சனி, 14 அக்டோபர், 2017

கல்விக் கொடை வள்ளல் அழகப்பா்

                                                  கல்விக் கொடை வள்ளல் அழகப்பா்
முன்னுரை
          வள்ளல்கள் பலா் வாழ்ந்து பெருமை சேர்த்த நாடு நம் தமிழ்நாடு.  கடையெழு வள்ளல்கள் குறித்து தமிழக வரலாறு பேசும்.  ஆனால் அவா்கள் அனைவரும் பொருளைக் கொடையாகக் கொடுத்து வரலாறாய் வாழ்ந்தவா்கள்.  அனால் கல்விக்காகக் கொடை கொடுத்த வள்ளல் எனில் அது அழகப்பா் மட்டுமே.  அழகப்பாரின் கல்விக் கொடைகளை எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
காரைக்குடியைக் கல்விகுடியாக்கிய பெருந்தகை
          காரைப்புதா்கள் மண்டிக் கிடந்த காரைக்குடியை ‘கல்விக்குக் காரைக்குடி’ என  யாவரும் புகழ்ந்து பேசும் சிறப்புக்குரியதாய் மாற்றிய பெருமை வள்ளல் அழகப்பரையே சாரும்.  1947-இல் அழகப்பா் கலைக்கல்லூரியைத் தெடங்கியதிலிருந்து 1957-இல் தம் வாழ்நாளில் இறுதி வரை ஆண்டுதோறும் ஏதாவதொரு புதிய கல்விக்கூடமோ, கட்டடமோ திறப்பு விழாக் கண்ட வண்ணம் செயற்கரிய செய்தவா்.
அழகப்பா அரசு கலைக்கல்லூரி தோற்றம்
          1947-இல் அன்னிபெசண்ட அம்மையார் நூற்றாண்டு விழாவில் தலைமையேற்ற துணைவேந்தா் ஏ.எல் முதலியாரின் வேண்டுகோளை ஏற்று அழகப்பா் 15.08.1947 இல் காரைக்குடியில் அழகப்பா் அரசு கலைக்கல்லூரியைத் துவக்கினார்.  அழகப்பரின் இந்த முதல் முயற்சிதான் இன்று பல்துறைகளாகப் பரந்து விரிந்திருக்கும் அழகப்பா பல்கலைக்கழகம் தோன்ற அடிப்படையாகும்.

மத்திய மின் வேதியியல் மையம் தோற்றம்
          அழகப்பா் காரைக்குடியில் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவ ஆவல் கொண்டார்.  இவ்வாய்வுக் கூடத்தை நிறுவுவதற்காக வள்ளல் அழகப்பா் 15 இலட்சம் ரூபாயும், 300 ஏக்கா் நிலமும் கொடுத்து 1948-ஆம் ஆண்டு பாரதப் பிரதமா் ஜவஹர்லால் நேரு அவா்களைக் கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அழகப்பரின் கல்விப்பணிகள்
v 1948 இல் சென்னையில் இராமானுஜம் கணித நிலையத்தைத் துவக்கி, பின்னா் இந்நிலையம் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
v 1949-இல் விளையாட்டிற்கென பவநகா் அரங்கினை உருவாக்கினார்.
v 1950-இல் அழகப்பா ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டது.
v 1951-இல் மாதிரி உயா்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
v 1952-இல் அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
v 1954-இல் அழகப்பா கல்லூரியில் தனிக் கட்டடத்தில் நூலகம் அமைக்கப்பட்டது.
v 1954-இல் அழகப்பா மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது.
v 1955-இல் அழகப்பா அடிப்படைப் பள்ளி, ஆதாரப்பள்ளி, மழலையா் பள்ளி, போன்றவை துவங்கப்பட்டன.
v 1955-இல் பல்தொழில் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது.
v 1956-இல் அழகப்பா இசைப்பள்ளியும் அழகப்ப செட்டியார் உடற்பயிற்சிக் கல்லூரியும் திறக்கப்பட்டன.

பிற கல்விப்பணிகள்
          ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை நன்குணா்ந்தவா் வள்ளல் அழகப்பா். அதனால்தான் தன் கல்விக்கூடங்கள்மட்டுமின்றி பிற ஊா்களிலும், பிற மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் அமைக்க கொடை கொடுத்துள்ளார்.
v அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியில் கல்லூரி ஆரம்பிக்க ஐந்து லட்சரூபாய்.
v சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க ஐந்து லட்சம் ரூபாய்.
v திருவிதாங்கூா்  பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கட்டில் ஆரம்பிக்க லட்ச ரூபாய்.
v தக்கா் பாபா வித்யாலயத்தில் மண்டபம் கட்ட லட்ச ரூபாய் என அழகப்பரின் கொடைப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
          மகளிருக்கு என தனிக்கல்லூரி அமைக்க விரும்பிய வள்ளல் கோட்டையூரில் தான் வாழ்ந்து வந்த இல்லமான ‘ஸ்ரீ நிவாஸ் இல்லத்தை’ வழங்கினார்.  இதனால் அழகப்பரை,
                    ‘கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
                  வீடும் கொடுத்த விழுத்தெய்வம்’
என வ.சுப.மா.  அவா்கள் பாராட்டினார்.
நோயற்ற போதும் கொடுத்துதவிய வள்ளல்
          அழகப்பா் உடல் நலிவுற்று நிதி நெருக்கடியில் இருப்பதை அறிந்த கருமுத்து தியாகராசனார் ரூபாய் பத்தாயிரம் அனுப்பி வைத்தார்.  சிறிது நாளில் அழகப்பரைச் சந்தித்த தியாகராசனார், ‘மருத்துவம் பார்த்துக் கொண்டீர்களா? என்று வினவிய பொழுது படுக்கையில் இருந்தபடியே அழகப்பா் ‘ஆயத்தப் பள்ளிக் ரூபாய் பத்தாயிரம் தருவதாக முன்பு கூறியிருந்தேன்.  அத்தொகையை பள்ளிக்கி வழங்கிவிட்டேன்’ என்று கூறினாராம். இப்படி நோயுற்றுப் படுக்கயைில் இருந்த பொழுதும் கல்விக்காகக் கொடை கொடுத்த வள்ளல் அழகப்பா்.
கவிஞா் போற்றிய  கல்விக்கொடைஞன்
          கல்விக்காக தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்த வள்ளல் அழகப்பரை,
          ‘சங்கநிதி பதுமநிதிச் செல்வனானாய்
         சலியாமல் ஈந்து பெரும் வள்ளலானாய்
         மங்கலஞ்சேர் கல்விநெறி தலைவனானாய்’
என கவிஞா் அரு.சோமசுந்த் அவா்களுக்கும்,
          ‘கல்வி வளா்க்கும் காவலனாம் - தமிழ்க்
         கற்பகமாம் செயல் அற்புதமாம்’
எனக் கவிஞா் கூத்தரசன் அவா்களும் பாராட்டியுள்ளார்.
அடிப்படை கல்வி முதல் ஆராயச்சி கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழுமுதற் காரணம் வள்ளல் அழகப்பார்.  அழகப்பரின் பெருமைகளைப் பக்கம் பக்கமாய் எழுதினாலும் தீராது.  முடியரசன் அவா்கள் கவிதை ஒன்றே போதும்.
          ‘அள்ளி அள்ளி வழங்குவதற்குக் கையை ஈந்தான்
          அழகாகப் போசுதற்கு வாயை ஈந்தான்
          உள்ளம் எனும் ஒரு பொருளை உரத்துக்கு ஈந்தான்
          உடம்பினையும் கொடுத்நோய்க்கே ஈந்தோன் அந்தோ!
          வெள்ளம் என வருநிதியம், வாழும் வீடு
          வினைமுயற்சி அத்தனையும் கல்விக்கு ஈந்தான்
          உள்ளது என ஒன்றில்லை அந்தப் போதும்
          உயிர் உளதே கொள்க எனச் சாவுக்கு ஈந்தான்
முடியரசனாரின் இக்கவிதைகள் வரிகள் கல்விக்கொடை வள்ளல் அழகப்பரின் பெருமைகளை  ஓங்கி உரைத்துப் பறை சாற்றுகின்றன.
முடிவுரை
          காரைக்குடியை கல்விக் குடியாக்கிய பெருமைக்குரியவா் வள்ளல் அழகப்பா்.  கல்விக்காக தன் செல்வம் அனைத்தையும் ஈந்ததோடு, தான் வாழ்ந்த வீட்டையும் கொடுத்த உயா் சான்றோர்.  அவா் வாழ்ந்த  காரைக்குடி மண்ணில் நாழும் வாழ்வது நாம் செய்த தவப்பேறு.  அவா் உருவாக்கித் தந்த பல்கலையில் கல்வி கற்பதும் நாம் பெற்ற பெரும் பயனே!
கா.சுபா
         

வெள்ளி, 13 அக்டோபர், 2017

தீபஒளித் திருநாள்

தலையங்கம்


தி.பி.2048 (கி.பி.2017) ஐப்பசித்  திங்கள்

தேன் - 1                                                         துளி-10
தீபஒளித் திருநாள்



            இந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள் சமய அடிப்படையிலும் ஏனைய தமிழா்கள் காலாச்சார அடிப்படையிலும் கொண்டாடப்படும் பெருவிழா தீபஒளித்திருநாளாகும்.  இப்பண்டிகையானது ஐப்பசி மாதத்தில் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.  தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன் தினம் நகர சதுர்த்தசி அன்று கொண்டாடுகின்றோம்.  பெரும்பாலான ஆண்டுகளில் இவ்விழாவானது ஐப்பசி மாதத்திலே வரும்.  கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபா் மாதம் 17 லிருந்து நவம்பா் மாதம் 15-ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகின்றது.  திருமாலின் கிருட்டிணன் அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை நரகாசுரனின் இறுதி விருப்பப்படி அவன் இறந்த தினத்தினை தீபஒளித் திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்.
            இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூா், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணா்களும் கூட  இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்கான கொண்டாடுகின்றனா்.  மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழா்கள் இத்திருநாளினை கோலாகலாமாகக் கொண்டாடுகின்றார்கள்.
            தீபாவளி எனப் பெயர் பெறக் காரணம், ‘தீபம்’ என்றால் ஒளி விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை வரிசையால் விளக்கேற்று, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி என்பதாகும்.  தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் மக்கள் நம்பிக்கை ஆகும்.  ஒவ்வொருவா் மனதிலும் இருள் உள்ளது அகங்காரம், பெறாமை, தலைக்கணம் போன்ற இருளினை அவ்விளக்கினில் ஏற்றி எரித்திட வேண்டும்.
            தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றா்.  கிருட்டிணன் நரகாசுரன் என்னும் அரக்கனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் மென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தீபாவளி மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
            ஸ்கந்த புராணத்தல் படி, சக்தியின் 21நாள் கேதாரகௌசி விரம் முடிவுற்றது இத்தினத்தில் தான் விரதம் முடிவடைந்த பின்னா், சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்த நாரீஸ்வரர், உருவமெடுத்தார்.  நமக்குள் இருக்கக் கூடிய இறைவன் சோதி வடிவாக நம்முள் இருக்கிறான் இந்த சோதிவடிவான இறைவன் வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும்.
            1577-ல் இத்தினத்தில் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் தீபாவளி திருநாளில் கொண்டாடுகின்றனா்.  மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து தீபாவளி தினத்தைச் சமணா்கள் கொண்டாடுகின்றனா்.
            மேற்கு நாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  மற்ற இந்து விழாக்கள் போலல்லாது அனைத்து இந்து மக்களும் ஏதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது  இங்கு இது ‘Festival of Lights’  என்று அறியப்படுகின்றது.  தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது
            இத்தீப ஒளித் திருநாளில் நமக்கு  வருகின்ற அனைத்து துன்பங்களையும் தீபத்தில் ஏற்றி எரித்து விட்டு இன்பமாக வாழ்வோம்! இந்த வருடத்தில் இருந்து தேமதுரக்குழுவும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் உங்களோடு கைகோற்கிறது  எங்கள் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மைய ஆசிரியா் குழு.  அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்..
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              தோழமையுடன் ,
தேமதுரம் ஆசிரியா்குழு,

ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
தீபா 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3.

