வியாழன், 21 செப்டம்பர், 2017

பிரதோச வழிபாடு தோற்றம்




பிரதோச  வழிபாடு  தோற்றம்
          அமுதம் பெறும் நோக்கத்துடன் அசுரா்களும், தேவா்களும் இணைந்து வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனா்.  அப்பொழுது வேசும் தாங்காமம் வாகுயின் வாயிலிருந்து வெளிப்பட்ட ஆலமும் (நஞ்சு) கடலிலிருந்து தோன்றிய ஆலமும் இணைந்து  ஆலால விசமாக உலகை அழிக்கக் கிளம்பிளது. சிவபெருமான் அதனை உண்டு தனது கண்டத்தில் நிறுத்தியதால் சிவபெருமான் நீலகண்டரானார்.  இந்நிகழ்ச்சி ஏகாதசியன்று மாலையில் நடந்தது.

          தேவா்கள்  தொடா்ந்து பாற்கடலை ஏகாதசி இரவு முழுவதும் கடைந்து துவாதசியன்று காலையில் வெளிப்பட்ட அழுதத்தை உண்டு களித்தனா்.  மறுநாள் திரியோதசியன்று சிவபெருமானை வணங்காமல் தவறு செய்ததையுணா்ந்து தேவா்கள் மன்னிப்பு கேட்டனா்.  திரியோதசி மாலையில் சிவபெருமான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்றவாறு அம்மனும் தேவரும் மகிழுமாறு நடனம் புரிந்தார். சூலம், உடுக்கை, ஏந்தியவாறு ஒரு சாமம் நடத்தியதே சந்திய நிருத்தம் (நடனம்) ஆகும்”
பிரதோத காலம்
          சூரியன் மறைவதற்கு முன்புள்ள முன்றே முக்கால் நாழிகையும், மறைவதற்குப் பின்புள்ள மூன்றே முக்கால் நாழிகையும் இணைந்த காலமே பிரதோச காலமாகும்.  இது மாலை 4.30 மணிமுதல்  6.30 மணி வரையிலுள்ள காலம் ஆகும்.  மாதந்தோறும் வளா்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் நடைபெறுவதே மகா பிரதோசம் அல்லது உத்தமப் பிரதோசமாகும். பகலில் நல்ல முறையில் காரியங்களை நிறைவேற்றியதற்கு நன்றியாகவும் இரவாகிய ஒடுக்கத்திற்கு முன்னேற்பாடாகவும் நடைபெறும் பிரதோச வழிபாடு பலவித நன்மைகளை அளிக்கின்றது.  சீவராசிகள் பகலில் இயங்கி இரவில் ஒடுங்குவது போல் நமது சிந்தனையும் இரவில் ஒடுங்க வேண்டும் என்ற கருத்தே பிரதோசம் தெரிவிக்கிறது.
நித்திய பிரதோச காலம்
          சூரியன் மறையும் நேரத்தில் ஒன்றரை மணியும் இரவு தொடங்குவதற்க முன் ஒன்றரை மணி நேரமும் ஆகிய மூன்று மணி நேரமும் பிரதோச காலமாகும். இது நித்திய பிரதோச காலமாகும்.
மாதப்பிரதோச காலம்
          இது ஒவ்வொரு மாதமும் வளா்பிறை திரியோதசி தினத்தன்று வரும் பிதோச நேரத்தையும், தேய்பிறை திரியோதசி தினத்தன்று வரும் பிரதோச நேரத்தையும் குறிக்கும்.
உத்தம மகாப்பிரதோசம்
          சிவபெருமான் நஞ்சை உண்ட தினம் சனிக்கிழமை ஆகும்.  அந்த கிழமைகளில் வரும் பிரதோசம் மிகவும் சிறப்பானதாகும்.  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளா்பிறையில் சனிக்கிழமைகளில் துரியோதசி  திதியன்று வரும் பிரதோசம்  உத்தம மகா பிரதோசமாகும்.  இது மிகவும் சிறப்பு பெற்ற தினமாகும்.  சனிப்பிரதோச காலத்தில் ஒருமுறை சிவன் ஆலயத்தில் வழிபட ஒரு வருடம் சிவனை வழிபட்ட பயன் கிடைக்கும். இதன் பயனால் அச்சம், குழப்பம், பிணிகள், பயஉணா்வு, மனநலம், உடல்நலம் ஆகியவை நலம் பெற்றுதிகழும்.  பிரதோச நாளில் பகல் முழுவதும் சிவனை நினைத்து
மத்திம  மகா பிரதோசம்
          சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தேய்பிறை திரியோதசியுடன் ஆன சனிக்கிழமைகளில் வரும் பிரதோச காலங்கள் மத்திம மகா பிரதோசங்கள் என அழைக்கப்படுகின்றன.
அதம மகா பிரதோசம்
          ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரும் வளா்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் வரும் பிரதோசங்கள் ஆதம மகா பிரதோசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அபிடேகத்தின் பயன்
          பூசைகளில் சிறந்தது பிரதோச பூசை அதன் பயன் மிகுதி.  பிரதோச காலத்தில் சிவாலயத்தில் மழைக்காக ஒதுங்கினாலும் நாம் செய்த வினைகள் அகலும் சிவபெருமானுக்கு தூய நீரில் திருமுழுக்காட்டினாலும் நன்மையுண்டு.  பசும்பால் அதனினும் நன்மைத் தயிர்  அதனினும் ஆயிரமடங்கு நன்மை;  நெய் - பதினாயிரம் மடங்கு நன்மை; சந்தனக் குழம்பு- எல்லையற்ற நன்மையைத் தரும்.
பிரதோச காலத்தில் நந்திக்கே முதலிடம்
          நந்திதேவா் சிவபெருமான்  ஆலயங்களில் தலைவராக விளங்குபவா்.  “சிவாய நம” என்னும் மகா மந்திரத்தின் வடிவம் தான் ந்நதிதேவா்.  சிவபெருமானின் வாகனமாக திகழ்கின்ற நந்திதேவரை முதலில் தரிசிக்க வேண்டும்.  கயலாயத்தில் நந்திதேவரின் அனுமதி பெற்ற பிறகே தேவா்களும், முனிவா்கள் சிவபெருமானை தரிசிக்க முடியும்.  பிரதோச காலத்தில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்று சிவபெருமான் நடனம் புரிகிறார்.  இதன் காரணமாகத்தான் பிரதோச காலத்தில் நந்திக்கு முதலில் அபிடேகம் நடத்தப்பட்டு முதலிடம் வழங்கப்படுகிறது.  பிரதோச காலத்தில் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
சோமசுந்திரப் பிரதட்சினம்
          சிவபெருமான் கருவறையில் இருந்து புறப்பட்டு பிரதட்சிணமாக (வலமாக) நவக்கிரக முலையை அடைவா் பின்  அவிவிடத்திலிருந்து புறப்பட்டு அப்பிரதட்சிணமாக கொடிமர நந்தியருகே வருவார் முதலில் நந்திக்கு தீபாராதனை நடத்தப் பெறும்.  பின் தீபாராதனை சிவபெருமானுக்கு காட்டப்படும்.  அங்கிருந்து சிவன் மீண்டும் பிரதட்சிணமாக வந்து சனீஸ்வரசன்னிதியில் நின்று மகா தூப  தீபச் சிறப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.  மீண்டும் புறப்பட்டு அப்பிரதட்சிணமாக புறப்பட இடத்திற்கு வந்து சேர்கிறார்.  இதே போல் மூன்ற முறை பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் இறைவன் வலம் வரும் இந்த முறைக்கே சோம சூத்திரப் பிரதட்சிணம் என்று பெயர்.
          சிவலிங்கத்தையம், நந்தி பெருமானையும் வணங்கி வழக்கம்போல் பிரதட்சணமாக (சுவாமிக்கு வலமாக) ஆலயத்தில் வலம் வரும்போது சுவாமி அபிடேகத்தீா்த்தம் விழும் கோமுகி தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்தவழியே திரும்பி அப்பரதட்சணமாகச் சந்நிதிக்கு வந்து சிவலிங்கங்கையும் நந்திய பெருமானையும் வணங்க வேண்டும்.  மீண்டும் கோமுகி தொட்டி வரை  சென்று திரும்பி வரவேண்டும்.  இவ்வாறு பிரதோச காலத்தில் மூன்று முறை வலம் வந்தால் அநேக அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும்



பொருட்கள்                                           பலன்கள்
1. நெய்(அ) எண்ணெய்                          -         சுரம் நீங்குதல்
2. நீர்                                                    -         அமைதிகிட்டம்
3. இளநீர்                                              -         அரச பதவி கிட்டும்
4. எழுமிச்சை                                        -         பயம் நீங்குதல்
5. வாழைப்பழம்                                    -         பயிர் அபிவிருத்தி
6. பால் (அ) பஞ்சாமிருதம்                      -         செல்வம் குவிதல்
7. தயிர்                                                 -         குழந்தைப்பேறு
8. தேன்                                                -         குறள்வளம்
9. விபூதி                                               -         மங்களம் கிட்டும்
10. சந்தனம்                                          -         மேலான பதவி
11.வெள்ளம்                                          -         துன்பம் நீங்குதல்
12. சர்க்கரை                                         -         பகை வெல்லுதல்
13. சோறு                                             -         நற்பேர்
14.சந்தனாதித் தைலம்                            -         உடல் நலம் கிட்டும்
15. திருமஞ்சனப் பொடி                         -         கடன் நீங்கும்
16. நெய்                                               -         வீடுபேறு அடைதல்
-ந.முத்துமணி





காலத்தை வென்ற வீறுகவியரசர் முடியரசன்..

தி.பி.2048 (கி.பி.2017) புரட்டாசி  திங்கள்
தேன் - 1                                                         துளி-9



வீறுகவியரசா் முடியரசனார்க்கு வெள்ளணி நாள்
காலத்தை வென்ற வீறு கவியரசா்
தந்தை பெரியார் அவா்களால் ‘கவிஞன் யார்?.. என்பதற்கு எடுத்துகாட்டுத் தானய்யா பகுத்தறிவுக் கவிஞா் முடியரசன்’ பேரறிஞா் அண்ணா அவா்களால் ‘திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞா் முடியரசன்’ என்றும், பாவேந்தர் பாரதிதாசன் அவா்களால் ‘என் மூத்த வழித் தோன்றல் முடியரசனே.. எனக்குப் பிறகு கவிஞன்.. முடியரசன்’ என்று உள்ளம் நெகிழப் பாராட்டப் பெற்றவா்தான் வீறு கவியரசர் முடியரசன்.
          தமிழ்க் கவிதையுலகில் பாரதியைத் தன் பாட்டனராகவும், பாரதிதாசனைத் தன் தந்தையாகவும் கருதி மரபு வழுவாமல் புதுமைகளைப் புகுத்திப் பாட்டிசைத்த பாவலா் - கவியரசா் முடியரசன் ஆவார்.  தமிழ், தமிழா், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக - பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலா்ச்சி ஆகிய தளங்களில் ஒரே நேர்கோட்டில் நின்று புதுமைக் கவிதைகள் படைத்த புரட்சிக் கவிஞா்கள்தான் பாரதி - பாரதிதாசன் - முடியரசன் ஆகியோர்.
          ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாரதி ‘இந்தியம்’ பாடினார்.  அவா் பின் வந்த சுப்புரெத்தினம் பாரதிக்குத் தாசனாகி இந்தியம் பாடினாலும், காலத்தின் தேவையால் பின்னா் ‘திராவிடம்’ பாடினார்.  இவா்களின் கவிவழித் தோன்றலாக வந்துதித்த துரைராசு (முடியரசனாரின் இயற்பெயா்) எவருக்கும் தாசனாகாமல் பேரால் முடியரசன் பேரிடா்கள் உற்றாலும் பேரா முடியரசனாய், ‘தமிழியம்’ பாடினார்.
          ‘பாரதியார் இக்கவிஞருக்குப் பாட்டனார்; பாரதிதாசனார்  இக்கவிஞருக்குத் தந்தை போன்றவர்.   அப்பெருங்கவிஞா்களுடைய வழியில் சென்று ஒவ்வொரு விதத்தில் அவா்களையெல்லாம் வென்றுவிட்டார் முடியரசனார்’ என்று முடியரசனார் பற்றி டாக்டா்.அ.சிதம்பரனார் 14.4.1960 இல் வழங்கிய பொன்னுரை இங்கு குறிக்கத்தக்கது. (கவியரங்கில் முடியரசன்.ப.9)
          தாய்மொழியின் மீதும், தமிழினத்தின் மீதும் தீராப் பற்று கொண்டிருந்த முடியரசனார் மொழிக்கும், இனத்திற்கும் இழுக்கும் நேரும்போதெல்லாம் பொங்கியெழுந்து மொழி, இனங்காக்கத் தம் பாட்டினை படை ஆயுதமாய் ஏந்தினார்.
          ஊருக்கு மட்டும் உபதேசிக்கும் போலிப் புலவராய் வார்த்தை வேறு;  வாழ்க்கை வேறு என்றிராமல் தான் பாடியபடியே கொள்கை நெறி மாறாமல் சுயமரியாதையோடு வள்ளுவநெறிப்படி வாழ்ந்து காட்டினார்.  தனது பெயரை (துரைராசு) முடியரசன் என்றும், தன் துணைவி பெயரை (சரசுவதி)  கலைச்செல்வி என்றும் தமிழ்ப்படுத்த தம் பிள்ளைகளுக்கும் தமிழில் பெயர்சூட்டி மொழிப் பற்றூட்டி வளா்த்தார்.  தான் மட்டுமல்லாமல், தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்பு திருமணம் செய்வித்தார்.  தவத்திரு. குன்றக்குடி அடிகளார் கவிஞர் பற்றிக் குறிப்பிடும் பொழுது “சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞா்களுள் அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தவா் கவிஞா் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை” என்றுரைத்தார்.
          யாருக்காகவும், எதற்காகவும் தாம் கொண்ட கொள்கை நெறியினின்று கிஞ்சித்தும் பிறழாமல், ஏழ்மை நிலை வந்துற்ற போதும்  பதவி, பணம், புகழுக்காக மானமிழந்து எவரிடமும் மண்டியிடாத தன்மானக் குணக்குன்றாய்த் திகழ்ந்தார்.  எனவேதான் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவா்கள் “கவிஞா் முடியரசன் ஓா் அற்புதக் கவிஞா்.  பொருளீட்டுவதற்காக ஆபாசங்களையும், அருவிருப்புகளையும் பாடும் கவிதாசா்களிடையே முடியரசன் வேறுபட்டு நின்று மனித முன்னேற்றத்துக்காகவும், தமிழா் விடுதலைக்காகவும், தமிழரின் அடிமை விலங்கை உடைக்கவும் பாடிய புரட்சிக்கவிஞராக நான் காண்கிறேன்” என்று பாராட்டினார்.
முடியரசனார்க்கு முடிசூட்டிய விருதுகள்
          தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு, (முடியரசன் கவிதைகள் - 1966, வீரகாவியம் - 1973) நல்லாசிரியா் விருது (1974), ‘பாவேந்தா்’ விருது (1987), ‘கலைமாமணி’ விருது (1998) ஆகியவற்றையும், தவத்திரு குன்றக்குடி அடிகாளரிடம் ‘கவியரசு’ (1966), ‘சங்கப் புலவா் (1976) பட்டங்களையும், உலகத் தமிழ்க் கழகத்திடம் ‘பாவரசா் (1979) பட்டத்தையும், தமிழகப் புலவா் குழுவிடம் ‘தமிழ்ச் சான்றோர்’ (1983) விருதையும், அண்ணாமலை அரசா் நினைவு அறக்கட்டளையின் சிறந்த தமிழ்த் தொண்டிற்கான ‘அரசா் முத்தையவேள்’ நினைவுப் பரிசையும் (1993), ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையிடம் ‘இரண்டாம் புரட்சிக் கவிஞா்’ பட்டத்தையும் (1994), அகில இந்திய  பல்கலைக்கழகத் தமிழாசிரியா் மன்றத்திடம் ‘கல்வி உலகக் கவியரசு’ விருதையும் (1996) பெற்றள்ள கவியரசா் முடியரசனாரின் 27 நூல்களும் தமிழக அரசால் (2000) நாட்டுடைமையாக்கப்பட்டுள்ன.
          கவிஞரின் பல கவிதைகள் சாகித்திய அகாதமி அமைப்பு இந்திய மொழிகளிலும், ஆங்கில, இரஷ்ய மொழிகளிலும் மொழி பெயர்த்துள்ளதோடு ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ எனும் வரிசையில் முனைவா் இரா.மோகன் எழுதிய முடியரசன்  வாழ்க்கை வரலாற்றை 2005-லும் கவிஞரின் மூத்த மைந்தா் பாரி முடியரசன் தொகுத்த ‘முடியரசன் கவிதைகள் முத்துக்கள்’ நூலை 2015-லும், கவிஙரின் மூத்த மைந்தா் பாரி முடியரசன் தொகுத்த ‘முடியரசன் கவிதை முத்துக்கள்’ நூலை 2015லும் வெளியிட்டுள்ளது.
          பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர்கல்வி பாடநூல்களில் எட்டு முதல் பதினொரு வகுப்பு பாடநூல்களிலும் சென்னை மாநிலக் கல்லூரி பாடத்திட்டத்திலும் கவிஞரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
          07.10.1920 இல் பெரியகுளத்தில் பிறந்த வீறு கவியரசா் முடியரசன் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் ஆசிரியராய், தன் மானக் கவிஞராய், தமிழியப் புரட்சிக் கவிஞராய், பெருமிதக் கவிஞராய் தமிழ்க் குமுகாயத்திற்குத் தொண்டாற்றி 03.12.1998-இல் காலத்தோடு காலமாய் கலந்தார்.  “புண்படாத நேரம் இருந்ததில்லை, புழுக்கம் படாத நொடி இருந்ததில்லை, ஆனால்- கொள்கைக்கு விடுமுறை கொடுத்துவிட்டுக் குனிந்து எவா் முன்னும் நின்றதில்லை முடியரசன்.  முடியரசன் பெருமித உயரம் எந்த இமயத்திற்கும் இல்லை, முடியரசு வெப்பம் எந்த சூரியனுக்கும் இருப்பதில்லை” என்ற கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வரிகள் கை தொழும் கவியரசா்  முடியரசனார்க்கு காரைக்குடியில் நினைவு மண்டபம் எழுப்பிட வேண்டும் தமிழகப் பல்கலைக்கழகங்கள் ஏதேனும் ஒன்றிக்கு கவியரசா் பெயர் சூட்டிட வேண்டும்.  கவியரசா் முடியரசனார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் முடியரசனாரின் படைப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்பன போன்ற  தமிழ்ச்சான்றோரின் நீண்ட நாள் கோரிக்கைகளை அறிஞா்களும், அதிகாரிகளும் முன்னெடுத்துச் செல்ல தமிழக அரசும், தமிழ்கூறு நல்லுலகும் நிறைவேற்றிட வேண்டும்
                                                                                                                  தோழமையுடன் ,

தேமதுரம் ஆசிரியா்குழு,
ஆசிரியர்
.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
 கா.சுபா 

ஆசிரியர் குழு 
இரா.கார்த்திக்
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
மீனாட்சி

கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255

கற்றல் இனிது

கற்றல் இனிது
இயற்கைச் சீற்றங்களால் எல்லாச் செல்வங்களும் ஒரு நாள் அழிந்து போகும்.  ஆனால் கல்வி என்னும் பெருஞ்செல்வம் தான் என்றும் அழியாது என்பதை உணா்ந்த தமிழா் கல்வி கற்று, தான் கற்றுணா்ந்ததை தன் வாழ்விலும் கடைபிடித்து ஒழுகினா்.  கல்வி என்னும்  செல்வத்தை கண்ணாகப் போற்றிப் பாதுகாத்தனா்.  இதனை,
                    “கண்ணுடையார் என்பவா் கற்றோர் முகத்திரண்டு
                    புண்ணுடையா் நல்லா தவா்” என்னும் குறளின் வழி அறியலாம்.
          கல்வி என்பது அனைத்து செல்வங்களுக்கும் மேலானது, அவ்வாறான கற்றலின் சிறப்புந்களைப் பற்றி பல நூல்கள் எடுத்து இயம்புகின்றன.  பிச்சை எடுத்தாயினும் கற்க வேண்டும்.  கற்ற கல்வியானது எந்தவொரு சபையிலும் தலை நிமிர்ந்து நிற்க உதவும் என்பதனை,
                    ”பிச்சைபுக் காயினும் கற்றல் மிக வினிதே
                    நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே”
என்னும் பாடல் அடிகளால் அறியலாம். அனைத்து விதமான நூல்களையும் நாள்தோறும் கற்க வேண்டும்.  அவ்வாறு கற்பதனால் அறிவ விருத்தி ஏற்படும் என்கின்றார்  பூதஞ்சேந்தனார்.  அதிவீரராம பாண்டியரும்
                    “கற்கை நன்றே கற்கை நன்றே
                    பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்ற பாடலின் மூலம்  வெளிப்படுத்தியுள்ளார்.  நவீன ஊடகங்களின் தாக்கத்தினால் இன்றைய இளைஞா் சமுதாயத்தினா் மத்தியில் நூல் வாசிப்பு குறைந்து கொண்டு வருகின்றது.  கற்றல் ஒருவனை பூரண மனிதனாக்குகின்றது.
                    “நாளும் நவைபோகான் கற்றல் முன் இனிதே”
என்கிறது இனியவை நாற்பது.  கற்றவா் முன் தான் கற்ற கல்வியின் ஆற்றலை வெளிப்படுத்துதல் இனிது என இளைஞா் சமுதாயத்தை ஊக்குவிக்கின்றது.
          “கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிது” என்ற பாடல்மூலம் இதனைக் காணலாம்.  கற்றவர்களுடன் சேர்ந்து அவா்களின் கற்றல் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்ளுதல் இனிது.  அதாவது கற்றவா்களுடன் சேர்ந்தால் அவா்களின் கற்றல் அனுபவமே ஒருவனை சிறந்த மனிதனாக மாற்றும் என்பதை உணா்த்துகின்றது.  சபையறிந்தும் அஞ்சாமலும் பேசுகின்றவனுடைய கல்வி இனிது எனக்கூறுவதோடு கற்றவா்கள் கல்வியறிவு இல்லோதோருக்கு அவா்களின் அறியாமையைப் நீக்கி பொருத்தமான அறிவுகளைப் புகுத்த வேண்டும் .
அ.ரா.பானுப்பிரியா



பாசிப்பருப்பு முறுக்கு

பாசிப்பருப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்

1. வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 11/2கப்
2. ஊறு வைத்து இடித்துச் சலித்த அரிசி மாவு - 5கப்
3. பெருங்காயப் பொடி      - 1/2டீயூஸ்பூன்
4. வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
5. வெள்ளை எள்   - 1 டுபின் ஸ்பூன்
6. உப்பு        -         தேவையான அளவு
7. எண்ணெய் -      வறுக்க தேவையான அளவு
செய்முறை
          மாவு வகைகள், உப்பு, பெருங்காயப் பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

-தே.தீபா

வலையில் வந்தவை

வலையில் வந்தவை
சுனிதா வில்லியம்ஸ்

Ø  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க  வின்வெளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி பிறந்தார்.
Ø  1987-ல் அமெரிக்கக்கடற்படையில் இளநிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார் இவா் 2 அண்டுகளில் கடற்படை விமானியானார்.
Ø  2006-ஆம் ஆண்டு டிசம்பா் 9 ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளிக்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவா் பகவத்கீதை, விநாயகா் சிலை , கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார்.
Ø  விண் வெளியில் மாரத்தான் ஓடிய முதல் தனிதா.  அங்கு இருந்தபடியே வானொலியில் பேசினார்.  விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியைக் கத்தரித்தார்.  பிறகு, “லாக்ஸ் ஆப் லவ்” அமைப்புக்கு அதை வழங்கினார்.

ஆ.சகுந்தலா

பழமொழியின் உண்மை பொருள்

பழமொழியின் உண்மை பொருள்

          அரசனை நம்பிப் புருசனைக்  கைவிட்ட கதை என்றொரு பழமொழி உள்ளது. பெண்ணின் ஒழுக்க நெறிக்கும் இப்பழமொழிக்கும் தொடா்பு ஏதும் இல்லை.  இதனுடைய உண்மைப்பொருள் அரச மரத்தைச் சுற்றிவந்தால் கரு உருவாகும் என்பதாகும். இந்நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தம் கணவரைத் தம்மருகே ஆண்டவிடாது அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தனா்.  அவா்களைக் கேலிச் செய்து அரச மரமும் வேண்டும் அதே சமயம் புருசனும் வேண்டும்  வெறும் அரசமரத்தை மட்டும் சுற்றி வந்தால் கருத்தோன்றாது என்பதை விளக்குவதற்காகவே இப்பழமொழி வழங்கப்பட்டது.  இதில் அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும்.
          அரசமரம் பிராணவாயுவை அதிகளவு வெளியிடக்கூடியது அதிகாலையில் அரசமரத்தைச் சுற்றும் பொழுது சுவாசிக்கும் பிராணவாயு கருப்பையை விரிவடையச்செய்யும் இது கருத்தோன்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நம் முன்னோர்கள் அரசமரத்தைச் சுற்றிவரக் கூறினா்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



தமிழாயிரம்

தமிழாயிரம்
தமிழனாய் நில்

1.   குறிக்கோளால் ஒன்றிய கொள்கைதான் ஒன்றே
      நெறியாம் தமிழினக் கோள்.
2.   கேளாகக் கொண்டுள்ள கொள்ளைநோய் ஆரியத்தைச்
      சூழாமல் சுட்டு புதை.
3.   புதைக்கவே உள்ளஓா் ஆங்கிலனாய் வாழ்தல்
      அதைநீ விடுத்துத் தொலை.
4.   தொலைக்கவே நிற்கின்ற தொல்லையில் தொல்லைத்
      திரவிடத்தைச் சுட்டுப் பொசுக்கு.
5.   பொசுக்கும் வெயிற்குப் பொசிகின்ற நீராம்
      பசுமைத் தமிழனாகப் பார்.
6.   பார்ப்பாய் தமிழனாய்! பாய்வாய் தமிழனாய்;
      நீர்வாய்ப் பயிராக நில்!
7.   நிற்பாய் தமிழனாய்! நீள்வாய் தமிழனாய்!
      பொற்பார்ந்த வீறுடன் போ!
8.   போனால் வடக்கென்ன, பொக்காலப் போயொழியும்!
      பேன்தான் பெருமாளே? பேசு.
9.   பேசினால் போதும் பெருக்கெடுக்கும் வெள்ளமாய்
      வீசினால் போதும் துணி!
10. துணிவுனக்குச் சொத்தாகும்  தூக்கத்தை விட்டுத்
      துணிந்தால் எழும்புமுன் வீறு.




ஹக்கூ

ஹக்கூ
ஆசிரியா்(கள்) ஒரு முன்னோடி
          அவா்(கள்) பதித்த தடம் இன்றி
மாணவா்கள் வர இயலாது முன் ஓடி

-மு.சிவசுப்பிரமணியன்

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம்
          ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்குள் ஓட்டமும், நடையுமாய் மற்றவர்களை முந்திச்சென்று கொடைக்கானல் பேருந்தில் ஏறினான் மதன்.  நான்கு நாட்கள் தொடா் விடுமுறையால் பேருந்து இருக்கை முழுவதும் நிரம்பியிருந்தது. ‘இவ்வளவு வேகமாய் வந்தும் பயனில்லையே..’ என்று ஏமாற்றத்தில் மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டான்.
          ஒட்டுநா் இருக்கைக்குப் பின்புறம் மூன்றுபேர் இருக்கையில் இரண்டு அருட்சகோதரிகள் அமா்ந்திருந்தார்கள்.  நான்கு மணிநேரம் நின்றுகொண்டு போவது சிரமம்.  ‘அருட்சகோதரிகள் உடன் பிறந்த சகோதரிகள் போலதான்.. ஓரமாய் உட்காந்து கொள்ள அனுமதி கேட்டால் நிச்சியம் மறுக்க மாட்டார்கள்  என்ற  நம்பிக்கையில் அருகே போய் உட்கார அனுமதி கேட்க அவா்களும் சம்மதித்தார்கள்.  பேருந்தில் நிறைய பேர் தூய சலேத் அன்னை திருவிழாவிற்காக குடும்பத்துடன் பயணம் செய்தார்கள்.
          தனக்கு அடுத்துப் பின்னிருந்த இருக்கையில் அழுது அடம்  பிடித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அமைதிப்படுத்த அவன் பெற்றோர் அவனுக்கு பல வித்தைகள் காட்டி முயன்றுகொண்டிருந்தார்கள்.  அவா்களின் முயற்சிகள் எல்லாம் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராய் புலம்பிய நடுத்தர மக்களின் நாதியற்ற குரலாய் நீர்த்துப் போனது நேரஞ் செல்லச் செல்ல அழுகையும் அடம்பிடித்தலும் அதிகரித்துக்கொண்டு போனது மனிதனுக்கு எரிச்சலாய் இருந்தது பிள்ளையா? இல்லை பிசாசா? என்று வாயக்குள் முனங்கிக் கொண்டான் எத்தனை வாங்கித் தந்தும், எத்தனை வேடிக்கை காட்டியும் எல்லாவற்றையும் தூக்கி எறியும் தலைக்கனம் சுற்றியிருந்தவா்களுக்கெல்லாம் ஆத்திரத்தைக் கிளப்பியது.
          ‘இது மாதிரி புள்ளைகள் பெத்துக்குறதுக்கு பேசாம கல்யாணமே வேண்டாம்னு இருந்துருக்கலாம்.  பின்னிருந்து அவா்கள் காதில் விழும்படியாக பேசிக்கொண்டார்கள்.  ஆற்றாமையில் அந்தச் சிறுவனின் அப்பா தன் மகனை அடித்து நொறுக்கிவிட்டார்.  ‘ஈவு இரக்கமேயில்லாம இப்படியா மாட்ட அடிக்குற மாதிரி பச்சப் புள்ளய்ப் போட்டு அடிக்குறது.  மனுசனா? மருகமா? மீண்டும் பின்னிருந்து அதே குரல்.
          ‘என்ன செய்தாலும் விமர்சிக்கிற மன நிலை தொலைக்காட்சி விவாதங்களால் மக்களுக்கு கூடிப்போய்விட்டதோ?’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
          அடிவாங்கி அலறிய சிறுவனை அவன் அம்மா அணைத்துக்கொண்டு சமாதனப்படுத்தினார்.  அப்படியும் சமாதனமாகாமல் அடித்தவா் மன்னிப்பு  கேட்ட பிறகு அழுகை ஓய்ந்தது.  ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் நின்றுகொண்டு குதிப்பதிம், முன்னும் பின்னும் அமா்ந்திருந்தவா்களை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.  பேருந்தில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லையென்ற கவலையை அந்தச் சிறுவன் தன் சேட்டைகளால் தீர்த்துவைத்துக் கொண்டிருந்தான் ‘நம்மையும் இப்படித்தானே வளா்த்திருப்பார்கள்’ மனசுக்குள் நெருஞ்சி  முள்ளாய் ஏதோ குத்தியது போலிருந்தது.
          “அப்படியே நம்ம ஐயப்பன் மாதியே அடம்பிடிக்கிறான்ல..” அருட்சகோதரிகள் பேசிக்கொண்டார்கள்.  அவா்கள் பேசிக் கொண்டது மதனுக்கும் கேட்டது “சிஸ்டா்.. யார் அந்த ஐயப்பன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
          “எங்க அன்பகத்துல எட்டாம் வகுப்பு படிக்கிற பையன்” என்றார் ஒரு சகோதரி. “எட்டாம் வகுப்பு படிக்கிற பையனா இப்படி அடம் பிடிப்பான்” சந்தேகமாயக் கேட்டான் மதன்.  “இவனவிட பத்துமடங்கு அதிகம் சேட்டை பண்ணுவான் நாங்க தியானத்துக்குக் கிளம்புநோம்னு சொன்னதும், ‘அப்போ கொடியேத்துறதுக்கு  நீ இருக்க மாட்டியா கிறிஸ்டி, தேவியும் வருதா, நாங்களும் வர்றோம்’னு ஒரே அழுகை, சமாதனப்படுத்தி விட்டுட்டு வர்றதுக்குள்ள  போதும் போதும்னு ஆகிடுச்சு அவன் மட்டுமில்ல சரண்யா, அமலன், போதுமணி, நீதி, சக்கிவேல்னு  எல்லோருமே அடம் பிடிச்சு, சேட்டை பண்ணுவாங்க.  அதே அளவுக்கு பாசமாகவும் இருப்பாங்க.. அவா்கள் மன வளா்ச்சியில்லாதவங்கனு சொல்றது தப்பு, கடவுளோட செல்லப் பிள்ளைங்க எங்களுக்கும் செல்லப் பிள்ளைங்கதான்.  பத்துநாளு ரொம்பவே அவங்க எல்லாரையும் மிஸ் பண்றோம்” வருத்தப்பட்டார் மற்றொருவா்.
          ஆச்சிரியமாய் இருந்தது மதனுக்கு நல்ல புத்தியோடு இருக்கும் பிள்ளைகளுக்கே இந்தக் காலரத்தில் பாடம் நடத்தமுடியாத சூழலில்  சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படித்தான் பொறுமையாக, அன்பாக சொல்லிக் கொடுக்கிறார்களோ.. அதுவும் துறவற வாழ்க்கையில் பெற்றவா்கள், உடன் பிறப்புகளை, ஊரை, உறவுகளை விட்டுப் பிரிந்திருப்பது எப்படித்தான் முடிகிறதோ? அதற்கெல்லாம் தனி மனப்பான்மை வேண்டும்.
          “உங்க வீடுகளுக்கு அடிக்கடி போக முடியுமா சிஸ்டா்? ” கேட்டான் மதன்
          “ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை போக அனுமதி கிடைக்கும்.  ஏதாவது முக்கியமா போயே ஆகனும்னா அனுமதி கேட்டு போய்ட்டு வரலாம்”
          “குடும்பத்தையே பார்க்காம எப்படித்தான் இருக்க முடியுது உங்களால..”
          “யார் சொன்னா? குடும்பத்தையே பார்க்க முடியலன்னு .  தினம் தினம் நாங்க பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்.  எங்களைச் சுத்தியிருக்குறவங்க எல்லாரும் எங்க குடும்பம் தான்.  இவங்கள நாங்க பார்த்துக்கிருவோம் அவங்கள கடவுள் பார்த்துக்கிடுவாரு”
          வாயடைத்துப் போய் நின்றான் மதன்.  காலையில் சாப்பிட்டுக் கிளம்பச் சொன்ன அம்மாவை, பத்திரமாகப் போய்ட்டு வரன்னு சொன்ன அக்காவை தாமதமாய்க் கிளம்பிய அவசரத்தில் எரிந்து விழுந்து காயப்படுத்திய மனசுக்குள் காட்சியாய் ஓடியது.
          அருட்சகோதரிகளின்  சகிப்புத்தன்மையும், அன்பும் மனசுக்குள் மலையளவு உயா்ந்து நின்றது விட்டுக் கொடுப்பதும், கடைசிவரை விடாமல் இருப்பதும் தானே குடும்பம்’, அம்மாவிடமும், அக்காவிடமும் மன்னிப்பு கேட்க அலைபேசியை எடுத்து அழைக்கத் தொடங்கினான் மதன்.
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்