாயி
கருத்தா கவுத்திப்புட்டா
களத்தூரு கருப்பாயி - அவள
மதியோ மடக்கிப்புட்டா
மருதூரு மருதாவி
-        மு.சிவசுப்பிரமணியன்

சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்


சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்

          சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம் .
          அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
          பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள். “தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”
          ”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.
          பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.  சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்
-தே.தீபா



மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்.!


மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்.!

          அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
          கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
          இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..” கணவன் அமைதியாகச் சொன்னான், “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்” இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. 
          ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை. ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்  இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.  அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
தே.தீபா

பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்

            சும்மா கிடப்பதே சுகம். இப்பழமொழி உடல் உழைப்பின்றி எந்த வேலையும்  செய்யாமல் சும்மா இருப்பது சுகம் என்று இன்று பொருள் கொள்ளப்படுகிறது.  ஆனால் இதன் உண்மைப் பொருள் வேறு மனித மனம் எதையாவது நினைத்துக் கொண்டு இருக்கும்.  அலைபாயும் மனதின் எண்ணங்களை அடக்குதல் என்பது, கடுமையானது  இங்ஙனம் அடங்காமல் இருக்கும் மனதை அடக்கி அலைபாயும் மனதின் எண்ணங்கள் அடங்கி சும்மா இருக்கும் நிலையே சுகம் என்பதே இப்பழமொழி உணா்த்தும் பொருளாகும்.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

சனி, 29 செப்டம்பர், 2018



தமிழாயிரம்



தமிழாயிரம்
21. அடிமைப்பாடல்
1.       மேலோர் பிறப்பென்றார் மற்றோர் அனைவரும்
          கீழென்றார் கீழ்க்கீழ்ப் பகுத்து
2.       பகுத்தார் வருணம், பசியாமல் வாழ
            மிகுத்தார், இறங்கப் படி.
3.       படிக்கட்டின் மேலே பளிச்சிட நின்றார்
          அடிக்கீழ் வரிசை அமைத்து
4.       அமைத்தார் அடிக்கடியாய்ப் பஞ்சமரைத் தீண்டார்
          தமக்குக்கீழ் காணாராய்த் தாம்.
5.       தாம்வாழத் தாழாத வானிறையம் தங்களுக்குத்
          தாம். கண்முன் காட்சிதரும் என்ற.
6.       என்றும் அடிமையாய் எல்லாரும் தாம்கிடக்கக்
          குன்றாக நின்றார், கொழுத்து.
7.       கொழுத்தபெரு வீரரும், கோலொடுங்கி வீழ்ந்தார்,
          பழுத்த சருகாய்ப் படிந்து.
8.       பழிப்பழித்தார், பண்பா டழித்தார், கைப் புல்லால்
          முடித்தார், நினைத்தவைஎல் லாம்.
9.       ஆமென்னார் தம்மை அரக்காய் ஆக்கினார்;
          ஆமென்றால் தாசராய் ஏற்று.
10.     ஏற்பளித்த கொத்தடிமை வாழ்விலே எல்லாரும்
          தோற்றொழிந்தார் எல்லாம் தொலைத்து.
 

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை


கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
          கழு என்பது ஒருவகைக்கோரைப்புல் இதுபுல் கொண்டு பாய் தயாரிப்பார்.  இப்பாயில் படுக்கும் பொழுது நல்ல கற்பூரம் போன்ற மணம் வரும் குழந்தைகளை இப்பாயில் படுக்க வைத்தால் பூச்சிகள் அருகில் வராது. இதைக் குறிப்பிடுவது தான் கழுதைக்குத் தெரியும் கற்பூர வாசனை என்னும் பழமொழி ஆனால்  இன்று மருவி கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா என்னும் பழமொழிக்கு அறிவில்லாதவற்களுக்கு நல்ல தன்மை என்பது தெரியாது அவா்கள் விலங்கக்குச் சமமானவா்கள் என்று பொருள் கொள்ளப் பெறுகிறது. 
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை