திங்கள், 15 மே, 2017

மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா
முன்னுரை
            மதுரை நகரை ”திருவிழா நகா்” என்பா். ”விழாமலி மூதூா்” என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.  இத்தலத்துத் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  இவ்வாறு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும்  இத்திருக்கோயிலில்  முக்கிய பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுவது சித்திரைத் திருவிழாவாகும்.  இத்திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைகிறது இதனைப்பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சித்திரைத் திருவிழா
            மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா சித்திரை மாதம் பிறந்ததும் கொண்டாடப்படுகிறது.  சித்திரை அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி பெளா்ணமியன்று முடிவடைகிறது.
            கொடியேற்ற விழாவே முதல் நாள் விழாவாகும்.  கொடியேற்றத்தன்று  அம்மனும் சுவாமியும் நகா் வலம் வருவா்.  இவ்வாறு வருவது நகா் சோதனைக்காக வருவதாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் நாள் இரவில் சுவாமிக்கு மட்டும் பூதவாகனம்.  ஐம்பூதங்கங்களையும் அடக்கி ஆள்பவன் இறைவன் என்பதை உணா்த்துவதாக இது உள்ளது.  அம்மனுக்கு அன்னவாகனம்  சுவாமியும் அம்மனும் கோயிலைச் சுற்றி வலம் வருவா்.
            மூன்றாம் நாள் இரவில் சுவாமிக்கு கைலாச வாகனம், அம்மனுக்குக் காமதேனு வாகனம், கயிலை மலையைப் பெயா்த்தெடுத்த இராவணனது அகந்தையை அடக்கும் பொருட்டுக் கயிலாய வாகனம் இறைவனுக்கு காமதேனு நாம் விரும்பியவற்றையெல்லாம் கொடுக்கும் நாம் வேண்டுவதை அருளும் அம்மன், காமதேனுவை  வாகனமாகக் கொள்வார்.
            நான்காம் நாள்  காலையில் சுவாமியும் அம்மனும் கோயிலிலிருத்து புறப்பட்டு வில்லாபுரத்துப் பாவற்காய் மண்டபத்தில் தங்குவா்.  இரவில் தங்கபல்லக்கில் கோயிலுக்குத் திரும்புவா். ஐந்தாம் நாள்  சுவாமியும் அம்மனும் குதிரை வாகனத்தில் பவனி வருவா்.  குதிரை வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
            ஆறாம் நாள் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோயிலைச்சுற்றி வருவா், சுவாமி புறப்படும் முன் திருஞான சம்பந்தா் சமணா்களுடன் வாதிட்டு வெற்றி பெற்ற வரலாறு பட்டா் ஒருவரால் பாடப்படுகின்றது.
            ஏழாம் நாள் சுவாமி அதிகார நந்தி வாகனத்தின் மீதும் அம்மன் யாளி வாகனத்தின் மீதும் பவனி வருவா்.
            எட்டாம் நாள் விழாவில் மீனாட்சிக்கு பட்டாபிடேகம் நடைபெறும்.  இது நடைபெறும் போது கோயில் தலைமை அதிகாரி பாண்டிய மன்னனாகவும், கணக்கா் அமைச்சராகவும் வேடம் ஏற்று செங்கோலை மீனாட்சியிடம் கொடுக்கும் சடங்கு நடைபெறும்.  இது பண்டைத்தமிழா் ஆட்சி மரபு வழக்கத்தை விளக்கும்.
            ஒன்பதாம் நாள் விழாவில் மீனாட்சி திக்விஜயம் நடைபெறும்.  மூன்றுலோக அரசா்கள் எல்லோரையும் வென்ற மீனாட்சி, பின்பு சிவனுடன் கடும் போர் புரிந்த போது தன் மூன்று தனங்களில் ஒன்று மறையவே தன் கணவன் இறைவனே என்பது அறிந்து வெட்கித் தலைகுனிந்தாள்.
