புதன், 12 ஜூலை, 2017

நிற்கக் கற்க..

சிறுகதை-7 ~ ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

  1.             “புள்ளைங்களா.. இங்க பாருங்க.. இது நம்ம எட்டாங்கிளாஸ் முடியப்பனோட கையெழுத்து.  இது இவனோட தங்கச்சி நாலாங்கிளாஸ் மெர்சியோட கையெழுத்து.  முடியப்பா.. நீ முதல்ல வீட்டுக்குப் போய் உன் தங்கச்சிக்கிட்ட எப்படி எழுதனும்னு கத்துக்கிட்டு, அப்புறமா இங்க வந்து படியப்பா.. குப்பைய கிறுக்குற கோழி கூட நல்ல கிறுக்கும். நீ அதைவிட மோசம்..” எட்டாம் வகுப்பு ஆசிரியை சொன்னதும் மாணவிகள் கேலியாய்ச் சிரித்தார்கள்.. மாணவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.  முடியப்பன் அவமானத்தில் கூனிக் குறுகி நின்றான்.  எவ்வளவு திட்டுகள், எவ்வளவு அவமானங்கள்.. எத்தனை கேலிச்சிரிப்புகள்.. 

அவமானம் ஒருபக்கம்..  இத்தனையும் சந்தித்த பிறகும் தன்னால் எழுத்தை அழகாக எழுத முடியவில்லையே.. என்ற வருத்தம் இன்னொரு பக்கம்.. என புரட்டி வாட்டியது.  ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவராவது சுட்டிக்காட்டி, திட்டிப்பேசும் கேலிப்பொருளாக ‘முடியப்பன் கையெழுத்து’ ஆகிவிட்டது.
            ஒரு வழியாக எட்டாம் வகுப்பை முடித்து, நாச்சியாபுரம் ஜெ.வி.உயா் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தான்.  புதிய இடம், புதிய சூழல் ஆனால் பழைய நிலையே நீடித்தது.  பாலகிருஷ்ணன், சுரேஸ்குமார் இவர்களைத்தவிர்த்து முடியப்பனுக்கு நண்பர்கள் கிடைக்கவில்லை.எழுத்து அழகாய் இருப்பவர்களுக்கே நண்பர்கள் அதிகம் இருந்தார்கள்.  “எழுத்து தீண்டாமை” அங்கும் அவனை விட்டுவைக்கவில்லை.  படிப்பதென்றால் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் சட்டென்று படிக்க முடிந்த அவனுக்கு, எழுதுவதென்றால் இரண்டு வரிகள் எழுதுவதென்றாலே கைகள் நடுநடுங்கும்.. இதயம் படபடக்கும்.. வியர்வை அருவியாகும்.. காலடியில் உலகம் உருண்டு நழுவும்.
            ஓராண்டு ஒரு யுகமாய்க் கழிந்தது. பத்தாம் வகுப்பில் தமிழாசிரியை தேனம்மை வகுப்பிலிருந்த எல்லோரையும் கையெழுத்துப் பயிற்சி ஏட்டில் தினமும் எழுதிவரச் செய்தார்கள்.    முடியப்பன் ஒருபக்கத்தை ஒரு மணி நேரம் எழுதினான்.  எவ்வளவுதான் நிறுத்தி எழுதினாலும் அதில் அழகைத் தேடித் தேடிப் பார்க்க வேண்டியிருந்தது.  தனக்கே பார்க்கச் சகிக்கவில்லையே.. 'தமிழம்மா என்ன சொல்வார்களோ?'  என்று நினைத்து நினைத்துப் புலம்பினான். முதல் நாள் ஆசிரியை திருத்தம் செய்து எல்லோருக்கும்கொடுத்துவிட்டார்கள்..
            ‘குறிப்பு என்ன எழுதி வைத்திருக்கிறார்களென்று தெரியவில்லை.. கடவுளே.. மோசமாய்த் திட்டியிருந்தால் பரவாயில்லை, ‘ரொம்பவும் மோசம்’ என்று எழுதியிருந்தால் என்ன செய்வது?'  கண்களை மூடி கடவுளைத் தொழுது  முதல்பக்கம் பார்த்தான்.  எப்பொழுதுமே அபாய   அறிகுறியாய்த் தெரியும் சிவப்பு மை இன்று 'நன்று..  மேலும் முயன்றிடு’  என்னும்  ஆசிரியரின் கையெழுத்தில்  கீழ்வானக் கதிரவனின் இளஞ்சிவப்பு  விடியலாய் முகம் காட்டியது.  இதுவரை அவமானங்களையே பெற்றுத்தந்த கையெழுத்து முதல் முறையாய் ‘நன்று’ என்னும் வெகுமானத்தைப் பரிசளித்திருக்கிறது.  முதன் முதலாய் முடியப்பனுக்கு, தன் கையெழுத்து அழகாய்த்  தெரிந்தது.. அன்றிரவு  முழுக்க உறக்கம் வரவேயில்லை.  அடிக்கடி எழுந்து கையெழுத்துப் பயிற்சி ஏட்டைப் பார்ப்பதும், சிரிப்பதுமாக இருந்த மகனின் நடவடிக்கை பெற்றோருக்கு கலக்கத்தை உண்டாக்கியது.
            ஒவ்வொரு நாளும் ஆசிரியைபிடம் ‘நன்று’  வாங்குவதற்காகவே நிறுத்தி அழகாக எழுத முயற்சி செய்தான்.  கொஞ்சங் கொஞ்சமாய் எழுத்தோடு, அவனது வரலாறும் மாறத் தொடங்கியது.
            “கல்வி என்பது வாழக் கற்றுக் கொடுப்பதன்று.  வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பது.  பிழைக்கக் கற்றுக் கொடுப்பதன்று.  உழைக்கக் கற்றுக் கொடுப்பது” என்பதை தமிழாசிரியை தேனம்மை அவனுக்கு உணா்த்தியிருந்தார்.
            மேடை ஏறினாலே கால்கள் நடுங்கியவனுக்கு, ஆசிரியை கொடுத்த தன்னம்பிக் கை  கால்களாய் மாறின. போட்டிகள் என்றாலே தலை தெறிக்க ஓடியவனை  ஆசிரியையின் வார்த்தைகள் தேடிப் பிடித்து, கொண்டு வந்து சேர்த்தது.  அலங்கோலமாய் அவமானம் தந்த கையெழுத்து ஆசிரியை கொடுத்த "நன்று” என்னும் ஒற்றைச் சொல் மந்திரத்தால் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெறவைத்தது.  உயிரும் உருவும் தந்த ஈன்றதாய்க்கு அடுத்து, உணா்வும் உறுதியும் கொடுத்த இன்னொரு தாயாய் ஆசிரியை  தேனம்மை உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தார். தமிழம்மா  பிடித்திருந்ததால் தமிழ் பிடித்தது.  தமிழ்   பிடித்திருந்ததால் தமிழாசிரியா் பணி கிடைத்தது முடியப்பனுக்கு.
            முதல் நாள் வகுப்பறைக்குள் நுழைந்த முடியப்பன் கரும்பல கையில்
            ‘கற்க  கசடறக் கற்பவை கற்றபின்
            நிற்க அதற்குத் தக“
என்னும் குறட்பாவை எழுதினார். 
"ஐயா.." குரல் வந்த திசைபக்கம் திரும்பிப் பார்த்தார் ஆசிரியர் முடியப்பன்.  ஆறாம் வகுப்பில் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பையன் எழுந்து "ஐயா... உங்க கையெழுத்து ரொம்ப அழகாயிருக்குதுங்கைய்யா.." என்றான் . முடியப்பன் தன் தமிழாசிரியரை நினைத்துக் கொண்டார்.  “ரொம்ப நன்றிப்பா... நமக்கு          
            கற்று நிற்கச் சொல்வது வாய்மொழிக்கல்வி,   நிற்கக் கற்றுத் தருவது தான் வாழ்வியல் கல்வி, உதாரணத்துக்கு ஒரு கதை சொல்லட்டுமா?”  என்றார்.
            “ஓ...  சொல்லுங்கய்யா... ”  என்று கேட்டதும் தன் வாழ்க்கையை  கதையாக சொல்லத்  தொடங்கினார்.   "புள்ளைங்களா... இங்க பாருங்க......"


குறள்:
 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)
- ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக