செவ்வாய், 14 மார்ச், 2017

ஒப்புரவு ஒழுகு


                    ‘ ‘சார்..  உங்களை  பிரின்சிபல் சார் கூப்பிடுறாரு..”
            உலகத் தாய்மொழி நாளின் முக்கியத்துவம் பற்றியும், அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் எட்டாவது இடத்திலிருப்பது பற்றியும் யுனெஸ்கோ அறிவித்திருப்பதை உணா்வுப்பூா்வமாக பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியா் முடியரசன் அலுவலக உதவியாளர் குமாரை உற்றுப் பார்த்து ‘தகவலுக்கு நன்றிங்கய்யா.. நான் போய் பார்த்துக்குறேன்” என்று சொல்லி  மாணவா்களை அமைதியாக இருக்க அறிவுறுத்திவிட்டு,  பள்ளி முதல்வா் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.  முடியரசன் ஐந்தாண்டுகளாக  இந்த ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் பணியாற்றி வருகிறார்.  இவரை பணியில் சேர்த்த பள்ளிமுதல்வா் தமிழார்வமும், சமூக அக்கறையும் நிரம்பியவா். ஆனால் அவரோ, 6 மாதங்களுக்கு முன்பு பணிநிறைவு பெற்றுவிட்டார்.  புதிதாக வந்துள்ள பொறுப்பு முதல்வா் முடியரசனைக் கண்காணிப்பதையே தன் பொறுப்பாக எண்ணி அவரது நடவடிக்கைகள் முழுவதும் கண்காணித்து வருகிறார்.  ‘எதற்கெடுத்தாலும் குறை சொல்லி, குற்றம் கண்டுபிடிக்கும் முதல்வா் இன்று என்ன விசாரணை வைத்திருக்கிறாரோ?’ என்று ஆா்வத்தோடு முதல்வா் அறைக்குள் நுழைந்தார்.
            உள்ளே முதல்வா், துணைமுதல்வா், துறை ஒருங்கிணைப்பாளர் மூவரும் விசாரிக்கத்  தயாராக இருந்தனா். வணக்கம் செலுத்திய முடியரசனுக்கு பதில்வணக்கம் சொல்லாததிலேயே அவா்கள் எவ்வளவு வெறுப்போடிருக்கிறார்கள் என்பதை உணா்ந்து கொண்டார் முடியரசன்.
            ”ஐயா, நீங்க கூப்பிட்டீங்கன்னு அலுவலக உதவியாளர் அழைச்சாரு..”
”மிஸ்டர்.. உங்கள் வேலை ஒழுங்கா பாடத்த மட்டும் நடத்தி பசங்கள ஸ்கோர் பண்ண வைக்குறதுதான்.  அத மட்டுமே பார்த்தா போதும்.. தேவையில்லாத விசயங்களப் பேசி அவங்க மெமரிய ஸ்பாயில் பண்ணுறீங்க..”
            ”பாடமும், மதிப்பெண்ணும் மட்டுமே போதும்னா ஆசிரியா் எதுக்குங்கய்யா? நந்தினி, ஹாசினி, ரித்திகாக்களோட எண்ணிக்கை  அதிகமாகுறதுக்கா? பாடத்தை மட்டுமே ஒப்பிக்க நா ஒன்னும் இயந்திரமில்ல..  சராசரி மனிதன் அவ்வளவுதான்.. மாணவா்களுக்கு எது நல்லதோ அதை பாடத்தோடு சோ்த்து சொல்லிக் கொடுக்குறேன். ”
            ”அதைத்தான் வேண்டாம்னு சொல்றேன்.  ஏற்கனவே இருந்த பிரின்சிபல் எப்படியோ? நா வந்த பிறகு இதெல்லாம் இருக்கக்கூடாது. ஸ்டேட் ராங்கு எடுக்க வைக்குறது தான் நம்மோட எய்ம்.  நீங்க என்னடான்னா கிளாஸ்ல இன விடுதலை, மொழி விடுதலை, நாட்டு விடுதலைனு பைத்தியக்காரத்தனமா பேசி பசங்கள தேவையில்லாம டிஸ்ட்ராக்சன் பண்ணுறீங்க ”முதல்வா் சொன்னதை துணைமுதல்வரும், துறை ஒருங்கிணைப்பாளரும் வேகவேகமாய் தலையாட்டி ஆமோதித்தார்கள்.
”ஐயா, புரியல.. நான் பசங்களோட வழிய எதையும் மாத்தலை..  அழிக்கலை.. சரியான பாதை எதுனு வழிகாட்டுற வழிகாட்டியாதானிருக்கேன்.. இது தப்பா? ”
            ”தப்புதான்.. ஏற்கனவே சல்லிக்கட்டுப் பேராட்டத்துல பசங்கள தூண்டி விட்டீங்க.. கிளாஸ்ல தமிழ்ல பேசச் சொல்லி கட்டாயப்படுத்துனிங்கன்னு உங்கமேல் ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்ஸ் இருக்கு..”
            ”ஐயா, தமிழ் நாட்டுல தமிழில் பேசச் சொல்றது தான் குற்றமா? தமிழரோட இன அடையாளத்தை மீட்டெடுக்கணும்னு சொல்லிக் கொடுக்குறதுதான் துரோகமா?”
            ”உங்க பாடம் தமிழ்தானே..  நீங்க ஏன் அரசியல் நடத்துறீங்க?”துணைத் தலைவா் தன் பங்கிற்கு விசாரித்துவிட்ட பூரிப்பில் முதல்வரைப் பார்த்தார்.
            ”ஐயா, மொழி  வேற.. அரசியல் வேற இல்ல.. அரசியல் பாடம் நடத்தலாம். சிலரைப் போல அரசியல்ல பிழைப்பு நடத்துறதுதான் தப்பு”
            முடியரசன் சொன்னது ஒருங்கிணைப்பாளரை சுட்டிருக்க வேண்டும். உடனே கூறினார்.  ”திமிர் பிடிச்சவா் சார் இவரு.. எவ்வளவு அலட்சியமா பதிலுக்குப் பதில் பேசுறாரு பாருங்க. ”  வன்மம் தலைக்கேறி கொந்தளித்தார்.
            ”ஐயா.. சிறிய திருத்தம் நான் திமிர் பிடிச்சவனில்ல.. தமிழ் படிச்சவன். பதிலுக்குப் பதில் பேசல.. கேள்விக்குத்தான் பதில் சொல்றேன்.  கேள்விக்குப் பதில் நான் சொல்லாமயிருந்தா  அதை அலட்சியம்னு சொல்லலாம்.. ஆனா..”
பேசிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்தார் முதல்வா். ”உங்க விளக்கம்லாம் ஏத்துக்குற மாதிரியில்ல.. என்னால் உங்கள வேலையிலிருந்து தூக்கமுடியும்”
            ”இதை நீங்க துவக்கத்திலேயே சொல்லியிருக்கலாமே.. தலைமைக்குத் தகுந்த மாதிரி கொள்கைகளை மாத்திக்குற பழக்கம் எனக்கில்லை.. ‘சிங்கத்தின் வாலாக இருப்பதை விட எறும்பின் தலையாக இருப்பது மேல்’னு எங்க ஆசிரியா் எனக்கு சொல்லியிருக்குறாரு.. நீங்க வேலையிலிருந்து என்னைத் துக்கி எறியலாம். பசங்க மனசுல நான் விதைச்ச மொழி, இன உணா்வுகளை உங்களால நகா்த்தக் கூட முடியாது. பணி விலகல் கடிதம் என் சட்டைப் பையிலேயே இரண்டு மாதங்களா இருக்கு..’’ எடுத்து நீட்டி பதிலை எதிர்பாராமல் வீட்டுக்கு விறுவிறு வென்று நடந்தார் முடியரசன்.
            பள்ளியிலிருந்து பாதியிலேயே வந்த கணவனின் முகம் பார்த்ததும் புரிந்து கொண்டாள் கலைச்செல்வி.  ”உங்கள் தகுதிக்கு சரியான இடம் இதில்லை.. வேறு பள்ளி பார்த்துக்கொள்ளலாம். மனதை வருத்திக்காதீங்க..”தலைகோதிவிட்டார் மனைவி கலைச் செல்வி.
     ”இன்னும் என்ன தூக்கம்? விடிஞ்சு நேரமாச்சு.. எந்திரிங்க..”  மனைவி வித்யாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.. நெஞ்சில் கவியரசா் முடியரசனின் பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் நூல் விரிந்து கிடந்தது.
                 முடியரசனையும், கலைச்செல்வியையும் நினைப்பது சுலபம். அவா்களாகவே இருப்பது சிரமம். சிரமத்தை ஏற்றால் தானே சிகரத்தை அடையலாம். கண்ட கனவு சொல்லியிருந்த தீா்வை மனதிற்குள் தீா்மானமாய் வடித்துக் கொண்டேன்.   

             வெளியேயும் இருள் விலகி, பொழுது புலா்ந்து கொண்டிருந்தது..

குறள்:   
            ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
            விற்றுக்கோள் தக்க துடைத்து. (220)

விளக்கம்:

     ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும்      தகுதி உடையதாகும்.




-        ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக