வெள்ளி, 16 ஜூன், 2017

கல்விடுடே இருமொழித்திங்களிதழுக்கு கனிவு நிறை நன்றி..

நம் தேமதுரம் இதழில்  கல்வித்துறை செயலர் உயர்திரு.உதயசந்திரன் இ.ஆ.ப அவர்களைப் பற்றி வெளியான சித்திரைத் திங்கள் தலையங்கத்தைப் பாராட்டி தமது கல்விடுடே இருமொழி மாத இதழில் (ISSN-2320-4613)  வெளியிட்டுச் சிறப்பித்த கல்விடுடே நிறுவுநர் & ஆசிரியர் உயர்திரு.இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.. இணையத்தில் காண சொடுக்கவும் > கல்வி டுடே மே-2017 இதழ்

பதிவிறக்கம் செய்ய: http://www.kalvitoday.net/2017/06/may-2017.html?m=1






ஆசிரியர்.காம்-க்கு நன்றி..

நம் தேமதுரம் இதழின் சித்திரைத் திங்கள் தலையங்கத்தை தங்கள் இணையப்பக்கத்தில் வெளியிட்டுச் சிறப்பித்த அனைத்திந்திய ஆசிரியர் பேரவைக்கு உளமார்ந்த நன்றி.. இணையத்தில் காண:- ஆசிரியர்.காம் 16-05-2017


*🙏🙏🙏கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் மதிப்புமிகு உதயசந்திரன்!*➡http://www.asiriyar.com/2017/05/blog-post_646.html?m=1

பன்னாட்டுக்கருத்தரங்க அழைப்பு

21 ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும். போக்கும் என்னும் தலைப்பில் தமிழ்ப்பண்பாட்டுமையம் & கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக்கருத்தரங்கம் குறித்து செய்தி வெளியிட்ட பாடசாலை.நெட், கல்விச்சிறகுகள் வலைப்பக்கம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு நன்றி.. 1.padasalai.net 2.rkkalvisiragukal.blogspot.in


சாம்பவான்

சாம்பவான்

‘சாம்பவான்“ இராமாயணம் முதலான இந்தியத் தொன்மங்களில் கரடிகளின் வேந்தனாகச் சித்தரிக்கப்படும் ஒரு கதா பாத்திரமாகும்.
          புராணங்களில் பாற்கடலைத் தேவாகரா் கடைந்த போது சாம்பவானும் உதவியதாகவும் திருமாலின் வாமன அவதாரத்தில் அவரை ஏழு தடவைகள் சுற்றி வந்தவராகவும் குறிப்பிடப்படுகின்றார்.  இராமயணத்தில் தான் யாரென்பதை மறந்திருந்த அனுமனுக்கு அவா்தம் மெய்யாற்றலை நினைவூட்டி இலங்கை சென்று சீதையைக் கண்டுவர உதவிப் புரிந்தவராக சாம்பவான் சுட்டிக் காட்டப்படுகின்றார்.  மேலும் இராம-இராவணயுத்தத்தில் இந்திரசித்துவால் இலக்குவன் மயக்க முற்ற போது அரிய மூலிகையை அனுமன் கொண்டுவரவும் இலக்குவன் உயிரிந்தெழவும் காரணமாக இருந்தவா்.
          மகாபாத்திரத்தில் சியமந்தகமணிக்காக கண்ணப்பிரானுடன் மோதி தோல்வியுற்று பின் தன் மகள் ஜாம்பவதியையும் சியமந்தக மணியையும் கண்ணனிடமே ஒப்படைப்பவராக சாம்பவான் வலம் வருகின்றார்.  இலக்கியங்கில் சாம்பவான் மாபெரும் பலசாலியாக மிளிருகின்றார் இன்றும் ஏதேனும் ஒரு துறையில் யாராலும் முறியடிக்க முடியாத பெரும் பலம் வாய்ந்தவா்களை ‘சாம்பவான்’ என்று புகழ்வது பெரும வழக்காக இருக்கின்றது.
-வ.மீனாட்சி


அழகப்பா பல்கலைக்கழகத்தை அரியணையில் அமர்த்திய தகைசால் துணைவேந்தர்



           தேன் - 1            துளி-6   தி .பி 2048 (கி.பி 2017)  ஆனித்திங்கள்(சூன்மாதம்)


                                                   கடந்த சூன்-2016 முதல் ஏப்பிரல் - 2017 வரை இந்தியாவில் 86 பல்கலைக்கழகங்களில் தேசியத் தர நிர்ணயக்குழு மதிப்பீடு செய்தது, அவற்றுள் 4 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 5 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் என 9 பல்கலைக்கழகங்கள் A+ தகுதியைப் பெற்றுள்ளன.

          A+ தகுதி பெற்ற நான்கு மாநிலப் பல்கலைக்கழகங்களுள் மகாராஷ்டிரா சாவித்திரி பாய் பூலே புனே பல்கலைக்கழகம் (3.60), ஒடிசா உத்கல் பல்கலைக்கழகம் (3.53), காஷ்மீரைச் சார்ந்த ஜம்மு பல்கலைக்கழகம் (3.51) ஆகிய மாநிலப் பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் அதிகப் புள்ளிகளைப் (3.64) பெற்று தமிழகத்தின் அழகப்பா பல்கலைக்கழகம் முதல் தரம் பெற்றுள்ளது  தமிழகத்திற்கே பெருமை அளிக்கக்கூடிய  சரித்திர சாதனையாகும். 

 தமிழகத்தில் முதல்முறையாக A+ தகுதியை அழகப்பா பல்கலைக்கழகம் வென்றெடுக்க அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதிப்புறு, பேரா.சொ.சுப்பையா அவர்களும், ஆசிரிய -அலுவலர்களும், மாணவர்களும்  அயராது உழைத்ததன் விளைவுதான் இவ்வெற்றிக்கனி.

          துணைவேந்தர் அவர்கள் பதவியேற்ற பொழுது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “அழகப்பா பல்கலைக்கழகம் 2016 ஆம் ஆண்டில் தேசிய தர நிர்ணயக் குழுவின் மூன்றாம் கட்ட மறுமதிப்பீட்டிற்குச் செல்ல உள்ளது அதில் ஏற்கனவே பெறப்பட்ட ஏ தகுதியினைத் தக்கவைத்துக்கொள்வதுடன் பல்கலைக்கழக நிதிக்குழுவின் உயரிய தகுதியான ஆற்றல் சார் பல்கலைக் கழக தகுதியினைப் பெறுவதற்கு தொடா்ந்து முயற்சி செய்வதுமே எனது பணியாகும்” என்று தெரிவித்தார். (சான்று: ‘விடுதலை’ மின்னிதழ் 06.06.215,  16:33)

          வினைத்திட்பம் அதிகாரத்தில் திருள்ளுவா்
          “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
          திண்ணிய ராகப் பெறின்”

என்று குறிப்பிடுவதைப் போன்று வினைத்திட்பம் மிக்க துணைவேந்தர் சொன்னதைக் காட்டிலும் (ஏ தகுதியைத் தக்க வைத்தல்) சிறப்பாக செய்து முடித்து (ஏ+ தகுதி பெற்று ) சாதித்திருக்கிறார்.