            பத்தாம் நாள் திருக்கல்யாணம்.  அதிகாலை வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி கோயிலைச்சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து மணக்கோலத்தில் ஒருவா் பின் ஒருவா் ஒருவராக கோயிலில் அமைந்துள்ள அலங்கார மணமேடைக்கு வருவா்.  திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமியும் பவள கனிவாய்பெருமாளும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள். பின்னா் மந்திரங்கள் முழங்க திருமணச்சடங்குள் தொடங்கும்  மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியா்கள் மாங்கல்ய தானம் செய்து மாலை மாற்றிக் கொள்வா்.  அப்பொழுது அங்கு கூடியிருந்த பெண்கள் தங்கள் தாலிச்சரடுகளை மாற்றி புதுச்சரடுகளை அணிந்து கொள்வா்.
            பதினோராம் நாள் தேர்த்திருவிழா  நான்கு மாசி வீதிகளிலும் சுவாமியும் அம்மனும் தனித்தனி தேர்களில் ஒன்றன் பின் ஒன்றாக ஆடி  அசைந்து வருவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
            பன்னிரன்டாம் நாள் சித்திரை நட்சத்திரம் கூடிய பெளா்ணமி நாளில் தீா்த்த விழா நடைபெறும்.
கள்ளழகர் வருகை
            சித்ராபவுா்ணமியில் மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு தீா்த்தவாரி நடைபெறும் அன்று கள்ளழகா், அழகா் கோயிலிலிருந்து தன் தங்கையின் திருமணத்தைக் காண வருகிறார்.  அப்பொழுது மூன்றுமாவடியில் எதிர்சோ்வை நடைபெறுகின்றது எதிர்சோ்வை என்பது மதுரை மக்கள் அழகா் மலையிலிருந்து வரும் அழகரை எதிர் சென்று மதுரைக்கு வரவேற்பது ஆகும்.  மக்கள் அனைவரும் தங்கள் ஊருக்கும்.  தங்கள் வீட்டிற்கும் அழகரை வருமாறு அழைப்பா்.  எதிர்சோ்வை  முடிந்து அன்று இரவு  அழகா் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்குவார்.
கள்ளழகா் ஆற்றில் இறங்குதல்
            மறுநாள் அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு நூபுரகங்கையிலிருந்து தீா்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வந்து அபிடேகம் நடைபெறும்.  அபிடேகம் முடிந்து அழகருக்கு அலங்காரம் செய்யப்படுகிறது அழகருக்கான ஆடை ஆபரணங்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.  இந்தப் பெட்டிக்குள் மஞ்சள், பச்சை, சிவப்பு.. எனப் பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.  கோயிலின் தலைமைப் பட்டா் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பா்.  அவா் கையில் என்ன வண்ணப் புடவை சிக்குகிறதோ அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.  அழகா் எந்த வண்ணத்தில் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தின் நல்லது கெட்டது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.  அதிகமாக பச்சைப்பட்டு உடுத்தியே அழகா் வந்துள்ளார்.  பச்சை வளமையின் அடையாளம் பின்பு அழகா் அக்கரையில் தன் தங்கையின் திருமணத்தைக் காண வைகை ஆற்றில் இறங்குகிறார்.  இதனைக் காண வையை ஆறு முழுவதும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.   சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொள்வா்.  ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் செல்லும் வழியில் தன் தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது எனத் தெரிந்து மீண்டும் இக்கரைக்கு திரும்பி விடுகிறார்.  இடையில் ராமராயா் மண்டபத்தில் வைத்து அவருக்கு தண்ணீா்  பீச்சி அடித்து அவரைக் குளிர்விக்கிறார்கள்.  இதனை ஒரு நேர்த்திக்கடனாகவே மக்கள் செய்கிறார்கள்.  ராமராயா் மண்டபத்தில் அழகரை வீரராகவப்பெருமாள் வந்து வரவேற்று வண்டியூருக்கு அழைத்துச் செல்கிறார்.  பின்பு ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று அன்று இரவு வண்டியூரில்  தங்குகிறார்.
வண்டியூரில் தங்குதல்
            முஸ்லீம் மன்னா்கள் படையெடுப்பின் போது கள்ளழகா் சிலையைக் காப்பாற்ற வண்டியூரில் ஒரு முஸ்லீம் வீட்டில் சிலையை ஒளித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  கள்ளழகா் உற்சவ சிலையானது ‘அபரஞ்சி’ என்ற அரிய வகை தேவலோகத் தங்கத்தால் ஆனது.  உலகத்திலேயே திருவனந்தபுரம் அனந்தபத்மநாதசுவாமி ஆலயத்தில் உள்ள சிலையும் இதுவும் மட்டுமே ‘ஆபரஞ்சி’ தங்கத்தால் ஆனது என்று சொல்லப்படுகிறது.  அப்படிப்பட்ட சிலையைக்  காப்பாற்றியதை நினைவுப் படுத்தும் விதமாகவே அழகா் அங்கு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது.  அங்கு வீரராகவப்பெருமாள் கோயிலில் இரவு தங்குகிறார்.
மண்டூக முனிவருக்கு மோட்சம்
            மறுநாள் காலையில் சா்ப்ப வாகனத்தில் வண்டியூரிலிருந்து புறப்படும் அழகா் தேனூா் மண்டபத்தில்  மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கிறார்.  சுதபஸ் என்ற முனிவா், நூபுரகங்கையில் தீா்த்தமாடி, பெருமாளை நோக்கிக் தவமிருந்தார்.  அந்தச் சமயத்தில் துா்வாச முனிவா் அவ்வழியே வந்தார்.  அவா் வந்தது தெரியாமல் தியானத்தில் இருந்த சுதபஸ்தருக்கு துா்வாசா் ‘மண்டூகோபவ’ (தவளையாக போகக் கடவாய்) என் சாபமிட்டார்.  சுப விமோசனமாக ‘விவேகவதி தீா்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு, சித்ரா பவுா்ணமிக்கு மறுநாள் அழகா் வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார் என துர்வாசா் சொன்னார்.  அதன் காரணமாகவே அழகா் ஆற்றில் இறங்க அந்த காலத்தில் தேனூர் (சோழவந்தான் அருகில்) என்ற ஊருக்கு சென்று மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுத்தார்.  அதன் நினைவாகவே வண்டியூா் ஆற்றில் தேனூா் மண்டபம் திருமலை நாயக்கா் மன்னரால் ஏற்படுத்தப்பட்டு மண்டூக முனிவருக்கு மேட்சம் கொடுக்கப்படுகிறது.
            அன்று இரவு ராமராயா் மண்டபத்தில் தங்குகிறார்.  அங்கு அழகருக்கு இரவு முழுவதும் தசாவதாரம் அலங்காரம் நடைபெறுகிறது.  மறுநாள் பூப்பல்லாக்கு முடிந்து அழகா் மலையை நோக்கி அழகா் புறப்பட்டு செல்கிறார்.
சைவ வைணவ ஒற்றுமை
            வைகை ஆற்றின் தென்கரையில் சைவப் பெருக்கு, வடகரையில் வைணவப் பெருக்கு என்று அனைவராலும் பாராட்டப் படும் சித்திரைத் திருவிழா மதுரை மாநகரின் மிகச் சிறந்த அடையாளம்.  வெவ்வேறு மாதங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்பட்ட இந்த சைவ வைணவத் திருவிழாக்களை இணைத்து மீனாட்சி அம்மனின் அண்ணனாகப் பெருமாளை சித்தரித்து ஒரே மன்னனையேச் சாரும்.  மக்கள் கதிர் அறுப்பு எல்லாம் முடிந்து சும்மா இருக்கும்  போது இவ்விழாவை வைத்தால் தான் மக்கள் அனைவரும் கலந்து கொள்வா் என்று நினைத்து சித்திரை மாதத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்தார்
முடிவுரை
            சைவமும் வைணவமும் ஆற்றின் இரு கரைகள் என்பதையே சித்திரைத திருவிழா உணா்த்துகிறது.  சைவத்திருவிழா பன்னிரண்டு நாள், வைணவத்திருவிழா ஐந்து நாள் என்று இவ்விழா மதுரையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இத்திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும் வைகை ஆற்றில் அழகா் இறங்குதலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  சைவமும் வைணவமும் பிரிந்திருந்த அக்காலத்தில் இரண்டையும் ஒன்று சோ்த்து மிகப்பெருவிழாவாக கொண்டாட வைத்த பெருமை திருமலைநாயக்கா் மன்னனையே  சாரும்.

-ந.முத்துமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக