வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

‘ஆசிரியா் தினத்தைக் கொண்டாடுவதைக் காட்டிலும் ஆசிரியா்களைத் தினமும் கொண்டாடுவதே சிறந்தது’

தி.பி 2048 (கி.பி.2017)                                     ஆவணித்திங்கள்
தேன் - 1                                                         துளி - 8





“அறம், பொருள், இன்பம் அருகாது பெருகட்டும்..”
          புவியில் எத்தனை எத்தணையோ பணிகள் இருப்பினும் கல்விக்கண் திறக்கும் ஆசிரியரையும், பிணி தீர்த்து உயிர்காக்கும் மருத்துவரையும் அவா்களாற்றும் பணி என்னும் நிலையைக் கடந்து உயரிய தொண்டாகப் போற்றுவா் சான்றோர்.  அதிலும் ‘எங்கு  நடப்படுகிறாயோ, அங்கு மலராகு’ என்பது ஆசிரியா்க்கேயுரிய தனிச்சிறப்பு
          ‘யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியா், போதிப்பவா் எல்லாம் ஆசிரியா் ஆகா’ என்பார் அறிஞா் கதே.
          ‘குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
         கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
         நிலமலை நிறைகோல் மலா்நிகா் மாட்சியும்
         உலகிய லறிவோ குயா்குண மினையவும்
         அமைபவன் நூலுரை யாசிரி யன்னே’
என்று ஆசிரியா்க்குரிய தகுதிகளை அழகுறச்சுட்டுகிறது நன்னூல். ஓா் ஆசிரியா் என்ன நடத்துகிறார் என்பதை விட, அவா் எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியம்.  பாடம் நடத்தி முடிப்பவரை விட பாடமாய் நடந்துகாட்டும் ஆசிரியா்களையே மாணாக்கா் குமுகாயம் என்றும் நினைவில் நிலைநிறுத்திப் போற்றும்.
          வளமான குமுகாயம் தோன்றிவளர ஆசிரியா்களின் பங்கு அளப்பரியது.  ஒவ்வொரு ஆசிரியருக்கும் அறிவார்ந்த, மானுடநேயமிக்க, சிற்பியாக, அறியாமைப் பிணியகற்றும் மருத்துவராகத் திகழ வேண்டிய பொறுப்பு உள்ளது.  அப்பொறுப்பை ஆசிரியா்கள் யாவரும் தங்கள் வாழ்நாள் கடமையாக மிகச்சரியாக செய்து முடித்தால், எந்தநிலையிலும் தன்னிலை தாழாமல் மானுடம் வெல்லும், அறம் பொருள் இன்பம் அருகாது பெருகும்.  அல்லவை தொலைந்து நல்லவை தழைக்கும்.  இஃது ஆசிரியப் பெருமக்களால் மட்டுமே இயலும்,  அத்தகைய ஆசிரியப் பெரியோரை உலகம் கொண்டாடி மகிழவேண்டும்.
‘ஆசிரியா் தினத்தைக் கொண்டாடுவதைக் காட்டிலும்
ஆசிரியா்களைத் தினமும் கொண்டாடுவதே சிறந்தது’
ஆசிரியா் நாள்  நல்வாழ்த்துகள்..
அன்பின் வாழ்த்துகளுடன்,
                                                                                                   தேமதுரம்- ஆசிரியா்குழு


ஆசிரியர்
.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
 கா.சுபா 

ஆசிரியர் குழு 
இரா.கார்த்திக்
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
மீனாட்சி

கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255


வியாழன், 17 ஆகஸ்ட், 2017

வலையில் வந்தவை

வலையில் வந்தவை
தேசியக் கொடி ஏற்றும் போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?
          நம் தேசியக் கொடி மேலே ஏறி பட்டொளி வீசிப்பறப்பதற்கு முன் அதில் வைக்கப்பட்டுள்ள மலா்கள் கீழே வந்து விழுவதைப் பார்த்து கைதட்டுகிறோம்.  ஆனால் அதற்குள் ஒரு சோக சம்பவம் அடங்கி இருக்கிறது.  அது என்ன தெரியுமா? இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்து மலா்கள் கீழே விழுந்திருக்கிறது என்பதைத்தான் இந்தக் கொடி மேலே ஏறும் போது மலா்கள் கீழே விழுந்து அதனை ஞாபகப்படுத்துகிறது இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும் போது இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவா்களை சுதந்திரப்பேராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக்கொண்டுதான் இருந்திருப்போம்.

-ஆ.சகுந்தலா

சோறு கண்ட இடம் சொர்க்கம்

சோறு கண்ட இடம் சொர்க்கம்
          என்னும் பழமொழி சோறு கிடைத்தால் போதும், வேறு எதைப்பற்றிய கவலையும் இன்றி அங்கேயே தங்கி அதையே சொர்க்கமாகக் கருதி வாழமுற்பட்டு விடுவார்கள் மனிதா்கள்  என்று சாப்பாட்டையே முக்கியமாகக் கருதும் சாப்பாடு்ப் பிரியா்களுக்காகச் சொல்லப்பட்டதாக இன்று கேலிக் குறியதாக இப்பழமொழி பயன்படுத்தப்பெறுகிறது.  ஆனால் இது தீவிர இறை பக்தா்களை முன்னிறுத்திச் சொல்லப்பட்டதாகும்.  தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் அன்னாபிடேகம் நிகழும்.  இந்நாளில் சிவலிங்கத்தைச் சோற்றால் மூடி வைத்திருப்பார் அன்று மாலையில் மேளதாளத்துடன் இறைவன் மீதுள்ள பெருஞ்சோற்றினை எடுத்துச் சென்று குளத்தில் கரைப்பா் குளத்தில் வாழும் உயிரினங்களுக்கும் அன்று உணவிடுதல் நிகழும்.  சோற்றால் மூடியுள்ள இறைவனை வழிபட்டால் சொர்க்கப்பேறு நிச்சியம் கிட்டும் என்பதைத் தான் இப்பழமொழி உணா்த்துகிறது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

வாழை இலைக் கொலுக்கட்டை

வாழை இலைக் கொலுக்கட்டை
தேவையான பொருட்கள்
1. பச்சரிசி மாவு - 3 / 4 கப்
2. பாசிப்பருப்பு - 1 / 2கப்
3. வெல்லம்   -  3  / 4கப்
4. நெய் - 2 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. ஏலம் - தேவையான அளவு (பொடித்தது)
செய்முறை
          வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  பாசிப்பருப்பை  குக்கரில் வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு வானெலியில் நெய் உற்றி வெல்லம் பாகையும், மசித்த பாசிப்பருப்பையும் போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும் புரணம் தயார்.
          பின்பு பச்சரிசி மாவில் சிறிது உப்புச் சேர்த்து சுடுதண்ணீரைச் சறிது, சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வாழை இழையை சிறிது சிறதாக வெட்டி எடுக்க வேண்டும்.  வாழை இலையின் நடுவில் மாவினை உருட்டி வைத்து அதனை வட்டமாகத் தட்டவும்.  பின்பு  அதன் மாவினால் மூடவும் பின்பு வழையில் இலையில் ஓரங்களில் சிறிது நீா் தடவி மடக்கவும் இவ்வாறு செய்து வைத்த கொடுக்கட்டையை இட்லிச் சட்டியில் வைத்து வேக வைத்தால் வாழை இலைக் கொழுக்கட்டை தயார்.  வாழை இலையின் மணம் கொழுக்கட்டையில் ஏறி நன்கு சுவை மிகுந்ததாக இருக்கும்.  ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்.

-ந.முத்துமணி

சுதந்திர தினம்

சுதந்திர தினம்
துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவா்களே...
ஓய்வாக நாம் வாழ
உயிர்விட்ட சிங்கங்களே..
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களே...
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட சான்றோர்களே..
இந்த சுதந்திர நாளில்
நம் இதய அஞ்சலியை
செலுத்துவோம்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

-சு.லாவண்யா

கலியின் ஆரம்பம் (மகாபாரத பதிவு)

கலியின் ஆரம்பம்
(மகாபாரத பதிவு)
          பஞ்சபாண்டவா்களில் ஒருவரான சகாதேவன் சந்தைக்குள் நுழைந்தான் அழகான குதிரையை பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, குதிரை என்ன விலை? என்று கேட்டான் குதிரையின் உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினால் குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார் சகாதேவன் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றார்.
          குதிரையின் உரிமையாளர் “நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் கூறுங்கள்
          ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய  கிணறுகளை நிரப்பலாம் ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து.  மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.  இது ஏன்? நன்றாக யோசித்து பதில் கூறுங்கள்” என்றார்.  சகாதேவனால்  பதில் கூற முடியவில்லை அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
          சற்று நேரத்தில்......... சகாதேவனை தேடிக் கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான்.   அவணும் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்
          குதிரையின் உரிமையாளா், நகுலனிடம் ஒரு ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.  நீங்கள் பதில் கூறிவிட்டு குதிரையை இலவசமாகவே பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
          துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து அடுத்த பக்கம் போய்விட்டது.  ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையில் வழியாகப் போக முடியவில்லை.  ஏன்? என்றார்.  நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை.  ஆவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சகாதேவனுடன் சோ்ந்து உட்கார்ந்துவிட்டான்.
          அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜீனனும் அங்கு வந்தான்.  அவனும், குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய்விலை கேட்டான் குதிரையின் உரிமையாளர் அர்ஜீனனிடமும் கேள்வி கேட்டார்.
          “ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது.  அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.  ஆனால் அறுவடை காலத்தில் அந்த வயல் காட்டில் எதுவும் இல்லை வேலியெல்லாம் அப்படியே இருந்தது அப்படி இருந்தும்   விளைந்த தானியங்கள் எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் கூறிவிட்டு, குதிரையை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.  அர்ஜீனனால் பதில் கூற முடியவில்லை அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
          சகோதர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க அரண்மனையில் அவா்களைக் காணாமல், தர்மர் திகைத்தார் பீமனைக் கூப்பிட்டு, “தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை நீ போய், அவா்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா! என்றார்.
          பீமனும் போய்  தேடிப்பிடித்து மூவரையும் அழைத்து வந்தான் அரியணையில் அமர்ந்திருந்த தர்மா் அவா்களைப் பார்த்தும் அர்ஜீனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை.  எங்கே போய் இருந்தீர்கள்? எனக் கேட்டார்.  அதற்கு அர்ஜீணன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட கேள்விகளையும் கூறினான்.  அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார் அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.  “அண்ணா! நீங்கள் நடுங்கும் படியாக என்ன நடத்தது?  எனக் கேட்டார்கள்.
          தர்மர் பதில் சொல்லத்தொடங்கினார் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை அம்மூன்று கேள்விகளும் குறிப்பிடுகின்றது. என விரிவாகக் கூறத் தொடங்கினார்
          உங்களிடம் கேள்வி கேட்டவன் கலிபுருஷன் அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.  ஏழு சிறிய கிணறு என்பது அவா்களது பிள்ளைகள்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவா்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள் இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது.  ஆனால் அந்த பிள்ளைகளோ அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்களை பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள் இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.
          இரண்டாவது கேள்விப்படி இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும் ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும் இதைத்தான் யானை போன  வழியல் அதன் வால் போக முடியவில்லை என்றார்.
          மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களையும் பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக்  குறிக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவா்களை அழித்துவிடுவார்கள்.  மக்கள் தான் வறுமையில் வாடுவார்களே தவிர அதிகாரிகள் செழிப்பாகத் தான் இருப்பார்கள் இதைத்தான் வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது எனக் கூறி முடித்தார் தர்மர்.

-வ.மீனாட்சி

ஔவையின் ஆத்திச்சூடியும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியும்

ஔவையின் ஆத்திச்சூடியும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியும்
முன்னுரை
          சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குவது ஆத்திச்சூடி.  அவ்வையின் ஆத்திச்சூடி ஆரம்பப் பள்ளி முதல் பாடமாய் பிஞ்சு நெஞ்சங்களில் பதிந்து நல்லறத்தைப் போதிக்கும் நீதி நூலாக விளங்குவது.  பாரதியின் ஆத்திச்சூடி தற்கால இளைஞா்களுக்கு மன வலிமை அளிக்கும்  குளிகை போன்றதாகும்.  இவ்விரு நூல்களும் அமைப்பால் ஒன்றுபடினும் சில பல கருத்துக்களில் முரண்பாடாகவும் உள்ளன. ஔவை ஆத்திச்சூடி காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டாகும்.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியின் காலம் 20-ஆம் நூற்றாண்டாகும்  இவ்விரு நூல்களும் அமைப்பால் ஒன்று படினும் சில, பல கருத்துக்களில் முரண்பாடாகவும்  உள்ளன.  இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டுக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆத்திச்சூடி - பாவகை
          ஆத்திச்சூடி ஓரடி உடையதாகும்.  ஓரடிக்குள்ளேயே பொருள் முழுமை பெற்றுவிடும்.  இத்தகைய ஓரடிக் கவிதைகள் பல கொண்டு விளங்குவது ஆத்திச்சூடி
          தொல்காப்பியர், சூத்திரத்திற்குரிய இலக்கணம் கூறும் போது ஆத்திரம் என்பது கண்ணாடிக்குள் அதன் நிழல் ஒரு பொருமலையே தோன்றுவது போல ஐயுற்று ஆராய்தல் இன்றி கூறப் பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும் யாப்பினுள் ஏதாவது ஒன்றின் வடிவமைத்து அமைப்பதாகும் என்கிறார் இதனை,  
          “ஆத்திரநி தானே
         அடி நிழலின் அறியத் தோன்றி
          நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க
         யாப்பினும்  தோன்ற யாத்து அமைப்பதுவே” (தொல்.1425 செய்யுளியல் 167)
என்னும் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கிறது.  இவ்விலக்கணத்திற்கேற்ப ஆராய்வதற்கு இடமின்றித் தெளிவாகப் பொருள் விளங்குமாறு அமைந்திருப்பது ஆத்திச்சூடி ஆகும்.  பொருள் தெளிவுடையதாய் இருசீர் அமைந்த ஓரடியாய் வருவது ஆத்திச்சூடியின் இலக்கணமாகிறது.  ஔவையின் ஆத்திச்சூடியும், பாரதியின் ஆத்திச்சூடியும் இவ்வாறே அமைந்துள்ளன.
அமைப்பும் எண்ணிக்கையும்
          ஆத்திச்சூடி தமிழ் எழுத்துக்களின் அகர வரிசையில் பாடப்பட்டது ஆகும். “உயிரும் உயிர்மெய்யுமான தமிழ் எழுத்துக்கள் நிரலே முதல் எழுத்துக்களாக வைத்து எழுதப்பட்டது.  ஔவையின் ஆத்திச்சூடி உயிர் எழுத்துக்கள் வரிசையில் 12யும் ஆய்த எழுத்தில் ஒன்றும் அகரத்தைக் கொண்ட க,ங,ச,ஞ... உயிர்மெய் வரிசையில் 18யும் க,கா, கி,கீ என்னும் அகர வரிசையில்  12 யும் சகரம், தகரம், நகரம், பகரம், மகரம், வரம் ஆகிய வரிசைகள் ஒவ்வொன்றிலும் 11 யும் ஆக காப்புப் பாடல் நீங்கலாக மொத்தம் 108 பாக்கள் உள்ளன.  மொழி முதல் வரைாத எழுத்துக்களுக்கு உயிரெழுத்தைச் சேர்த்துப் பாடப்பட்ட வையாகும்.
          பாரதியின் ஆத்திச்சூடியில் உயிரெழுத்து  வரிசையிலும் ககரம், சகரம், உயிர்மெய், எழுத்துக்கள் வரிசையிலும் ஒவ்வொரு வரிசைக்கும் 12-யும், நகர வரிசையில் 5-யும்  தகர வரிசையில் 11-யும், யகர வரிசையில் 3-யும், ரகர வரிசையில் 8-யும், லகர வரிசையில் மயும், வகர வரிசையில் 8-யும் ஆக மொத்தம் 110 பாக்கள் உள்ளன.  இவற்றில் சிலவற்றில் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக வட மொழிக் சொற்கள் வந்துள்ளன.
ஒற்றுமை வேற்றுமைகள்
          இரு, ஆத்திச்சூடிகளும் செய்யத் தகுவனவாகவும் செய்யத் தகாதவனவாகவும் பல கருத்துக்களை  கூறுகின்றது.  இரண்டு ஆத்திச்சூடியின் கருத்துக்களிலும் ஒற்றுமைகள் பல உள்ளன.  இருப்பினும் காலத்தால் முற்பட்டதாகவுள்ள அவ்வையின் ஆத்தச்சூடியிலிருந்து காலத்தால் பிற்பட்ட பாரதியின் ஆத்திச்சூடி சில கருத்துகளில் முரண்பட்டு நிற்கிறது.
ஒற்றுமைகள்
          “ஆத்திச்சூடி”  என்ற பெயர் செய்யுள் முதற்சொல்லால் வந்ததாகும்.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் உள்ள புதிய என்னும் அடையை நீக்கிவிட்டால் இரு ஆத்திகளும், ஆத்திச்சூடி என்ற முதற்சொல்லால் பெயரைப் பெற்றவைகளே ஆகும்.
          ‘ஆத்திச்சூடி’ செய் செய்யாதே என்னும் கட்டளை வாக்கியத்துடனே அமைவதால் இவ்விருவரின்  ஆத்திச்சூடியிலும் அதே வாக்கிய வகையே அமைந்திருப்பதும் இரு ஆத்திச்சூடிகளும் நீதி  உரைகளாக இருப்பதும்  இவ்விரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளாகும் மேலும் ஆத்திச்சூடி என்னும் அமைப்பில் ஔவையின் ஆத்திச்சூடி, பாரதியின் ஆத்திச்சூடிக்கு அடித்தளமாக அமைவதால் அமைப்பிலும் இலக்கண முறையிலும் இரண்டும்  ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன.
          சொல்லுவது தெளிந்துசொல் என்று பாரதியின் ஆத்திச்சூடியும், ‘பிழைபடச் சொல்சேல்’ என்று ஔவையின் ஆத்திச்சூடியும் பேசும் சொற்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்கின்றன.
          இரு ஆத்திச்சூடிகளிலும் தெய்வ நம்பிக்கை உண்டு மேலும் ‘வீடுபெற நில்’ என்று ஔவையும், ‘தவத்தினை நிதம்புரி’ என்று பாரதியும் வீட்டு நெறியை வலியுறுத்துகின்றனா்.  வணத்தினைப் பெருக்கு என்று இரு ஆத்திச்சூடிகளும் கூறுகின்றன. நோய்க்கு இடங்கொடுக்கக் கூடாது தருமம் செய்ய வேண்டும்.  நியாயம் பேச வேண்டும் என்று இருவரும் உரைக்கின்றனா்.
          பல  ஒற்றுமைகள் இவ்விரு ஆத்திச்சூடிகளிலும் உள்ளன.
வேற்றுமைகள்
          இரு ஆத்திச்சூடிகளும் காலத்தால் வேறுபடுகின்றன.  ஆத்திச்சூடி காப்புச் செய்யுளுடன் 109  பாக்களையும் பாரதியின் ஆத்திச்சூடி 110 பாக்களையும் கொண்டுள்ளன. ஔவையின் ஆத்திச்சூடியில் அகரம் சோ்ந்த க, ங, ச, ந வரிசையில் பாக்கள்உள்ளன.  இதனால் க, ச, த, ந, ப, ம, வ ஆகியவற்றை முதலெழுத்தாகக் கொண்ட பாக்கள் இருமுறை வருகின்றன.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் அகரம் சேர்ந்த க, ங, ச, த, ந, ப, ம, வ ஆகியவற்றை முதலெழுத்தாகக் கொண்ட பாக்கள் இருமுறை வருகின்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் அகரம் சேர்ந்த க,ங, ச, ஞ....18 எழுத்துக்களைக் கொண்ட வரிசைப் பாக்கள் இல்லை.  ஆகையால் அவ்வரிசையில் வரும் எழுத்துக்களை முதலெழுத்தாகக் கொண்ட பாக்கள் இருமுறை வருவதில்லை ஒரே முறையே வருகின்றன.
          ஔவையின் ஆத்திசூடியில் ஆய்த எழுத்தைக் கொண்ட பா உயிரெழுத்தை முதலாகக் கொண்டு உள்ளது.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் ஆய்த எழுத்து கொ்ணட பா இல்லை ஔவையின் ஆத்திச்சூடியில் நு-வை முதலெழுத்தாகக் கொண்ட பா உள்ளது.  பாரதியின் ஆத்திச்சூடியில் ஞ.கர வரிசையில் எழுத்தில் ஞ-வை முதலெழுத்தாக கொண்ட பா ஒன்று உள்ளது.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் நகர வரிசையில் உள்ள எழுத்துக்களை முதலெழுத்தாக கொண்ட பாக்கள் 5 உள்ளன.  மேலும் ய,ர,ல ஆகிய  வரிசையிலும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் பாக்கள்  உள்ளது, ஔவையின் ஆத்திச்சூடியில் இவ்வரிசைகளில் பாக்கள் இல்லை.  இவை முதலெழுத்துக்களைக் கொண்டுள்ள விதத்திலும் பாக்களின் எண்ணிக்கையிலும் உள்ள வேறுபாடுகள் ஆகும்.
முடிவுரை
          அவ்வகையில் ஆத்திச்சூடிக்கும் பாரதியின் புதிய ஆத்திச்சூடிக்கும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுவதற்கு காரணம் அவை உருவான காலமே ஆகும்.  அவ்வையார் வாழந்த காலம் சமய வேற்றுமையும்  பிறா் நாட்டை  கைப்பற்றி ஆள வேண்டும் என்றும் அரசா் போக்கும் இருந்தது.  அதனால் அவ்வையின் பாக்கள் சமய நல்லிணக்கம் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளன.  பாரதியின் காலத்தில் நாடு அடிமைப்பட்டிருந்தது.  அதனால் நாட்டு மக்கள் விடுதலை பெற வேண்டி அவரின் பாடல்களில் புரட்சிப்போக்கும் காணப்பட்டது.

-கு.கங்காதேவி

நிமித்தம்

நிமித்தம்
          நிமித்தம் என்பது பின்னா் நிகழும்   நன்மை தீமைகளை  முன்னரே அறிவிக்கும் குறி என்பா் இந்நிமித்தம் பல்வேறு வகையாகப் பாகுபகுத்திப் பார்ப்போமானால் பல அரிய  செய்திகளை அறிதல் கூடும் பொதுவாக நற்செயலையும், நற்பயனையும் காட்டும் குறியினை ‘நன்னிமித்தம்’ எனவும், தீச்செயலையும் தீமையையும் காட்டும் குறியினைத் ‘தீ நிமித்தம்’ எனவும், தீச்செயலையும் தீமையையும் காட்டும் குயினைத் ‘தீ நிமித்தம்’ எனவும் வழங்குவா்.  இந்நிமித்தங்கள் பல்வேறு பொருள்கள் பற்றியும் செயல்கள் பற்றியும் எழுந்தன.  மரம், பறவை, விலங்குகளையும் மாந்தரையும் அடியொற்றி அவை எழுந்தன.  மாந்தா் கண்ட கணவுகளும் நிமித்தங்களாய் அடைந்தன.
மரம்
          உன்னம் என்பது வருவகை மரம் இம்மரம் தளிர்த்துத் தழைத்திருப்பின், அரசனுக்கு நன்மையாகும்.  கரித்து காட்டின் தீமையாம்.  படையெடுத்துச் செல்லும் வேந்தனும் படை மறவா்களும் இந்நிமித்தம் பார்த்துப் புறப்படுவா்.  தொல்காப்பியா் புறத்திணையியலில், “உடல் வேந்தடுக்கிய உன்ன நிலை” (தொல்.புறத்.63) என்று கூறுவா்.
          சேரமன்னன் நார்முடிச் சேரலை வெற்றி கொள்ள விரும்பிய பகைவா்கள் உன்ன மரத்தினை நிமித்தம் வேண்டினராம்.  விரிந்து தழைக்க வேண்டிய உன்னம் கரிந்து உதிர்ந்து காட்டி அவா்கள் பெறும் தோல்வியினை முன்னரே காட்டியதாம்.
          “பொன்னி னன்ன பூவிற் சிறியிலை
          புன்கா லுன்னத்துப் பகைவன்” (பதிற்.61)
என்று செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பொய்யாநாவிற் கபிலா் ‘உன்னத்துப் பகைவன்’ என்றே பாராட்டுகின்றார்.
பறவை
          பறவைகள் ஒலிப்பதையும் பறப்பதையும் கொண்டு நிமித்தங்கள் எழுந்துள்ன.  ஒரு நாட்டில் “புதுப்புள்வரினும் பழம்புள் போகினும் தீயநிமித்தம்” (புறம்.130) என்று புறநானூறு கூறும்.  ஆனிரையிருக்கும் காட்டில் காரியென்னும் பறவை கத்தினாலும் அது தீய நிமித்தமாகக் கருதப்பட்டது.  ஒருவா் வெளியிற் புறப்படும்போது பறவைகளில் இவை இவை எதரில் வந்தால் இன்ன இன்ன நிமித்தம் என்று கூறியுள்ளனா்.
          காக்கை கரைந்தால் விருந்து வரும் என்று எண்ணுகின்ற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. குறுந்தொகையில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய பாட்டு இதனை அறிவிக்கும். “விருந்து வரக் கரைந்த காக்கையது  பலியே” (குறுந்.20) என்பது அப்பால் தொடராகும்.
          பொருள்வயிற் பிரிவினால் தலைவனைப் பிரிந்த தலைவி தன் காதலன் பாலைநிலத்துச் சென்ற காட்சியினைக் கூறும் போது, ‘தலைவன் கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது வழிச்செல்லும் மனிதா்கள் நிமித்தமாகச் கொள்ளும்படி  தங்குகின்ற பாலை  நிலத்திற் சென்றனா்’ எனக் கூறினார். 
          கழைதின் யானையார் என்னும் சங்கப் புலவா் வரையாது சுரக்கும் கொல்லிமலைத் தலைவனாகிய வல்லில் ஓரியைப் பாராட்டிப் பாடிய புறநானூற்றுப் பாடலில், இரவலா் புரவலரிடம் புள்ளும் பொழுதும் பார்த்துப் புறப்பட்ட செய்தியினைக் கூறுவா் இரவலா் பரிசில் பெறாதபோது தாம் நாடி வந்தவரைப் பழித்துப் பேசார் தாம் புறப்பட்ட நேரத்தையும் புள் நிமித்தத்தையுமே பழிப்பார் ‘எனக்கு இல்லை யெனினும் உன்னைப் புலவேன் வானம்போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நீ வாழி’ என்று புறநானூற்றுப் புலவா் வாழ்த்துகின்ற காலத்திலும் நன்னிமித்தமும் தீ நிமித்தமுமே வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் எனக் கருதும் உள்ள நிலையையும் உணரமுடிகிறது.
          “புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
          உள்ளிச் சென்றோர்ப் பழியலர்” (புறம்.204)
என்னும் பகுதி இதனை நன்கு தெளிவுறுத்தும்.
விலங்குகள்
          விலங்குளில் சில வழிமறித்து ஓடுமாயின் அவை தீ நிமித்தம் காட்டும் குறிகள் என நம்பினா் இன்றும் கூட கழுதை கத்துவது நல்ல நிமித்தமாகவும், நாய் அழுகுரலெழுப்புவது தீ நிமித்தமாகவும் கருதப்படுகிறது.  பல்லி ஒலிக்கும் இடத்தையும் அதன் ஒலியையும் கொண்டு நன்மை தீமைகளைக் கருதுவா்.
          வினை முற்றி மீண்ட தலைமகன் பேரார்வத்தோடு தலைவியிடம் செல்லுகின்றான்.  அப்போது தேர்ப்பாகனிடம் பின்வருமாறு உரையாடுகின்றான்.  ‘என் அன்பு வருகையினை எதிர்நோக்கி என் இல்லத் தலைவி இல்லத்தின் கன் நிமித்தம் கேட்டற்குரிய இடத்திலே நிற்கின்றாள்.  நினைந்து நினைந்து,  நெகிழ்ந்து நெகிழ்ந்து நன்னிமித்தத்தைக் குறிக்கும் பக்கத்திலே பல்லி சொல்லுந்தோறும் நின்று மகிழ்கின்றாள்.
          “---------------------------------பல் மாண்
          ஓங்கிய நல்லி லொருசிறை நிலைஇப்
          பாங்கா்ப் பல்லி படுதொறும் பரவிக்
          கன்றுபுகு மாலை நின்றோள்”  (அகம்:9)
என்று அகநானூறு இதனை அழகுறக் கூறும்.
முடிவுரை
          நிமித்தங்கள் அனைத்தும் அச்சத்தின் காரணமாகவே தோன்றியுள்ளது எனலாம்.  வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் தங்களுடைய ஆற்றல்களை அதிகரித்துக் கொள்ள இவற்றை உருவாக்கினா்.  பல பண்பாட்டு நிலைகளிலுள்ள மக்கள் குறிப்பிட்ட சில நம்பிக்கைகளை உடையவா்களாயிருப்பதும் இங்கு எண்ணுதற்குரிய ஒன்றாகும்.

-அ.ரா.பானுப்பிரியா

மரபு வழித் தொடா்பில் இசைக்கருவிகள்

மரபு வழித் தொடா்பில் இசைக்கருவிகள்
முன்னுரை
          தமிழிலக்கியங்களில் மக்கள் திருவிழா, திருமணம், படையெடுப்பு போன்றவற்றை முரசறைந்து தெரிவித்துள்ளான் முந்தைய நாளில் அரசுச் செய்திகளையும் முரசறைந்து தெரிவிக்கும் வள்ளுவ முதுமகன்  நாள் கணித்து அறிவுறுத்தினான் மேலும் அரசின் செய்தி மட்டுமல்லாது மன்னனின் துயில் கொள்ளுதல், கோயில் திருவிழா, புகழ் கொடை, போர் வெற்றி வாழ்த்துதல் போன்றவற்றிலும் இசைக் கருவிகளைத் தகவலாகக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முரசு
          போர்ச் செயலுக்கு பலவாறு பயன்படும் முரசை, மன்னருக்கு நிகராக போற்றி வழிபாடு நடத்தி வணங்குவதை மரபாகக் கொண்டிருந்தனா்  பண்டைத் தமிழா்கள்.
          முரசையுடைய மூவேந்தரும் குறுநில மன்னரும் நமக்குள் ஒன்றாயக் கூடி ஒரு செயலைக் செய்வதாகக் முடிவுச் செய்து பகைவரை அச்சம் கொள்ளும் படி ஒலி எழுப்பும் முரசில் உறையும் கடவுளை வழிபட்டனா் என்பதை,
          பணைகெழு வேந்தரும் வெளிரும் ஒன்று மொழிந்து
         கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க
         முரண்மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிரக்
         கடுஞ்சினக் கடாஅய் முழங்கு மந்திரத்து (பதிற்.30: 30-34)
எனும் பாடலடியில் போர்க்களத்தில் பகைவா்கள் வெற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக முரசை தெய்வமாக நினைத்து வழிப்பட்டார்கள் என்பதும் பதிற்றுப்பத்து (17:  5-7) எனும் பாடலடியில் போர்க்களத்தில் பகைவா்களை வென்று கொண்டு வரும் கடம்பறுத்துச் செய்த பெரிய முரசின் முன் வெற்றியைப் புகழுந்தும் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு என கருதி அம்முரசிற்கு குருதிப் பலி கொடுத்து வழிபட்டார்கள் என்பதும் அறியமுடிகிறது.
          மேலும் போர்க்களம் சென்று வீரர்க்கு உற்சாக மூட்டுவதற்காக முரசைப் பயன்படுத்தினார்கள் என்பதை (புறநா.394: 6-9)  ஒரு நாட்டின் போர்மறவன் மற்றொரு நாட்டின் மறவனிடம்,
          கல்லென் பாசறைப் பல்சான்றீரே
         முரசு முழங்கு தானைதும் அரசும் ஓம்புமின் (புறநா. 301: 1-5)
என் நாட்டின் அரசனைப் பார்த்துக் கொள் என்று முரசறைந்து தெரியப்படுத்தினான்.
          சோழன் நலங்கிள்ளியின் கோயில்களில் இனிமையான முரசை முழங்கி வணங்கினார்கள் (புறநா.29.8)
தண்ணுமை பறை
          தண்ணுமையின் ஒலி உயிரினங்கள் அஞ்சுமளவிற்கான அதிர்வுகளையும் அதிவலைகளையும் கொண்டது.
          வெண்ணெல் அரியுநா் தண்ணுமை வெரீஇச்
         செங்கண் எருமை இளம்பரி எருத்தல்  (மலைபடு.4710472)
எனும் பாடலடியில் வெண்ணெல்லை அறுப்பார் கொட்டிய பறையின் முழக்கத்தைக் கேட்டு எருமைகளும் பறவைகளும்அஞ்சி ஒடினது இதே கருத்தினை (புறநா. 348:1-4, நற்.350:1-2, அகநா.40:14-18) புலப்படுத்துகிறது.
பறை
          பறை என்பது ஒருவகை இசைக்கருவியாகும்.  இதை உழவா்கள் பயன்படுத்தினார்கள் இதனை,
          புதல்தளவில் பூச்சூடி         
          அரிப்பனதால் புள் றுப்ப  (புறநா.395: 6-7)
          கழி சுற்றிய விளை கழனி
          அரிப்பறையில் புள் ஒப்புந்து (புறநா. 396 : 4-5)
எனும் பாடலடியில் பெண்கள் தங்கள் நிலத்தில் மேய வரும் பறவைகள் அரிப்பறை இசையை அடித்து விரட்டினார்கள்.
          புறநானூற்றில் பாலைத்திணை மக்கள் தங்களின் திருமண நாளில் பறை அடித்துக் தெரிவித்ததை “இரும் பொறை கிணை மகன்”  எனும் வரி குறிப்பிடுகிறது.
முழவு
          கொல்லி மலைக்கும் அதனையொட்டிய மலைப்பகுதகளும் தலைவனாக விளங்கும் ஏழு வள்ளல்களின் ஒருவரான ஒரியைப் முடிவு போன்ற இசைகளை இசைத்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக என்று வாழ்த்துப் பாடுகிறார்கள். இதை (புறநா.152: 14-17) பாடலடி விளக்கும்.
சங்கு
          சங்கு என்பது மங்கள நாளிலும், அமங்கள நாளிலும் இசைக்கும் கருவியாகும்.  இதை மக்களுடைய திருமண நிகழ்வு போன்ற மங்கள நாளில் சங்கினை முழங்கினா்கள் என்பதை புறநா.388.2 விளக்கும் பழந்தமிழா்கள் மற்றொரு பாடலில் கலைப் பொழுதை சங்குகளின் இசையினை எழுப்பி  வரவேற்றனா் என்பதை,
          இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
          இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி (புறநா.397: 5-6) இப்பாடலடி விளக்குகிறது.
கிணைப் பறை
          பாணா்கள்  அதிகாலையில் கிணைகொட்டி மன்னரைத் துயில் எழுப்பினா் என்பதும் பாணா்களின் வறுமையானது மறைந்துப் போனது என்றும்
          எஃகு இருள் அகற்றும் ஏமம் பாசறை
          வைகறை அரவம் கேளியா்! பல கோள் (புறநா.397 7-11)
முடிவுரை
          அரசா்களின் வாழ்வியலின் ஓா் அங்கமாக இசைக்கருவிகள் பயன்பட்டனா்.  எந்தபொரு செயலைச் செய்வதற்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தி மக்களுக்குத் தகவலை அறிவுறுத்தினார்கள் தங்களுடைய வறுமையை நீக்குவதற்கும், போர்க்களத்தில் மறவனின் வீரத்தைக் கண்டறியவும் இசைக் கருவிக்ள தகவலாக இடம் பெற்றுள்ளன.

க.கலைச்செல்வி

மனித உறவுகள்

மனித உறவுகள்
இரு நண்பா்கள் பாலை வனத்தில் பயணம் செய்தனா்.  வெயிலும் பாலைவன சுடுமணலும் அவா்களின் பயணத்தைக் கடுமையாக்கின.  கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.  ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று  எரிச்சல் கொண்டான்.  அதனால் தன் ஏழை நண்பணுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான் தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான் இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.  பாலை வனத்தில் ஓரிடத்தில்  ஈச்சை மரம் இருந்தது.  அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.   உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.  உன்னிடம் தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக் கேட்டான் ஏழை  அப்படியானால் நான் உணவை வைத்து கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா? என்று சொல்லி கோபத்தில்  ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பண்காரன்.  அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினார்.  வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில், “இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்” என்று பெரிதாக எழுதி வைத்து விட்டு நடந்தான் ஏழை.  ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.  அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீா் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.  திடீரென நண்பனின் நினைவு வந்தது.  இவ்வளவு காலம் பழகிய  நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணா்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.  குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான் இதிலுள்ள தண்ணீரை ஒருவா்  மட்டுமே குடிக்க  முடியும் நீயே குடித்துக் கொள் என்றான் பணக்காரன்.  உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீர் முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக் கொண்டு நன்றி தெரிவித்தான்.  பின்னா் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினா்.  ஏழை நண்பா் அங்கிருந்த ஒரு கல்லில், “என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்” என்று எழுதி வைத்தான்.  உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்த போது அதை மணலில் எழுதி வைத்தாய்.  உதவி செய்தபோது அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய் அது ஏன்? என்று கேட்டான்.  நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை அதனால் அதை மணலில் எழுதினேன்.  ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது ஆகவே கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.
          ஒருவா் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவா் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும். வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல, மனித உறவுகளை!
-        பெ.குபேந்திரன்


நட்பு

நட்பு
பார்த்த அன்றே அறிமுகம் ஆனோம்...!
          அடுத்த நாள் அன்பில் கலந்தோம்..!
மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!
          நாளுக்கு நாள் கதைகள் பேசி..!
கேலியிலே பொழுதை கழித்தோம்..!
          கிண்டல் செய்து சீண்டி பார்ப்போம்..!
அடிக்கடி சண்டைகள் வரும்..!
          ஆனாலும் அடித்தது இல்லை..!
சொந்தம் நமக்குள் எதுவும் இல்லை..!
          முறை வைத்து அழைத்துக் கொள்வோம்..!
வேறு எவரும் முறைத்துப் பார்த்தால்..!
          சும்மா விட்டு கொடுக்க மாட்டோம்..!
தோழன் வைத்த பெயரால் நாமும்..!
          வீட்டில் வைத்த பெயரை மறந்தோம்..!
வயது அதிகம் இருக்கும் போதும்..!
          மரியாதை எதிர்பார்க்க மாட்டோம்..!
நம் நட்பை அளக்க அளவு இல்லை..!
          இது போல் நட்பு கிடைக்கும் என்றால் ..!
மீண்டும் மண்ணில் பிறக்க ஆசை..

-பெ.குபேந்திரன்

தமிழாயிரம்

தமிழாயிரம்
9. தமிழ்ப் பிறப்புணா்வு
1.       மூன்றென்ற தாந்திரா் மூண்ட மராத்தியா்
          ஏன்றவோர்  ஆங்கிலா் எண்.

2.       எண்ணினால் இன்னும் இசலாம் பிரெஞ்சினா்
          நண்ணிய போர்த்து நலிப்பு.

3.       நலித்த களப்பிரா் பல்லவா் என்னக்
          கலித்தவா் தம்மையும் காண்.

4.       கண்டதால்நாம் கண்டபயன் உண்டாயின் இன்றேனும்
          ஒன்றாதல் வேண்டாமோ ஓா்ந்து

5.       ஓர்ந்து கடைப்பிடித் தொன்றானால் அண்டையார்
          சேர்ந்தார்க்கும் இன்னல் எது?

6.       எதுவும் இழப்போம் இழிப்பும் உறுவோம்
          இதுவும் பிறப்பா இழிவு.

7.       இழிந்த உடையை இறுக்கி உடுப்போம்
          இழிந்த மயிரதை ஏன்?

8.       எனவென்ன ஏங்காமல் ஏறுபோல் பீடு
          நினைவோம் நிமிர்வோம் உடன்.

9.       உடன்கூடி நிற்க ஒருவழி உண்டாம்
          மடற்றேன் றமிழை மதித்து.

10.     மதிப்பாய் தமிழப் பிறப்பை மதிப்பாய்க்

          குதிப்பாய் குளிர்வாய் குறித்து.