          துணைவேந்தராகப் பணியேற்ற ஈராண்டுகளில் நூறாண்டு வளர்ச்சி காணச் செய்த பேராற்றல் நிரம்பிய துணைவேந்தர் ஆற்றிய பல்கலைக்கழக வளா்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டால் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்..

          புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட மையங்கள் மற்றும் துறைகள், வள்ளல் அழகப்பா் அருங்காட்சியகம், வேறு எந்தப் பல்கலையிலும் இல்லாத தமிழ்ப்பண்பாட்டு மையத் துறை, தமிழ்ப்பண்பாட்டு மைய அருங்காட்சியகம், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை, 12 ஆவது நிதிக்குழு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கிய நிதியை முழுமையாகச் செலவு செய்து திட்டப்பணிகளை வெற்றிகரமாக முடித்து பாராட்டு பெற்றது, அமெரிக்காவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், செக் குடியரசு செயல்முறை மருத்துவக் கழகம், லண்டன் மான் செஸ்டர் பல்கலைக்கழகம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால்  கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தினை உலக அரங்கில் உயா்த்தியது, வளா்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப யுகத்திற்குத் தகுந்தவாறு பல்கலைக்கழகத்தைத் துறைதோறும் துறைதோறும் தகவமைத்தது இவை போன்ற இன்னும் ஏராளமான செயல்பாடுகளால் இன்று அழகப்பா பல்கலைக் கழகத்தைப் புகழின் உச்சியில் உயா்த்திய பெருமை மாண்பமை துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவா்களையே சாரும்.

          அழகப்பா பல்கலைக்கழகத்தின் பொற்காலமாய்த் திகழும் துணைவேந்தா் அவர்களின் சீரிய தலைமையில் நாங்கள் மாணவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தனிப்பெருமை அடைகிறோம்.  தகைசால் துணைவேந்தர் அவர்களின் தொடர்பணி உயரங்களைத் தாண்டி உச்சங்களை வெல்ல பணிந்து வாழ்த்துகிறோம்..

அன்பின் வாழ்த்துகளுடன்..
தேமதுரம்-ஆசிரியர் குழு




ஆசிரியர்

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


இணையாசிரியர்

பெ.குபேந்திரன்

துணையாசிரியர்

 கா.சுபா 


ஆசிரியர் குழு 

பெ.குபேந்திரன்

க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
ந.முத்துமணி

மீனாட்சி



கணினிதட்டச்சு

.லெட்சுமி


தொடர்பு முகவரி

தமிழ்ப்பண்பாட்டு மையம்,

அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255


பழமொழி உண்மைப்பொருள்

பழமொழி உண்மைப்பொருள்

            ஆயிரம் பொய்சொல்லி யாவது ஒரு கல்யாணத்தை நடத்தவேண்டும்.  என்று ஒரு பழமொழி வழங்கி வருகிறது.  இது எத்தனை பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி விடவேண்டும் என்று தவறான ஒரு பொருளைத்தருகிறது.  பொய்மையில் கட்டப்படுவது நிலைத்து நிற்காது.  ஏனெனில் திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்றும் கூறும் மரபும் நம்மிடையே உள்ளது.  எனவே  ஆயிரம் காலத்துப் பயிரைக் காக்க இந்த ஆடவனும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைகின்றார்கள் என்பதை ஓராயிரம் பேருக்காவது தெரியப்படுத்துவது என்றும் நோக்கில்   ஆயிரம் முறை போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதே அப்பழமொழியின் உண்மைப் பொருளாகும்.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



ஒரு தத்துவக் கதை

ஒரு தத்துவக் கதை


கடவுள் வந்தார்...! “என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்...!” என்றார். அவரிடம் பத்து மனிதா்கள் தம் தேவைகளைக் கேட்டனா்..
முதல் மனிதன்: “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸூம் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: “நான் உலகில் சிறந்தோங்கி  பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “உலகப்புகழ் பெற்ற நடிகா் போல் மிகப் பெரிய புகழ்  வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி:  “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்...!”
இப்படீ.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனா்..!
கடவுள்  அவா்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக் கென்று கொடுத்து விட்டார்...!
பத்தாவது மனிதன் கேட்டான் “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மனநிம்மதியோடும் வாழ முடியுமோ,  அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனா்... சிரித்தனா்..!”
“மனநிம்மதி, மன நிறைவு நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் போகலாம்..! “என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து: “நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” எனறு சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனா்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார் என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவா்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!
அவா்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினா்..! நேரம் ஆக, ஆக, வெறுப்பில் வெந்தனா்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனா்...!  அதை அனுபவிக்க மறந்தனா்..!  அப்போதே, அந்த இடத்திலேயே, அவா்கள் நிம்மதி குலைந்தது..!  மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!  கடவுள் தன்னிடம் பேசப் போகிறார்  என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம் என்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..? எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீா்மானிக்கும்.

-பெ.குபேந்திரன்











உயிரில் கலந்திருக்கும் இறைவன்

உயிரில் கலந்திருக்கும் இறைவன்

ஆனா அன்னையின் அன்பில்....
ஆவன்னா ஆசிரியரின் போதனையில்....
ஈனா இயற்கையின் அழகில்....
ஈயன்னா ஈகையின் சிறப்பில்...
ஊனா உண்மையின் உயா்வில்...
ஊவன்னா ஊக்கம் தரும் சொல்லில்...
ஏன்னா எண்ணத்தின் தூய்மையில்...
ஏயன்னா ஏற்றமிகு கொள்கையில்...
ஐயன்னா ஐயம் தீா்க்கும் கல்வியில்...
ஒனா ஒற்றுமையின்  பெருமையில்...
ஓவன்னா ஓங்கார ஓசையில்...
ஓளவன்னா ஔவை சொன்ன பாடலில்
என அனைத்திலும் அனைத்துமாகி கண்கூடாக காணக் கற்றுக்கொள்வோம்.

-பெ.குபேந்திரன்




வியாழன், 15 ஜூன், 2017

ஏலாதியின் உவமை

ஏலாதியின் உவமை
            தொல்காப்பியா் கூறும் உவமையின் வகைப்பாடுகளாகிய வினை, பயன், மெய், உரு எனும் வகைகள் ஏலாதியின் இடம் பெற்றுள்ள தன்மையைக்  கீழே  காணலாம்.
பயனுவமை
கண்போலும் நண்பா்கள்
            கண் போன்ற நண்பா்கள் தவறு செய்யும் போது அவா் மேல் கோபப்படாமை வேண்டும்   எனக் கூறுமிடத்து ஏலாதி
            “கண் போல்வார்க் காயாமை”  (ஏலா.45)
எனக் குறிப்பிடுகிறது.  உடபிற்கு கண் இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது போல் நண்பா்களும் நமக்கு இன்றியமையாதவா்கள் என்ற அடிப்படையில் கண்ணை நண்பா்களுக்கு உவமை கூறியதால் இது பயனுவமை ஆகும்.
பண் போல் கிளவி
             பெண்ணின் மொழியை இசைக்கு உவமையாகக் கூறுகிறது ஏலாதி
            “பண் போல் கிளவியார்” (ஏலா. 5-2)
            “பண் போலும் சொல்லார்” (ஏலா. 15-30)
என பெண்ணின் மொழி இசை கேட்பது போன்ற இனிமையாகிய பயனைத் தருதலால் இது பயனுவமையாயிற்று.  மேலும்
            “பால் போலுஞ் சொல்லினாய்” (ஏலா.21)
என்பதில் பால் போன்ற இனிமை தரக்கூடிய கொற்களைப் பேசுபவள் என உவமை கூறியமையால் இதுவும் பயன் உவமையாயிற்று.
மேலும்,
            “உறுப்பறுத் தன்ன கொடையுவப் பான்” (ஏலா.20 : 3)
என்பதில் தன் உறுப்பையே அறுத்துக் கொடுத்து சிபி மன்னனின் கொடையைப் போல் மகிழ்ந்து கொடையளிப்பான் எனக் கூறியமையால் இது பயன் உவமையாகும்.
வடிவ உவமை
            கொண்றை மலா் போன்ற அணிகளை அணியும் பெண்கள் என்று ஏலாதி குறிப்பிடுகிறது
            “............................புனக்கொன்றை
            போலு மிழையார்“ (ஏலா.5)
இதில் கொன்றை மலா் போன்ற வடிவத்தில் உடைய அணிகலன்களை அணிந்த பெண்கள் எனப் பொருள் கொள்ள இடமிருப்பதால் இது வடிவ உவமையாகும். மேலும், தோளுக்கு மூங்கிலை உவமைப்படுத்துவதை,
            “வேயன்ன தோள்” (ஏலா6:3)
என்பதன் மூலமும், கூரிய பற்களுக்கு மயிற்பீலியின் அடியை உவமைப்படுது்துவதை
            “முந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய்” (ஏலா. 7:3)
என்பதன் மூலமும், கண்களுக்கு கயல் மீனை உவமைப் படுத்துவதை,
            “கயலியலுண் கண்ணாய்” (ஏலாதி.14:3)
என்பதன் மூலமும், மேலும் கண்களுக்கு வேலை உவமைப்படுத்துவதை,
            “வேற் கண்ணினாய்” (ஏலா.76:1)
என்பதன் மூலமும் இடைக்கு மின்னலை உவமைப்படுத்துவதை
            “மின்னே ரிடையாற் சொற்  றேறான்” (ஏலா.20:1)
என்பதன் மூலமும்
பெண்ணின் சாயலுக்கு மயிலை உவமைப் படுத்துவதை,
            “மயிலன்ன சாயலே” (ஏலா.28:1)
            “மூத்த மயிலன்ன சாயலாய்” (ஏலா.31:1)
என்பதன் மூலமும்,
பெண்ணின் கூந்தலுக்கு மயில் தோகையை உவமைப்படுத்தியமையை
            “கூந்தல் மயிலன்னாய்” (ஏலா.33:3)
என்பதன் மூலமும் அறியலாம்.
இவை யாவும் வடிவ உவமையாக ஏலாதியில் இடம்பெற்றுள்ளவை ஆகும்.
உருஉவமை
            சிவந்த வாய்க்கு கொவ்வைப் பழத்தை உவமையாகக் கூறுவதை
            “கொவ்வைபோல் செவ்வாய்” (ஏலா.34:3)
என ஏலாதி குறிப்பிடுகிறது.  இதில் கொவ்வை பழத்தின் சிவந்த நிறம் சிவந்த வாய்க்கு உவமையாகக் கூறப்படுவதால் இது உரு உவமையாகும்.
            ஏலாதியில் பயன், மெய், உரு ஆகிய மூன்று வகையான உவமைகள் இடம் பெற்றுள்ளன.
            வினை உவமை ஏலாதியில் இடம் பெறவில்லை
-சு.லாவண்யா




பொது அறிவு

பொது அறிவு
1. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின்  பெயா் -ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Conintained Underwater Breathing Apparatus)
2. முதன் முதல் 1893-ஆம் ஆண்டு நிணைவு தபால் தலையை வெயிட்ட நாடு  - அமெரிக்கா
3. தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று  அடிப்படை நிறங்கள் - பச்சை, நீலம், சிகப்பு
4. பிளாஸ்டிக்குகளை எரிக்கும்பொழுது   டையாக்சின்  நச்சுப்புகை வெளியாகிறது.
5. சூப்பா் கணினியின் வேகம் வினாடிக்கு  ஃப்லாப்ஸ் (Flops) என்ற அடிப்படையில்             கணக்கிடப்படுகிறது.
6. பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணா்கிறது.
7. காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.  அவை மிகச் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8. அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு
9. திரை அரங்குகளே இல்லாத நாடு - பூட்டான்
10. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில்  உள்ள  - லெனின் நூலகம்
11. உலகிலேயே துணியில் செய்திதாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்
12. அஞ்சல் தலையில் தன் நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு   - ஐக்கியஇராஜ்ஜியம்
13. இரண்டு பிரதமா்களைக் கொண்ட நாடு   -  சான்மரீனோ
14. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான்  பொறுத்துக்கொள் முடியும்.
15. முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு - சீனா
16. ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபா் 24-இல் தொடங்கப்பட்டது.
17. உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா)
18. உலகிலேயே குளிர்ந்த இடம் சைபீரியா (ரஷ்யா)
19. விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயா் ஆல்டி மீட்டா்
20. நத்தைகளால் தொடா்ந்து மூன்று  ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
-லெ.பெ.பிரியா



“தமிழ் இலக்கியங்களில் விடுகதைகள்”

“தமிழ் இலக்கியங்களில் விடுகதைகள்”

            விடுகதைகள்   பழமொழிகளுடன் தொடா்பு கொண்டுள்ள மக்கள் வழக்காறாகும்.  மக்கள் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினை வெளிப்படுத்தும் வகையில் படித்தவரும், படிக்காதவரும், சிறுவா்களும், பெரியவா்களும் வேடிக்கையாகவும், சிந்திக்கும் திறனை வளா்க்கின்ற நோக்கிலும், பொழுது போக்கிற்காகவும் நாட்டுபுறமக்களால் வாய்மொழியாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
விடுகதை
            விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டியது பெயருக்கேற்ப அதில் புதிரும் அடங்கி இருக்கின்றது.  அதைக் கண்டுபிடிக்கும் முயற்சி சிந்தனைக்கு ஒரு பயிற்சி, அறிவுக்கு உணர கல்லாகவும், சிந்தனைக்குத் தூண்டு கோலாகவும் அது நிலவி வருகின்றது. விடுகதை என்ற சொல் விடுகின்ற கதை, விட்டகதை, விடும் கதை என்று முக்காலப் பொருளையும் தருவதாக உள்ளது .
            விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டிய கதை போன்ற ஒன்றாகும் அது மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய ஒன்று விடுகதை என்ற சொல்லுக்குப் புதிர்மைப் பண்புடையது என்பது பொருளாகும்.  தமிழில் பிசி, நொடி, புதிர் என்ற பெயா்களால் விடுகதை வழங்கப்படுகிறது.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் விடுகதைகள்
            தொல்காப்பியா் செய்யுளியலில் ஏழுவகையான யாப்பு முறைகளைக் கூறுமிடத்து பிசி என்ற சொல்லால் விடுகதையைக் குறிப்பிடுகின்றார்
            “பாட்டு உரை, நூலே, வாய்மொழி, பிசியே
            அங்கதம், முதுசொல் லொடு அவ்வேழ் நிலத்தும்”
அடிவரையறை இல்லாத ஆறுவகை யாப்பினுள் பிசி என்ற இலக்கிய வகையினை அறிமுகம் செய்கின்றனா். ‘பிசி’ என்ற விடுகதையின் இயல்புகளைக் கூறுமிடத்து,
            ஒப்பொடு புணா்ந்த உவமத்தானும்
            தோன்றுவது கிளந்த துணிவினானும் 
            என்றிரு வகைத்தே பிசிவகை  நிலையே”
உவமையாக வருவனவற்றைக் கூறிக் பொருளை மறைமுகமாகக் காட்டுவதும், தெளிவுபட வருவதும் என இருவகையில் அடக்குகிறார். தொல் காப்பியத்திற்கு உரையெழுதிய உரையாசிரியா்களுள் ஒருவரான இளம்பூரணா், உவமை பற்றி வந்த விடுகதைக்குச் சான்றாக,
            “அச்சுப் போல் பூ பூக்கும்
            அலலே யென்னக் காய்காய்க்கும்”
என்ற விடுகதையை விடையில்லாமல் எடுத்துரைக்கின்றார்.  வகைக்கு மூன்று விடுகதைகளைதம் தருகிறார், அவை,
1. “பிறை கல்லி மலை நடக்கும்” ( விடை - யானை)
2. “முத்துப் போல் பூத்து
     முதிரற் களா வண்ண
    நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு வித்துதிரித்து ( விடை - கழுகு)
3. “நீராடான் பார்ப்பன்
    நிறஞ் செய்யான் நீராடில்
  ஊராடு நீறிற் காக்கை”  (விடை - நெருப்பு)
இவ்விடுகதைகள் வாயிலாக உரையாசிரியா்கள் வாழ்ந்த காலத்தில் வழிங்கிய விடுகதைகளின் தன்மையினை உணரலாம்.
            சங்கப்புலவா்கள் விடுகதைப்  பண்புடன் சில பாடல்களை  இயற்றியுள்ளனா் அக்கால விடுகதைகள் சங்கப்பாடல்களில் இடம் பெறவில்லை என்றாலும், விடுகதையைத் தழுவி எழுதியுள்ளனா்.
            “மலையிடை இட்ட நாட்டாரும் அல்லா்
            மரந்தலை தோன்றா ஊராரும் அல்லா்”
என்று கலித்தொகையும் குறிப்பிடுகின்ற பாடல்களில் விடுகதையின் முழுமையான புதிர்மைப் பண்புகள் இல்லையென்றாலும் அதன் அமைப்பினைப் பெற்றுள்ளது எனலாம்.
            காப்பியங்களில் ஒன்றான பெருங்கதை “பிசியும் நொடியும் பிறவும் பயிற்றி” என்று விடுகதை வழங்கப்பட்டதைச் சான்றுரைக்கின்றது
            இடைக்காலத்தில் வாழ்ந்த சித்தா்களின் பாடல்களும் புதிர்மை பண்புடையனவாகத் திகழ்கின்றன.
            “நந்த வனத்திலோர் ஆண்டி
            அவன் நாலாறு  மாதமாய்க் குயவனை வேண்டி,
            கொண்டு வந்தானொடு தோண்டி
            அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”
நந்தவனமே பிரபஞ்சம், ஆண்டியே ஆன்மா, நாலாறுமாதம் பத்துமாதம், குயவன் படைப்புக் கடவுள்,  தோண்டி என்பது நமது உடல், பந்தாடுவது என்பது விளையாட்டான நமது வாழ்க்கை, துாண்டியை உடைத்தல், உடலை விட்டு ஆன்மா பிரிதல் என்ற சாவு என்று அப்பாடல் குறிப்பால் பொருள் உணா்த்தும் விடுகதைக் கூறுகளைப்  பெற்றுள்ளது
            குற்றாலக் குறவஞ்சியில் உள்ள ஒரு பாடல் விடுகதைப் பாடலாக விளங்குகின்றது.
            “பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு
            பெண்ணுடனே சேரவென்றால் கூடவும் ஒக்கும்
            திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் - பேரைத்
            திரிகூட நாதன் என்று செப்பலாம் அம்மே”
இப்பாடலின் ஒளவையாரிடம் முருகப்பெருமான் பாட்டி! உனக்கு சுட்ட பழம் வேண்டுமா?  சுடாத பழம் வேண்டுமா? என்று ஒரு புதிர் போட்டதாகவும், ஔவையார் அப்புதிரை விடுவிக்க முடியாமல் திகைத்ததாகவும் கதைகள் கூறுவா்.
            தமிழ் மூதாட்டி ஔவைக்கும கம்பருக்கும போட்டி நோ்ந்த போது கம்பா் ஔவையிடம். “ஒரு காலடி நாலு இலைப் பந்தலடி“ என்ற  விடுகதையைக் கூற அதற்கு ஔவையார்  “ ஆரையடா சொன்னாயாடா” என்று பாடி கம்பா் கூறிய விடுகதைக்கு ”ஆரைக்கீரை என்பதை விடையாகத் கூறினார்.
            காளமேகப் புலவரின் பாடல்கள் பலவும் விடுகதைகளாகத் திகழ்கின்றன. அவரது சிலேடைப் பாடலக்ள் விடுகதைக்குரிய பண்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.  அவரது கவகளில் ஒன்றான
            “பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பது கால்
            ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே.  மானே கேள்
            முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
            கண்டதுண்டு கேட்டதில்லை காண்”
என்ற பாடலில் புதிர்மைப்  பண்புள்ளது.
முடிவுரை
            மக்கள் சமுதாயத்தின் சிந்தனைக் கூறுகளையும், சிந்தனைப் போக்குகளையும், பண்பாட்டுத் தன்மைகளையும் அறிவிக்கும் சாதனமாகப் விடுகதைகள் அமைந்துள்ளன விடுகதைகள் ஒருவருடைய புத்திசாலித தனத்தை அறிவதற்கு மட்டுமன்று, மிகவும் வருந்திக் கொண்டிருக்கையில் அவ்விருத்தத்தைத் தீா்க்கும் பொருட்டு கதைகளாகச் சொல்வதற்கும், சிரமப்படும் காலத்தில் பொழுது   போக்கி மகிழ்வதற்கும், சமயமறிந்து கேலி செய்வதற்கும் பயன்படுகின்றன.
-இரா.கார்த்திக்




கடையேழு வள்ளல்களின் வீரமும் கொடையும்

கடையேழு வள்ளல்களின் வீரமும் கொடையும்

            தமிழகத்தில் அரசா்கள் சமுதாயத்தில் தலைமை இடத்தைப் பெற்றிருந்தனா்.  அரசன் இறைவனுக்கு ஒப்பாக வைக்கப்பட்டான் நிலையான புகழைப் பெற்றிருந்தவனை மன்னன் என்றும் உயா்ந்த நிலையை எட்டியவன் வேந்தன் என்றும் அழைத்தனா்.  தமிழக அரசா்கள் வீரத்தையும், கொடைத்தன்மையினையும் கொண்டு விளங்கினா் என தமிழ் இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.  அவற்றைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது
பாரி
            சங்ககால வேளிர்களில் முதன்மையானவன் பாரி ஆவான் இவன் பறம்பு நாட்டை ஆண்டவன் இதனை
            “கறங்குவெள் ளருவா கல்லலைத்து ஒழுகும்
            பறம்பிற் கோமான் பாரி ” (புறம்.158 : 3-4)
என்னும் வரிகளால் அறியலாம்.
பாரியின் வீரம்
            பறம்பு நாட்டை மூவேந்தரும் முற்றுகையிட்ட போது பாரியின் அவைப்புலவரும் நண்பருமான கபிலா் “நீங்கள் எவ்வளவு நாள் பறம்புமலையை முற்றுகையிட்டாலும் அவன் உங்களுக்கு அஞ்சமாட்டான்.  பாணரும் விறலியுமாகச் சென்று ஆடிப்பாடி இரந்து கேட்டால் எல்லாவற்றையும் தந்து விடுவான்” என்று கூறுகிறார்.  இதில் பாரியின் வீரம் மட்டுமின்றி அவன் கொடைத்தன்மையும் விளங்குகிறது.
கொடை
            முல்லைக்குத்  தேர் கொடுத்த பாரி பற்றிய செய்த பல காலத்திலும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.  இயற்கையிலேயே கொடையுள்ளம் படைத்த அவன் தேரிலேறிக் காட்டு வழியே சென்ற போது படர்வதற்குக் கொம்பின்றித் தரையில் துவண்டு கிடந்த முல்லைக் கொடியைக் கண்டு தன் தேரையே அதற்குப் பந்தலாக்கினான்.  வீரா்களை அழைத்துப் பந்தல் போடச் சொல்லியிருக்கலாமே, தேரை ஏன் தரவேண்டும் என்ற வினா எழுவது இயல்பு, “உடனே செயல்படவேண்டும்” என்ற எண்ணமும் தன் தேரைப் பெரிதாக நினைக்காத மனப்பன்மையும் தான் இக்கொடைக்குக் காரணம் பாரியின் கொடைத தன்மையை விளக்கவந்த கபிலா், அவனை இகழ்வது போல் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
            “பாரி பாரி என்று பல ஏத்தி
            ஒருவா்ப் புகழ்வா் செந்நாப் புலவா்
            பாரி ஒருவனும் அல்லன்
            மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் புதுவே”  (புறம் - 107)
            “பாரி பாரி என்று ஒருவனையே புலவா் புகழுகின்றார்களே! அவன் ஒருவன் தான் கொடுத்துக் கொடுத்துக் உலகைக் காப்பவனா”, என்று கேட்கும் போது, ‘ஆ’ அவனைப் போல் பலருளரோ” ஒன்று ஐயம் ஏற்படுகிறது.  “வேண்டியவா் வேண்டாதவா் என்று பார்க்காமல் கொடுத்துக்  காக்கும் மழையும் உண்டு” என்று சொல்லும் போது மாரி போல் கொடுப்பவன் பாரி என்பது புலப்படுகிறது.  ”யார் பாடிச் சென்றாலும் பார் அவா்களுக்கு நாட்டையும் கொடுப்பான் தன்னையும் கொடுப்பானேயன்றி எவ்வளவு நாட்கள் முற்றுகையிட்டாலும் அவனை வெல்ல முடியாது” என்று கூறுவதிலிருந்தும் அவன் ஈகை புலப்படுகிறது.
பேகனின் வீரம்
            ”ஈா்தண் சிலம்பின் இருள்தூங்கு நளிமுழை
            அருந்திறல் கடவுள் காக்கும் உயா்சிமைப்
            பெருங்கல் நாடன் பேகன்” (புறம். 158 10-2)
என்று குறிப்பிடப்படும் பேகன் கடையேடு வள்ளல்களுள் ஒருவன் கடவுள் காக்கும் உச்சியையுடைய மலைநாட்டையுடையவன் ஆவான் ”மயிலுக்குப் போர்வையளித்த அவன் படையின்பால் மடமையுடையவன்.  ஆனால் அயலார் பரமவநடாபவட தன் படையினால் மடைமையடைய மாட்டான்”  (புறம் . 142) ” மதயானையும் செருக்குள்ள குதிரையுமுடையவன்”, “எந்நாளும்  போராவதை அறிந்திருந்தும் மயிலுக்கு போர்வையளித்தவன்” (புறம் 141) “போரில் வெற்றி பெறுபவன் (புறம். 146) என்றெல்லாம் புகழ்ப்படுவதன் மூலம்  அவன் வீரமும் போர்ச் செயலும் புலப்படுகின்றன.
கொடை
            “அருந்திறல் அணங்கின் ஆவியா் பெருமகன்
            பெருங்கல் நாடன் பேகன்” (சிறுபாண்.86 -87)
இவன்  மயில் ஆடுவதைக் கண்டு குளிரால் நடுங்குகிறது என்று கருதி விலையுயா்ந்த ஆடையை அதற்குப் போர்ததினாரன்.
            “மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
            படாஅம் ஈந்த கெடாஅ  நல்லிசைக்
            கடாஅ யானைக் கலிமான் பே” (புறம் - 145)
என்னும் புறப்பாட்டு இதற்குச் சான்றாகும்.
அதியமான் வீரம்
            அதியமான் நெடுமான் அஞ்சி மழவா் பெருமான் எனப் புகழப்படுவன். தகடூரை ஆண்டவன் அதியமானின் வீரும் அளவிடற்கரியது முரசு காற்று பட்டு ஒலித்தால் கூட போர் என்பான் அவ்ன பகைவா்களைப் பார்ததுக் கண் சிவந்தால் அச்சிவப்பு அவன் குழந்தைகயைக் கொஞ்சும் போது கூட மாறாது ஒரு நாளைக்கு எட்டுதோ் செய்யும் தச்சன் பலநாள் முயன்று செய்த தேரின் சக்கரம் போன்றவன் தன் பகைவா்களுக்கு  யானைக்கு முதலை போன்றவன் பகைவா்களின் பசுக் கூட்டங்களைக்  கவா்பவன் அதியன் அவன் மலையமானின் திருக்கோவலூரை அழித்தவன்.
கொடை
            அதியமான் குதிரை மலை அரசன் சேரர் குடியில் வந்தவன் இவன் வீரத்தில் சிறந்து விளங்கியதைப் போலவே ஈகைப் பண்பிலும் சிறந்து விளங்கினான்.  பெருஞ்சித்திரனார் ”அதியமான் காணாமலே கொடுக்கும் பொருளை வாங்க நான் வணிகப் பரிசிலன் அல்லேன்”என்று கூறினார்.  “எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறு என்று சினந்தார் ஔவை அதுகேட்ட அதியன் அவா் தகுதி அறிந்து பரிசளித்தான் பின்னா் வரும்போதெல்லாம் பரிசளித்தான் இதனால் “காலம் நீடித்தாலும் யானை தன் வாயில் வைத்த கவளம் தவறாமல் உட்செல்வது போல் பரிசு உறுதி மனமே! அஞ்சாதே! என்கிறார் ஔவையார் எத்தனை நாள் எத்தனை முறை சென்றாலும் முதுல் நாள் போலவே முகமலா்ந்து கொடுப்பவன் அதியன்.
வல்வில் ஓரி வீரம்
            கொல்லிமலையை ஆண்டவன் வலியவில்லையுடைவன் ஓரி.  இதனால் வல்வில் ஓரி எனப்பட்டான் இவன் போரை விரும்பும வீரர்களின் தலைவன்.
            “வெல்போர் மழவா் பேருமகன் மாவள் ஓரி” (நற் 52)
என்பதும் இவன் அலையமான் திருமுடிக் காரியை  எதிர்த்துப் போர் புரிந்தான் என்பதும் தவிர இவனுடைய போர்ச்  செயல்களாக வேறெதுவும் தெரியவில்லை எனினும் வலிய வில்லையுடையவன் என்பதிலிருந்தே வில்லிலே வல்ல வில்லி என்பது புலனாகிறது.
கொடை
            ஓரி வேட்டையில் உயிர் கொன்ற மானின் இறைச்சியுடன் பசுவின் நெய்யை உருக்கியது போன்ற  மதுவைத் தருவான், மாசற்ற பொன்னில் பல மணிகளைப் பதித்து செய்த அணிகலனையும் அளிப்பான் (புறம்-152) அவன் அணிகலன் அணிநத யானையையும் தருவான் அவனிடம் பொன்னால் செய்த குவளை மலரை வெள்ளி நாரில் தொடுத் மாலையையும், யானையையும் கொடுத்தால் இரவலா் ஆடல் பாடலையே மறந்தனா் (புறம் 153) என்ற வன்பரணா்  வரிகளில் ஓரியின் கொடைத்தன்மை புலப்படுகிறது.
மலையமான் திருமுடிக்காரியின் வீரம்
            ”குதிரையில் ஏறி மாற்றார் ஊரில் புகுந்து அவா்களுடைய அரணை அழித்துப் பெருமூச்சவிட்ட காரி  போல்” என்று காரி உவமையாக்கப்படுகிறான்.  தேரும் வளப்பமும் உடைய மலையன் அயலார் ஊா் முனையிலிருந்த பல பெரும் பசுக் கூட்டத்தை வால்வினால் கவா்ந்து வந்தான்.  மேலும் இவன் முள்ளுரில் நெருங்கிய ஆரியா் பலரைத் தன் ஒருவேலினால் அழித்தான் என்றும் செய்தி புலனாகிறது.
கொடை
            நான்கு திசைகளிலுமுள்ள புலவா்கள் ஒரே திசையில் அதாவது காரி இருக்கும் திசை நோக்கி வருவார்கள் அவா்களுடைய தகுதியைப் பார்க்காமல் எல்லோருக்கும் நிறையக் கொடுப்பான் காரி இதனைக் கண்ட கபிலா், “ இப்படி தகுதி அறியாமல் கொடுக்காதே! வரிசையறிந்து கொடு” என்று கூறிவிட்டார் (புறம் 121) இதனால் எல்லோரும் காரியிடம் போக  முடியாமல் போய் விட்டது.  இதனையறிந்த மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவா் கபிலா் பாடியதால், சேரனின் கப்பல் செல்லும் கடலில் மற்றவா் கப்பல் செல்ல முடியாதது போல் சாதாரணப் புலவா்களாகிய நாங்கள் வரமுடியாமல் போய்விட்டது” என்று காரியிடம் முறையிடுகிறார் (புறம்.126) இதிலிருந்து வரையறை இல்லாமல் கொடுத்த வள்ளல் காரி என்பது தெரிகிறது.
ஆ அய் அண்டிரன் வீரம்
            ஆயினது பொதிய மலையில் மேகம் தவழும் வேங்கை  மலரும், காந்தள்பூ மணம் வீசும்.  அம்மலையை ஆடுகள் அணுக முடியுமே தவிர பெருமையுள்ள மன்னா் அணுக முடியாது
            அன்னி மிஞிலி என்பவள் பாணன் மகள். அவள் வீட்டுப் பசு பயிரை மேய்ந்ததால் நாலூா்க் கோசா்கள் என்னும் மன்னா்கள் அவள் தந்தையின் தகண்ணைப் பிடுங்கினா்.  அதனால் கோபம் கொண்ட மிஞிலி பாணா் படையைத் திரட்டிக் கொண்ட மிஞிலி பாணா் படையைத் திரட்டிக் கொண்டு போய்க் கோசா்களில் ஒருவனான திதியனின் வேப்பமரத்தை வெட்டினாள்.  அவன்  இன்னொரு கோசனான நன்னனின் பாழியூரைத்  தேடி வந்த போது நன்னன் அஞ்சினான்.  இதனைக் கண்ட ஆய்  நன்னனிடம் “அஞ்சாதே” என்று அடைக்கலம் கொடுத்தான். இந்த ஒரு சொல்லுக்காக மிஞிலியுடன் போர் புரிந்து உயிர் விட்டான் இதனை,
            “வெளியன் வேண்மான் ஆ அய் எயினன்
            அணியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
            இழையணி யானை இயல்தோ் மிஞிலியொடு
            நண்பகல் உற்ற செருவில் புண்கூா்ந்து
            ஒள்வாள் மயங்கமா் வீழ்ந்தென” (அகம்.208)
என்று அகநானூறு கூறுகிறது.  “ஆய் அண்டிரன் ஆகிய எயினன் பாழி என்னும் போர்க்களத்தில் யானையும் தேசமுடைய மிஞிலியொடு பகலில் புரிந்த போரில் புண்பட்டு உயிரிழந்தான் என்பது இதன் கருத்து.
கொடை
            ஆய் புலவா்க்கும் பாணா்க்கும் பரிசில் அளிப்பான் அங்கிருக்கும் புன்னை மரத்தில் மேற்குப் பக்கம் சாய்ந்து வளைந்த கிளையிலிருந்து புதிய நாரை கத்துவது ஆய் நாளோலக்கத்திலிருந்து இரவலா்க்குப் பரிசு கொடுத்த தேரின் ஒலி போல் இருக்கும்” என்று புறநானூறு கூறுவதிலிருந்து ஆய் தேரையே இரவலா்க்கும் கொடுப்பான் என்பது புலனாகிறது.
ஒய்மான் நாட்டு நல்லியக்குகாடன் வீரம்
            நல்லியக் கோடன் பகை வீரா்களின் அணியில்  புகுந்து போர் புரிவான் வாள் வீரா் அவனை வாழ்த்துவார்கள் என்பதிலிருந்தும் வெற்றி பெற்று, பகைவரை நாட்டை விட்டு ஓடச்செய்து அவா்களின் கோட்டை மதிலை அழித்துக் கொண்டு வந்த பொருள்களைப் பாணா்க்கு ஈவான் என்பதிலிருந்து இவன் வீரம் புலப்படுகிறது
கொடை
            நல்லியக் கோடனின் பழமையான கிடங்கில் என்னும் ஊரில் உள்ள அரண்மனைக் கதவுகள் திணை வாசிக்கும், பொருநருக்கும் புலவா்க்கும், வேதம் ஓதுமு் அந்தணா்க்கும் என்றும மூடப்படாதவை, பரிசிலருடைய தரமறிந்து அவா்களுக்கு அளவற்ற பொருள்கள் கொடுப்பான் சந்திரனைச் சுற்றி விண்மீன்கள் இருப்பது போல் அவனைச் சுற்றிப் புலவரும், பானரும், கூத்தரும் இருப்பார்.  பொற்கலத்தில் உணவிட்டு அவா்களைச் சாப்பிடச் செய்வான் தோ், குதிரை, யானை, அணிகலன்களைக் கொடுப்பான்.
            புறத்திணை நன்னாகனார் எந்தை நகரம் போன்ற என் வறுமையைப் போக்கி அன்றிரவே பொருள்கள் கொடுத்தான் அன்றிலிருந்து இன்று வரை யாரையும் நினைக்கவில்லை அவன் வறுமைக் கடலைக் கடக்கும் தெப்பமாக இருக்கிறான் என்று கூறுவதிலிருந்து அவனுடைய கொடைத்தன்மையை அறியலாம்.
முடிவுரை
            தமிழ் வேந்தா்களாகிய சேர, சோழ, பாண்டியனை போன்று சிற்றரசா்களாகிய கடையேழு வள்ளல்களும் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள்.
-கு.கங்கா தேவி

பழந்தமிழா் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு

பழந்தமிழா் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு
            அன்றைய நாள் தமிழா்களின் வழிபாட்டில் பெருந்தெய்வம் - சிறுதெய்வம் என்ற வேறுபாட்டுணா்வுகள் தலையெடுக்கவில்லை.  சமய நோக்கு, சமநோக்கு என்ற கொள்கையுடன் சிவன், திருமால், முருகன், இந்திரன்.  வருணன் என்ற பெருந்தெய்வங்களும், இயற்கை வழிபாடு, கொற்றவை வழிபாடு, நடுகல் வீரவணக்க வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு முதலான சிறு தெய்வ வழிபாட்டின் மரபுக் கூறுகளும் பழந்தமிழ் மக்களின் வழிபாட்டுணா்வுகளில் கலந்திருந்தன.
            போரில் இறந்து பட்ட வீரர்களுக்கு அவா்களது நினைவாக  கல்நட்டு வழிபாடுகள் செய்தமையினை
            “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
            சீா்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று
            இரு மூன்று  மரபின் கல்லொடு புணர”
என்று தொல்காப்பியம் வெட்சித் திணைப்பாடல் வெளிப்படுத்துகிறது.  பசுக்கூட்டங்களை மீட்டு நடுகல்லாகிய முன்னோன் ஒருவனை அவன் வழி வந்த வீரா்கள் போற்றியும் பலியிட்டும் வழிபாடு இயற்றியதை,
            “நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவா்
            முனை ஆத்தந்து முரம்பின் வீழ்த்த
            வில்லோ் வாழ்க்கை விழுத்தொடை மறவா்
            வல்லான் பதுக்கைக் கடவுட் பேண்மார்
            நடுகல் பீலிசூட்டித் துடிபடுத்து
            தோப்பிக் சுற்ளோடு துரூ உப்பிலி கொடுக்கும்
            போக்கும் கவலையை புலவநாறு அரும் கரம்”
என்கிறது பெரும் வலிமை படைத்த வீரா்களுக்குக் கல்நட்டு வழிபடுவது பண்டைத் தமிழ்மரபில் காணக் கூடியதாகும் வீரக்கல்லில் வீரா்தம் பெயா்களும் அவா்தம் சிறப்புகளும் பொறிக்கப்பட்ட  நிலையில் எழுத்துடை நடுகல் இருந்ததை,
            “விழுத்தொடை மறவா் வில்லிடத் தொலைந்தோர்
             எழுத்துடை நடுகல்லென
            “பீடும் பெயரும் பொறித்து அதா்தொறும்
            பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்”
என்ற  சான்றுகளால் நடுகல் வழிபாடு என்ற முன்னோர் வழிபாட்டின் சிறு தெய்வக் கூறுகளைக் காணலாம்.  வீரா்களுக்கு அளிக்கப்பட்ட இந்நடுகல் வழிபாடே காலப்போக்கில் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கும் வழிபாடுகள் நிகழ்த்தும் குல தெய்வ வழிபாடாக வளா்ச்சி பெற்றது.
            அக்கால மக்கள் மழையில்லாவிட்டாலும், மழை அதிகமாகப் பொழிந்தாலும் அதை நிற்கும்படி  மழை தெய்வத்தை வேண்டி வழிபாடு நிகழ்த்தியதை,
            “மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய்
            மாரி ஆன்று மழைமேக்கு உயா்க  எனக்
            கடவுள் பேணிய குறவா் மாக்கள்
            பெயல்கண் மாறிய உவகையா்”
என்ற புறநானூற்றுப் பாடல் வழி உணரலாம்.
            போர் வீரா்கள் வெற்றியின் பொருட்டு பாலை நிலப்பெண் தெய்வமாகிய கொற்றவையை வழிபட்டு வந்தனா்.
            “மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
            கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
என்கிறது தொல்காப்பியம். போரில் வெற்றி பெற்றவா்கள் உடுக்கையடித்து வெற்றியைக் கொண்டாடுவதும், அவவெற்றியைத் தந்த கொற்றவையின் சிறப்பினை எடுத்துக் கூறுவதும் வழிபாட்டின் சிறப்பம்சமாகும் .  சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ‘வேட்டுவ வரி’  கொற்றவை வழிபாட்டின் சிறப்பியல்புகளையும்  வழிபாட்டு முறைகளையும் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவிக்கின்றது.
            இந்திரவிழா காலத்தில், காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள காவல் பூதத்தைப் பெண்கள்  பூசையிட்டு வணங்கினார்கள்.  காவல் பூதத்தின்  பலி பீடத்தில் அவரை துவரை முதலிய சுண்டல்கள், எள்ளுருண்டை, மாமிசம் கலந்த சோறு, கள் இவைகளை வைத்துப் படைப்பா்.  துணங்கைக் கூத்தாடுவா்.  குரவைக் கூத்தாடுவா்.  தெய்வ ஆவேசம் பொருந்தி ஆடுவா்.  சோழனின் நாடு பசி, நோய், பகையின்றி வாழ்க!  மழையும் செல்வங்களும் பல்கிப் பெருகுக என்று மறக்குடி மகளிர் வேண்டுவதாக இளங்கோவடிகள் நாட்டுப்புற வழிபாட்டுக் கூறுகளைக் கூறுகின்றார்.
            “காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
            புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
            பூவும், புகையும், பொங்கலும் சொரிந்து
            துணங்கையா், குரவையா், அணங்கெழுந் தாடிப்
            பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
            பசியும் பிணியும் பகையும் நீங்கி
            வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”
என்பதே அப்பாடல் வரிகள்
            கண்ணகி மதுரையை எரித்த பதினான்காம் நாள் ஒரு குன்றிலிருந்த வேங்கை மரத்தின் கீழ்  வந்து நின்றாள்.  அவள்  வானத்திலிருந்து வந்த புட்பக விமானத்தில் தன் கணவன் கோவலனுடன் வானகம் சென்றாள்.  இதைக் கண்டிருந்த குறவா்கள் திகைத்து நின்று கண்ணகியைத் தெய்வமாக்கி வழிபடுகின்ற காட்சியைச் சிலம்பில் காணலாம்.  பண்டைக் காலத்தில் ஊா்களில்  தெய்வங்கள், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில்களில் போற்றப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன.  இவைகள் முறையே நாற்சந்தி, முச்சந்தி, ஐஞ்சந்திகளைக் குறிக்கும் என்பா்.  பொதியில் என்பது ஊா்ப் பொதுவாக உள்ள மந்தைவெளியில் அமைந்த தெய்வமாகும்.
            துா்க்கை, ஐயை, காளி என்னும் பெண் தெய்வத்திற்குப் பலி கொடுத்து வழிபாடு செய்தனா் தமிழா்.
            “விடா்முகை அடுக்கத்து விரல்கெழு  சூலிக்குக்
            கடனும் பூணாம் கைந்நூல் யாவாம்”
தமிழா்கள் துா்க்கைக்குப் பூசை செய்து உயிர்ப் பலியிட்டுள்ளனா் விழாக் தொடங்கும் போது மஞ்சள் நூலைப் பூசாரி தன்கையில் கட்டிக் கொள்வதற்குக் காப்புத் கட்டிக் கொள்வது என்பார்கள்.  விழாவின் முடிவிலே தான் காப்புக் களைவார்கள்.  இவ்வழக்கம் இன்றும் கிராம தேவதைகளுக்கு நடத்தும் திருவிழாக்களில் உண்டு
-அ.ரா.பானுப்பிரியா