வியாழன், 12 அக்டோபர், 2017

தற்கொலையைக் கொலை செய்யுங்கள்

தற்கொலையைக் கொலை செய்யுங்கள்
            ‘எதையாவது செய்து கொண்டு எப்படியாவது செத்துவிட வேண்டும்’ என்ற விரக்தியின் உச்சத்திலிருந்த தவசீலனுக்கு தற்கொலைவெறி தலைக்குள் எகிறிக் கொண்டிருந்தது.
            தன்னுடன் படித்தவா்களெல்லோரும்  நிரந்த வேலை கிடைத்து.  திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளுடன் காரில் உலா வரும்பொழுது தான் மட்டும் தன்னந்தனியாய் வேலையில்லாமல் திரியும் வேதனையை தவசீலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பூமிக்கு பாரமாய் சாமிக்குத் தூரமாய் இருக்கும் ஒரு வாழ்க்கை வேண்டவே வேண்டாமென்று தீர்க்கமாய் முடிவெடுத்துவிட்டான்.   தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தாகிவிட்டது.  ஆனால் எங்கே? எப்படி?  என்பது தான் தெரியவில்லை.  விஷமா? தூக்கா? தண்டவாளமா? தீக்குளிப்பா? இல்லை.. ‘ப்ளுவேல் விளையாட்டா? எந்த முடிவிற்கும் வர முடியாமல் கூகுளிடமே கேட்டுவிடலாமென்று  தற்கொலைச் என்று தட்டச்சிடும் போதே ‘தற்கொலை செய்து கொள்வது எப்படி?, தற்கொலை செய்ய எளிய வழிகள், தற்கொலை செய்வது எப்படி?  என்னும் கேள்விகள் திரையில் பளிச்சிட்டது.  ‘அடப்பாவிங்களா,  மேல அனுப்பி வைக்குறதுல ரொம்ப விசுவரூபமெடுத்து தவசீலனை விழுங்க ஆரம்பித்தது.  அறைக்கதவு உள்ளே தாளிட்டிருந்ததால் உதவிக்குக் கூப்பிடவும் வழியில்லை.  கனவா? நிஜமா? தான் தொண்டை கிழிய கத்தி அலறுவுது தன் காதுகளுகு்கே கேட்கவில்லையே.. இதென்ன விபரீதம்? இப்படியும் நடக்குமா? விதிர்விதிர்த்து உடல் நடுநடுங்கும்போது கணினி முழுதாய் விழுங்கி தானிருந்த அறை முழுக்க மறைந்து போய், வேறொரு உலகிற்குள் புகுந்தது போலிருந்தது.  ஒருவேளை.. அதிர்ச்சியிலே செத்துப்போய் விட்டோமோ? இது சொர்ககமா?  நரகமா? அவசரப்பட்டு சாவை அழைத்துவிட்டோமோ?  நாம் மட்டுமா வேலையில்லாமலிருக்கிறோம்? இலட்சோப இலட்சம் பேர் வேலையில்லாமலிருக்கிறார்கள்.. அவா்களெல்லோரும் தற்கொலை முடிவையா எடுத்தார்கள்? தற்கொலை செய்து கொண்டவா்களெல்லோரும் இங்குதானிருப்பார்களோ?  கனவிலும் இதுவரை பார்த்திராத வேற்று கிரகத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருக்கிறதே.. ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் தவசீலன்.
            கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தவன் எதிரே ‘தற்கொடைப் போராளிகள்’ என்ற பலகை தென்பட்டது.  தற்கொலைப் பேராளிகள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இதென்ன தற்கொடைப் போராளிகள் தன்னையே உயிர்த்தியாகம் செய்து சமூகத்திற்காய் உயிரிழந்ததால் இப்படி எழுதியிருப்பார்களோ?  உள்ளே போகலமா? வேண்டாமா? யோசிப்பதற்குள் கதவு திறந்து உள்ளே அவனை  இழுத்துக் கொண்டு ஒரு கை, நினைத்தது போலவே தற்கொடைப் பேராளிகள் கூட்டமாய்க் குழுமியிருந்தார்கள், வேலுநாச்சியார்க்கு வெற்றி ஈட்டித்தர ஆங்கிலேயரின் ஆயுதக்கிட்டங்கியை உருத்தெரியாமல் அழித்த ‘குயிலி’ மொழிப் பேராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்விட்ட சிவகங்கை இராசேந்திரன்  வந்தான், ‘ஐயா.. நீங்க எங்க ஊர்க்காரர்தானே..’ என்று கேட்டான்.  ‘ஐயா.. சாமிகளா.. சாதியையம், ஊரையும், உறவையும் சொல்லி உரிமை பாராட்டாதீங்க.. ‘நாம் தமிழா்’னு சொல்லுங்க.. அதுபோதும்.. என்றார் சிவகங்கை இராசேந்திரன் குயிலியின் கோபம் இப்பொழுது புரிந்தது.  ‘எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் தாய்மொழியிடம் பற்றுக் கொள்ள வேண்டும்.  ‘மொழி பல கற்கச் செல்லுங்கள்.  ஆனால் முத்தமிழ் உயிராச் சொல்லுங்கள்’ என்ற வீறுகவியரசர் முடியரசனாரின் வரிகளை நெஞ்சில் நிறுத்தாமல் மொழியில் அரசியலைக் கலந்து விட்டார்கள்’ என்றார் இராசேந்திரன்.
            ‘பெரும்பாவிகள் வெளியேயும், அப்பாவிகள் உள்ளேயும் இருக்கிறார்கள்’ என்று வேதனைப் பட்டார்  செங்கொடி.
            ‘அரசியல் வாதிகளுக்கு ரூபாய் நோட்டின் மீதிருக்கும் கவனம், மட்டும்தான் தொடா்ந்து பேராடுகிறார்.  தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய கவனம் கேரள ஜிமிக்கி, கம்மலின் மீது படிந்திருக்கிறது’  கிண்டலாய்ச் சிரித்தார் ஐயா சசிபெருமாள்.
            அடுத்து நின்ற முத்துக்குமார் ‘போல டாக்டா்கள், போலி சாமியார்கள் வரிசையில்  போலி போராளிகளும் பெருகிவிட்டார்கள், விதவிதமாய் செல்ஃபி எடுத்து போட்டுக் கொள்ளும் ஆடியோவிலும் வீடியோவிலும் சமூக ஊடகங்களில் அக்கறை இருப்பதாய்க் காட்டிக் கொள்ளும் நடிகர்களும், அரசியல்வாதிகளும் போராட்டக்களங்களில், பொதுவிடங்களில் விளம்பரம் தேடி அலைந்து திரிகிறார்கள்  உள்ளுக்குள் சுருக்கென்று தைத்தது போலிருந்தது சாவதற்கு ஆயிரம் வழிகளைக் தேடிய நீங்கள் வாழ்வதற்கு நூறு முறையாவது முயன்றிருக்கலாமே.. இந்தக் கவிதையை வாசிக்கிறேன்கேளுங்கள், சிறகொடிந்த பின்னும் வாழத்துடிக்கின்றன. ஈயும், கொசுவும்.. மனதொடிந்த பின்ன மாளத் துடிக்கிறான் மனிதன், தேனெடுக்க ஓராயிரம்  மலா்கள் செல்லும் தேனீ.. ஒரு முறை தோற்றதுமே ஓயாது புலம்புகிறான் இளைஞன்.  உயா்திணை எது? அஃறிணை யார்? படிப்படியாய் பயிற்சியும் முடங்கிவிடா முயற்சியும் முன்னேற்றத்தின் முதுகெலும்பென்று முதலில் நம்புங்கள், இனியேனும் தற்கொலையைக் ‘கொலை’ செய்யுங்கள் தன்னம்பிக்கைக்கு ‘சிலை’ செய்யுங்கள்.  முயற்சியைக் ‘கொள்ளை’ அடியுங்கள், மூளைக்கு ‘வெள்ளை’ அடியுங்கள், இந்தாங்க.. இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் தொடா்ந்து படியுங்கள் புத்தா் திருத்தாதவற்றைக் கூட புத்தகம் திருத்திவிடும் என்று  சொல்லி ‘உளிகள் வடித்த துளிகள்’ என்னும் புத்தகத்தை நீட்டினான் அனிதா.  கூட்டத்திலிருந்து வெளிவந்த வினுப்ரியா அடுத்தவா் அழுகையை இரசிக்கம் மனிதக் காட்டேரிகளுக்குப் பயந்து விலைமதிப்பில்லா என்னுயிரை விட்டுவிட்டேனென்று குற்ற உணா்வு ஒவ்வொரு நொடியும் வாட்டுகிறது, அநீதியை எதிர்த்தொழிக்கத் துணியாத கோழை என்றல்லவா என்னை ஊா் பேசும் என்று வருத்தப்பட்டார்.
            “நான் தப்பு பண்ணிட்டேன், என்னை அனுப்பிடுங்க.. நான் வாழனும், வாழனும்..” கண்ணீர் விட்டுக் கதறினான் தவசீலன்.
            இமைச்சமாதிகளை உடைத்துக் கொண்டு பார்வை உயிர்த்தெழுந்தது, வழித்தெழுந்தபின் தான் கனவென்று தெரிந்தது, உயிரின் உன்னதம் புரிந்தது,
            எங்கிருந்தோ வந்த திரையிசைப்பாடல் காற்றிலே கலந்து காதுகளைக் தீண்டியது, ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை  பூமியில்
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


அறம் சார்ந்த பண்பாடு

அறம் சார்ந்த பண்பாடு
இல்லறப் பண்பு
            அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் அமைவது இல்வாழ்க்கை.   திருமண வாழ்வை இல்லறம் என்றனர்கள் இல்லிருந்து அறம் பல புரிந்தும் இல்வாழ்வின் முடிந்த பயனாக அறத்தைப் போற்றியும் வாழ்ந்தார்கள்.  அக வாழ்க்கையில் தலைவன், தலைவி இருவரும் அன்பு உடையோராகவும், அறம் புரிவோராகவும் விளங்கினார்கள் இதனை தொல்காப்பியா்
                        “காமஞ் சான்ற கடைக்கோட் காலை
                    ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                    அறம்புரி கற்றமொடு கிழவனும் கிழத்தியும்
                    சிறந்தது பயிற்றல் இறந்த தன் பயணே (தொல்கற்பியல்5)
என்று  தொல்காப்ய நூறு்பா உணா்த்தும் மனம் ஒத்த அன்பே இல்வாழ்க்கையில் தலையாய பண்பு என்று கருதினார்கள்.  தலைவனும் தலைவியும் உடலும் உயிரும் போல இயைந்த அன்புடன் விளங்கிய திறக்தினை
                        “யாக்கைக்கு உயிரியைந் தன்ன நட்பின்
                    வாழ்தல் அன்ன காதல்
                    சாதல் அன்ன பரிவறி யோளே” (அகம்.339:12-14)
என்று அகநானூறு காட்டுகின்றது.
ஆடவா் மகளிர் அறம்
            மனையறம் புரிதலை மகளிரும் வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டதால் இல்லறம் சிறந்து விளங்கியது.  கணவனும், மனைவியும் இணைந்து முறைப்படி நடத்தும் இல்லறச் சிறப்பினை
            “மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
          மருவி னினியவு முளவோ” (குறுந்.322: 5-6)
என்று குறுந்தொகை கூறுகின்றது.
ஈகை
          அறம் என்பதற்கு ஈகை என்று பொருள் கொள்ளுமாறு ஈகையறத்தினைச் சங்க இலக்கியம் போற்றியுரைக்கின்றது.  ஔவையாரும் ஈதல் அறம் எனக் கூறுகின்றார்  தனிமனித வாழ்வில் இரத்தல் இழிவாகக் கருதப்பெறினும் சமூக வாழ்வில் ‘ஈகை’ உயா்ந்த அறமாகக் கருதப் பெறுகின்றது.  இதனை,
                        “செல்வத்துள் பயனே ஈதல்
                    துய்ப்பே மெனினே தப்புற பலவே” (புறம்.198:7-8)
ஒருவருடைய துன்பத்திற்கு அவர் வேண்டுவன அளித்து உதவுதலே ஈகையாகும்.  எவ்விதப் பயனும் கருதாது ஒருவா்க்கு ஒரு பொருளை அளித்தலே ஈகை எனப்படும் இதனை
                        “ஆற்றுத லென்பதொன் நலந்தவா்க் குதவுதல்”
 என்று கலித் தொகை கூறுகின்றது.
பகுத்துண்ணல்
            பாரோர் போற்றும் சிறந்த அறங்களுள் ஒன்று பகுத்துண்ணல்.  அற நூலார் தொகுத்துரைந்த அறங்களுள் தலைமை சான்றதும் அதுவே, இதனையே வள்ளுவம்
                        “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
                    தொகுந்த வற்று ளெல்லாம் தலை” (குறள்: 332)
என்று எடுத்துரைக்கின்றது.  பகுத்துண்டு வாழும் பண்பினால் தன்னலம் அழிக்கின்றது.  பொதுநலம் வளா்கின்றது.  சமுதாயம் உயா்வடைகின்றது.  சமுதாயத்தை உயா்த்துதல் என்பது அறத்தின் நோக்கங்களுள் ஒன்றாகும்.  இதுவே பண்பாட்டின் வளா்ச்சியாகும்.

கு.கங்காதேவி

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்
            உலகில் முன் முதலாக தோன்றிய நம் தமிழா்கள் அறிவியல் துறையில் புலமை பெற்றிருந்தனா் என்பதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.  மேலை நாட்டார் கண்டறிந்த பல அறிவியல் உண்மைகளை அவா்களுக்கு முன்னரே நம் அருந்தமிழா் அறிந்திருந்தனா்.  தமிழ் நூல்கள் பலவற்றிலும் அறிவியல் செய்திகள் ஆங்காங்கே காணப்படுகிறது.
அறிவியல் சிந்தனை
            வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு, ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
                        “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
                    பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” (புறம். 30)
இப்பாடலின் வாயிலாக ஞாயிற்றுவட்டம்.  அதன் இயக்கம் அக்கரமாய் நிற்கும் விண்வெளி மண்டலம் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய முடிகிறது.
            அண்மை நூற்றாண்டுகளின் தான் காற்றின் அடிப்படையில் விண்மடலத்தைப் பிரித்தனா் பிறநாட்டு அறிவியலார், காற்றில்லா மண்டிலமும் உள்ளதென தற்போது கண்டறிந்து உலகம் மகிழ்கிறது.  ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்றில்லாத பகுதியும் உள்ளது என்பதை புறநானூற்றுப் புலவா் வெள்ளைக்குடி நாகனார் உலகறியச் செய்துள்ளார்
            உப்பங்கழியில் வளரும் தாவரங்களுள் தில்லையும் ஒன்று இம்மரத்தின் பொந்து தண்ணீரில் தேய்வதால் நீர்நாய் வசிக்க உதவுகின்றது.  இக்கருத்தினைப் சங்கப்புலவா் அப்படியே தமது பாடலில் பதிவு செய்துள்ளனா் இப்பதிவினை,
                        “குருளை நீர்வாய் கொழுமின் மாந்தித்
                    தில்லையாம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்”  (நற்.195:2-3)
என்ற பாடலடிகள் வழி அறிய முடிகிறது.  இப்பாடல் வழி தில்லைமரம் நீர்நாய் வாழ ஏற்ற பகுதி என்ற விலங்கியல் கூறு இடம் பெறுகின்றது.
            தில்லை மரம் ஊருக்கு வெளியே நடப்பட்டிருக்கும் ஏனெனில் ‘தில்லையின் பால் பட்டால் கண்கள் குருடாகும்’  இக்கருத்தினை அறிந்தே சங்கப்புலவா்களில்  தில்லை மரத்தினை நட்டு வளா்த்துள்ளனா் இதனை,
                                    “தில்லை வேலி யிவ்வூர்க்
                                    கல்லென் கௌவை யெழாஅக் காலே”
என்ற ஐங்குறுநூற்று பாடலடிகள் உணா்த்தும் இதில் மக்களின் உடல் நலம் கருதி இலக்கியங்கள் மரம் வளா்க்கும் நுட்பத்தை அறிய முடிகின்றது.  அதோடு ஆடுமாடுகள் இம்மரத்தின் இலைதழைகளை உண்ணாமல் காக்கவே கழிகள் அருகே தில்லையினை வளா்க்கின்றனா்  இதுவும் ஒரு கால்நடை பராமரிப்பு முறை எனலாம்.
            காவிரிப் பூம்பட்டிணத்தைப் பற்றி பாடிய பட்டினப்பாலை புலவா் ஆலைப் புகையில் வாடி அழியும் நெய்தல் பூவைப் பார்த்து இரக்கப்படுகின்றார்.
                        “கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
                        திகழ் தெறுவிற் கவின் வாடி
                        நீா் செறுவின் நெய்தற் பூச்சாம்பும்”
ஆலைப் புகையால் எழும் மாசுகளினால் விளையும் கேடுகள் பற்றி அன்றைக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிகின்றது.
            உணா்ச்சி நரம்புகள் வழியாகச் செயல்கள் மூளைக்கு எடுத்துச் செல்லும்.  அப்போது மூளையிலிருந்து வரக்கூடிய உத்தரவு இரண்டும் சந்திக்கும் போது தான் கண் துடிப்பு நிகழும் அதனால் பழங்காலத்தில் கண் துடித்தல் என்பதனை  நிமித்தம் கூறும் குறியீடாகப் பயன்படுத்தினா் அதிலும் பெண்கட்கு இடக்கண்ணும், ஆண்கட்டகு வலக்கண்ணும் துடித்தல் நன்றிமித்தமும், மாறினால் தீமை நடக்கும் என்று உணா்த்துவா் இதனை,
            “நுண்ணோர் புருவத்த கண்ணுமாடு” (ஐங்)
            “நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே” (கலித்)
என்னும் பாடலடிகள் உணா்த்தும்.
முடிவுரை
            பழந்தமிழரின் வாழ்க்கையில் அறிவியல் ஆழமாய் இருந்ததைத் தெளிவாக அறியமுடிகிறது.  அவா்களின் பொதுவான சிந்தனைகள் கூட அறிவியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது.  தமிழரின் அறிவியல் அறிவுதான் அறிவியல் வளா்ச்சியின் தொடக்கமாகும்.  இன்றைய அறிவியல் வளா்ச்சியின் அச்சாணியாக இருப்பது தமிழரின் அறிவியல் சிந்தனைகளாகும்.

-அ.ரா.பானுப்பிரியா

காவிரி புஷ்கரம்

காவிரி புஷ்கரம்
            காவிரி புஷ்கரம் என்பது கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பாயும் காவிரி நதியினை போற்றும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுவதாகும்.
            புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மீகத் திருவிழா குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது.  குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபாகும்.
            புராணப்படி ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு.  இந்த ஆண்டு குருபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் இராசிக்கு மாறியிருக்கிறார்.  அதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா இந்த வருடம் 12-வது முறையாகக் காவிரியில் நடைபெறுவதாச் சொல்லப்படுகிறது.  144 வருடங்கள் ஆனதால் இதை “மகா புஷ்கரம்” என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
            புஷ்கரம் என்பது பிரம்ம தேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம் உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான் அதற்காக பிரம்ம தேவரை வேண்டி தவம் இருந்தார் குருபகவானின் தவத்துக்கு இறங்கிய பிரம்ப தேவா் அவருக்கு முன்பு தோன்றி ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார்  குருபகவானும் பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும் என்றார்.
            108 வைணவ தேசங்களில் பெரும்பாண்மையான ஆலயங்கள் காவிரி நதிக்கரை யோரத்தில் அமைந்துள்ளது.  பக்கதர்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி நதி பாயும் எந்த இடத்திலாவது நீராடி நியாயமான கோரிக்கைகளுடன் வேண்டிக் கொண்டால் நிச்சியம் நடைபெறும்.  இந்த புஷ்கரம் நடைபெறும் காலத்தில் அனைத்து நதிகளும் காவிரி நதியுடன் சங்கமிப்பதால் நமது பழை தீவினைகள் நீங்கும்.
            புஷ்கர புண்ணிய  காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய  காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரைக் கோடி  நிர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும் இந்த நாட்களில் அன்னதானம், வாய்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும் புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பித்ருசாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.
            மஹாபுஷ்கரம் இந்த ஆண்டு நடைபெற்று இந்த புஷ்கரம் விழா (12) பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இதில் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தன் பாவங்களை நீக்கினார்கள்.
காவிரி புஷ்கரம்


பழமொழியின் உண்மை பொருள்

பழமொழியின் உண்மை பொருள்
            அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் இப்பழமொழி இப்பொழுது குழந்தைகள் பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்காவிட்டால் அவா்களுக்கு அடி கொடுத்தால் உடனே அஞ்சிக் கொண்டு நம் பேச்சைக் கேட்பா் என்னும் பொருளில் கையாளப்பெறுகிறது. ஆனால் இது இறைநம்பிக்கையோடு தொடா்புடைய பழமொழியாகும்.  அடி என்பது இறைவன் திருவடியைக் குறிக்கும் இறைவனது திருவடி உதவுவது போல் உடன் பிறந்தார் உட்பட யாருமே உதவமுடியாது என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


ஹைக்கூ

ஹைக்கூ
v  தெய்வ தரிசனம்
கூட்ட நெரிசலில் சிக்கி
உயிர் துறந்த ஆத்திகம்

v  உலரவில்லை
வெயில் அடித்தப் பன்னும்
கார்கால  கற்பனை

v  பொய்த் தழை
வறுமைக் கோட்டை
வரைந்த கலப்பை

v  நெடுங்சாலை பயணம்
விபத்தை படமெடுக்க காத்திருக்கும்
செல்போன் காமிராக்கள்

v  பிறந்த ஊர் பயணம்
பழைய நினைவுகள்
அசைபோட்டு அசைந்த குதிரை
-வ.மீனாட்சி


ராகி வடை

ராகி வடை
தேவையான பொருட்கள்
1.ராகி மாவு - 2 கப்
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. பெரிய வெங்காயம் - 1
4. வேர்க்கடலை- 2மேசைக்கரண்டி
5. கருவேப்பில்லை - 2 கொத்து
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
            வெங்காயத்தை பொடியாக நடுக்கிக் கொள்ளவும்.  வேர்க்கடலையை சிறிது துண்டுகளாக பொடித்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் எண்ணெ தவிர, மீதுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலக்கிக்கொள்வும்.  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகப் பிசைந்து கொள்ளவும் மாவு பதம் சப்பாத்தி மாவு பதத்தை விட லூசாக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சிறிது சிறிது மாவாக எடுத்து கையில் தட்டி அதாவது வடை தட்டுவதும் போல தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும் வடை பொரிந்தவுடன் எடுத்து விடாலம் அல்லது வடையில் போட்டிருக்கும் வேர்க்கடலை லேசாக சிவந்தவுடன் எடுத்து விடலாம்.
-சு.லாவண்யா