செவ்வாய், 14 மார்ச், 2017

கவிஞா் தங்கம் மூர்த்தியின் ஹைகூகளில் காதல் முதல் குழந்தை வரை



முன்னுரை:

            புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தங்கம் மூர்த்தி ஓர் தமிழ்க்கவிஞர் ஆவார். இவா் பத்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடத்திட்டத்தில் உள்ளன. இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏழு மொழிகளிலும் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன.  கவிஞரது கவிதைகள் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற மேடைகளில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டு வருகின்றன. இவரது ‘முதலில் பூத்த ரோஜா’என்ற ஹைகூ தொகுப்பில் இடம் பெற்றுள்ள செய்திகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

காதல்:

      கண்களால் தான் காதல் உருவாகிறது. காதலை வெளிப்படுத்தும் அறிவிப்பு மணியோசை கண்கள். கண்களின் பார்வைக்கு இணங்காத ஒரு பெண் கரத்தினால் வலியக் கைப்பற்றினாலும் இணங்கமாட்டாள். காதலா்களின் கண்கள் இரண்டும் காதலை உணா்வதற்கு, என்றெல்லாம் கண்களையும், காதலையும் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவக் கவிஞா் தங்கம் மூர்த்தியும் தன் கவிதையில் அதுவரை நட்பாக இருந்து அந்த நிமிடம் காதலான காதலனின் காதல் வயப்பட்ட தருணத்தை,

            “விழிகளில் ஊதி
           தூசி எடுத்தாய்
           தூசி வெளியேற உள்ளே நீ         (முதலில் பூத்த ரோஜா-18)

என்றவாறு பதிவு செய்துள்ளார்.
      பின் அத்தலைவன் தலைவியிடம் தன் காதலை வினவ, அவள் பதில் இறுக்க மறுக்க, முன்பு இருந்த நட்பையும் மறுத்து வெறுப்பைத் தன் பார்வையில் வெளிப்படுத்தி மௌனம் சாதிக்க, அவளது மௌத்தை  ஒருதலைக்காதலன்,

     “பேசிவிடாதே
     இரத்தம் வந்துவிடும்
     இதழ்கள் மோதினால்”           (மு.பூ.ரோ-34)

என்று சுட்டுகின்றார். தன்காதலைப் பலமுறை தலைவியிடம் வெளிப்படுத்தினாலும், அதை அவள் பெண்மைக்கே உரிய அச்சம், மடம், ஞானம், பயிர்ப்பால் ஏற்றுக்கொள்ளாத, ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் தலைவன் தன் ஒருதலைக்காதலால் பித்துப்பிடித்தவன் போல் தானே அவளாக, அவளே தானாக இறையனார் அகப்பொருளாசிரியா் சுட்டுவது போல இருந்தலை

            ‘உன்னைப் புகைப்படம் எடுத்தேன்
          இருட்டறையில் கழுவிப்பார்த்தேன்
          அடடா........நான்”.            (மு.பூ.ரோ-55)

என்றவாறு புலம்புகின்றான்.

வரதட்சணை:
       சில இளைஞா்கள் ஊர், குலம், சாதி, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை அறியாது செம்புலப்பெயல் நீர் போல் அன்புடைய நெஞ்சங் கலந்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ எண்ண, பல இளைஞா் சோம்பேறித்தனமாக மனைவி கொண்டு வரும் பொருளிலேயே தன் பல தலைமுறையைக் கடத்த திட்டமிட்டேடு அதிகச்சொத்துள்ள பெண்ணாகவே மணக்க விரும்புகின்றனா் என்பதைத் தங்கம் மூர்த்தி,

            “இம்முறை விண்ணப்பித்தான்
          நம்பிக்கையோடு
          வசதியான மாமனார்”            (மு.பூ.ரோ-67)

என இன்றைய சோம்பேறி இளைஞனின் மனப்பிரதிபலிப்பைச் சிறப்பாகச் சுட்டுகின்றார்.
      இவ்விருவகைப்பட்ட இளைஞா்களிடமிருந்தும் வேறுபடும் சில இளைஞா்களும் உண்டு. அவா்கள் தம் தாய், தந்தை வரதட்சணை பெண் வீட்டாரிடம் கேட்பதை எதிர்க்கவும் செய்கின்றனா். இங்கு ஓர் இளைஞன்,

            “அப்பாவுக்குப் பத்தாயிரம்
             அம்மாவுக்குப் பத்துப்பவுன்
             எனக்குக் கல்யாணம்”                    (மு.பூ.ரோ - 22)

என்றவாறு தாய், தந்தையரை இடித்துரைப்பது போல் கூறுகின்றான்.
  வசதியானவா்கள் வரதட்சணை கொடுத்தும், வரதட்சணை பெற்றும் ஆடம்பரமாய்த் திருமணம் நடத்த “ஏழைகளோ திருமணம் செய்யும் பொழுது  கூட அா்ச்சனைத் தட்டில் கூடக் காகிதப்பூக்களை வைத்து நடத்தும் வறுமை நிலையை” (மு.பூ.ரோ-23) படம் பிடித்துக்காட்டுகிறார். இவ்வாறு வரதட்சணையை பெண்வீட்டாரிடம் அதிகம் பெற்றுத் திருமணம் செய்து கொள்வதால் ஆண் வீட்டாரை சில பெண்கள் சிறிதும் மதிப்பதில்லை. மருமகளை அனுசரித்து சில மாமனார், மாமியார் சென்றாலும், பெண்கள் அவா்களுடன் கூட்டுக்குடும்பம் நடத்துவதில்லை. தனிக்குடித்தனத்தையே விரும்புவதையும் குறிப்பிடுகின்றார்.

கணவன் மனைவி உறவு நிலை:

  உறவுகளுக்கும், உணா்வுகளுக்கும் முக்கியத்துவம் அன்றி உணா்வற்ற சாதனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலத்தில் கணவன், மனைவி உறவு என்பது சுமூகமாக இருப்பதில்லை. ஏனெனில் இப்போது இருவரும் சமமான கல்வி, வேலைவாய்ப்புகளில் இருப்பதால் நான பெரிதா, நீ பெரிதா என்ற போட்டி மனப்பான்மை அவா்களிடையே அதிகம் தலை தூக்குவதால் வீட்டில் எப்போதுமே எலியும், பூனையுமாகவே காணப்படுகின்றனா். அதனால் அவா்களிடையே அன்பான உறவுகளும், அழகான உணா்வுகளும் எப்போதும் வெளிப்படுவதில்லை. இதனைத் தங்கம் மூர்த்தி நன்றிக்கு அடையாளமான வீட்டுப்பிராணியை முன்னிறுத்தி,

            “ வாசலில் நாய்கள்
            வாலாட்டின
           உள்ளே குரைக்கும் சத்தம்” (மு.பூ.ரோ-24)

எனச்சுட்டுகின்றார். மேலும் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிடிவாதத் தன்மையை, 

            “பட்டிமன்றம் முடிந்து
             தாமதமாய் வீடு வந்தேன்
          வழக்காடு மன்றம்”. (மு.பூ.ரோ-28)

என்றும் கூறுகின்றார். இருவரும் அலுவலகம் சென்று விட்டு வீட்டில் இருக்கும் கணநேரப்பொழுதிலும் நடக்கும் சண்டையை,“அவனுடன் சண்டை அமைதியாய் இருந்தாள், பாத்திரங்கள் பேசின”(மு.பூ.ரோ-29) “போர்வையை மீறியும் குளிரடித்த இரவில் கோபமாய் மனைவி” (மு.பூ.ரோ-39) என்றெல்லாம் ஒருவருக்கொருவா் வேறுபாடின்றி கணவன், மனைவி இடும் சண்டையை உள்ளது உள்ளவாறே பிரதிபலிக்கின்றார்.

குழந்தை:

  அட்சதை தட்டில் காகிதப்பூக்களை வைத்துத் திருமணம் நடத்திய ஏழைகள், அடுத்த தலைமுறையிலும் ஏழையாகவே காட்சியளிக்கின்றனா். மிகுதியான வேலைப்பளு, குறைவான ஊதியத்தால், உண்ணுவதற்கு ஒரு வேளை உணவோடு தங்க இடமின்றி சாலை அரங்களில் குழந்தைகளோடு தங்கும் நிகழ்வை,

            “கொசுக்களின் தாலாட்டில்
          குழந்தைகளின் உறக்கம்
          பிளாட்பாரம்”(மு.பூ.ரோ-37)

என்று பதிவிட்டுள்ளார்.
        மேல்தட்டு வா்க்க மக்கள் இன்றைய சூழலில் விலைவாசியோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வேலைக்குப் போகும் பெண்கள் குழந்தைகளைக் கடமைக்கெனப் பெற்று அம்மாவிடமோ, வேலைக்கார பெண்மணிகளிடமோ கொடுத்து விட்டுச் செல்லும் நிலையை,

                                      “ஆயாவின் மடியில்
                                உறங்கும் குழந்தை
                                கனவில் அம்மா”(மு.பூ.ரோ-59)

எனவும் விளம்புகின்றார். அவசர உலகத்தில் குழந்தையைப் பற்றியும், தாய் அலுவலகத்தில் இருக்கும் மலை போல் குவிந்திருக்கும் கோப்புகளுக்கு இடையே தான் இடைவெளி நேரத்தில் நினைத்துப் பார்க்க முடிகின்றது.

       அலுவலகம் சென்ற அம்மாவிடம் தன் எண்ண அலைகளைக் கூற முடியாத குழந்தை தனக்குத் தெரிவதை “சுவரெங்கும் கிறுக்கி வைக்கின்றன. தாய் அறியும் மொழிகளில் கவிதைகளாய்”(மு.பூ.ரோ-27) என்கின்றார். வேலைக்கார ஆயாவிடம் வளரும் குழந்தைக்கு இரவிலாவது தாயாகிச் சோறூட்டலாம் என்றால், “அக்குழந்தை சாப்பிடாது அடம்பிடிக்கிறது. ஏனென்றால் அன்று அமாவாசை” (மு. பூ. ரோ-62) என நிலவில்லாத இரவையும், அதனைக் காணாது உண்ண மறுக்கும் குழந்தையையும் கவிஞா் கண்முன் நிறுத்துகின்றார்.

முடிவுரை:

  ஒருவரிடையே முகிழ்த்த ஒரு தலைக்காதல், இருவா் மனமொத்த காதலாகி, வரதட்சணையையும் தாண்டி திருமணமான நிகழ்வு, ஏழையின் திருமணம், வரதட்சணையை ஆதரிக்கும், எதிர்க்கும் இளைஞன், கணவன், மனைவியின் ஒத்துப்போக இயலாத பண்பு, வேலைக்காரப் பெண்மணியிடம் வளரும் குழந்தை என ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் காதலில் தொடங்கி கல்யாணம், குழந்தை வரையிலான இக்கவிஞனின் பதிவுகள் ஒவ்வொரு மனிதனின் உணா்வையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.
-மு.செண்பகவள்ளி

                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக