சனி, 16 டிசம்பர், 2017

மார்கழிப் பெருமை

தலையங்கம்
தி.பி.2048 (கி.பி.2017)                  மார்கழித் திங்கள்

தேன் - 1                                                         துளி-12




          மாதங்களில் நான் மார்கழி என்பான் கண்ணன். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் மார்கழி மாதத்தில் நோன்பிருந்து பாடிய  திருப்பாவையும்  மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் மார்கழி நீராடலின் சிறப்பினைக் குறிப்பிடுகின்றன.
                    திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி (பெளா்ணமி) நாளில் உபவாசம் இருந்து நோற்பதாகும். சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.  இதனைக் கருதியே சிவனை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவா்.
          திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.  திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என்ற சொலவடை தென் தமிழகத்தில் உண்டு.
          மார்கழி மாதத்தில் தில்லையில் கோயில் கொண்டருளியுள்ள நடராசப் பெருமானைத் தரிசிக்கத் தேவா்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு.  ஆதிரை என்பது திருவாதிரை தினத்தில் நடராஜப்பெருமான் தேரில் வீதிவலம் வருவதை ஆருத்ரா தரிசனம் என்பா்.   ஏகாதசி விரதம் இம்மாதத்திலேயே கடைப்பிடிக்கப்படுகிறது.
          ஓசோன் படலமானது மார்கழி  மாதத்தில் பூமிக்கு மிகவும் நெருக்கமாக வருகிறது அதனால் தான் நம் முன்னோர் இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடல் இறைவனைத் துதித்தல், கோலம்இடுதல் போன்றவற்றைச் செய்துள்ளனா். இதனால் மனிதா்களுக்கு நலம் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழமையுடன் ,
தேமதுரம் ஆசிரியா்குழு,


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
மு.சிவசுப்பிரமணியன்

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
தே.தீபா 
ந.முத்துமணி

கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3.


குரு - சிஷ்யன் பற்றிய சில தகவல்கள்

குரு - சிஷ்யன் பற்றிய சில தகவல்கள்
Ø அகத்தியா் - தொல்காப்பியா்
Ø புத்தா் - அனந்தா்
Ø சாக்ரடீஸ் - பிளாட்டோ
Ø பிளாட்டோ - அரிஸ்டாட்டில்
Ø அரிஸ்டாட்டில் - மாவீரன் அலெக்ஸ்சாண்டா்
Ø ஜெகதீஸ் சந்திரபோஸ் - இராஜேந்திரன் பிரசாத்
Ø திலகா் - வ.உ.சிதம்பரம்
Ø தேவநேயப்பாவணா் - பெருஞ்சித்தனார்
Ø இராமகிருஷ்ணா் - விவேகானந்தா்
Ø சோமசுந்தரா் - மறைமலை அடிகள்
Ø தியாகப் பிள்ளை - மாயூரம் வேதநாயகம்
Ø வடலூா் வள்ளலால் - தொழுவூா் வேலாயுதம்
Ø சுப்ரதீபக் கவிராயர் - வீரமா முனிவா்
Ø மீனாட்சி சுந்தரம் - உ.வே. சாமிநாதா்
Ø உ.வே.சாமிநாதர் - கி.வா.ஜகந்நாதன்
Ø தாயுமானவா் - அருளையா்
Ø தேசிகா் - தாயுமானவா்

ஆ.சகுந்தலா

அகல் விளக்கின் நவக்கிர தத்துவம்

அகல் விளக்கின் நவக்கிர தத்துவம்
கோயில்களிலும் வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகின்றோம் இதன் அா்த்தம் தெரிந்து கொள்வோம்.
1. அகல் விளக்கு - சூரியன்
2. நெய் எண்ணெய் - சந்திரன்
3. திரி - புதன்
4. அதில் எரியும் ஜ்வாலை - செவ்வாய்
5. இந்த ஜ்வாலையின் நிழல் கீழே - ராகு
6. ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு
7. ஜிவாலையில் அடியில் அணைத்தவுடன் இருக்கும் கரி - சனி
8. வெளிச்சம் பரவுகிறது இது ஞானம் - கேது
9. திரி எரிய எரிய குறைந்து கொண்டே வருவது - சுக்கிரன் (ஆசை) அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அா்த்தம்
இதுவே அகல் தீபம்  நமக்கு உணா்த்தும் நவக்கிரக தத்துவமாகும் (ஆசைகள் தான் துன்பத்திற்கு காரணம் நமது கா்ம வினைகளைப் போக்கி வீடுபேற்றினை அடைய நித்தமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்)
வ.மீனாட்சி


அப்துல்கலாமின் பொன்மொழிகள்

அப்துல்கலாமின் பொன்மொழிகள்
·       ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்! ஒரு புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகிறான்
·       எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இருங்கள்! ஆனால் மனிதா்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்!
·       வாழ்க்கையில்  முன்னேற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கக் கூடாது தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும்
·       காலததின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
·       என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
தே.தீபா


சமூக நலன் காத்த சரித்திர நாயகா் எம்.ஜி.ஆா்

சமூக நலன் காத்த சரித்திர நாயகா் எம்.ஜி.ஆா்
முன்னுரை

                    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
                  உனக்கு மாலைகள் விழ வேண்டும்
                  ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
                  போற்றிப் புகழ வேண்டும்
என்று திரைப்படத்தில் தான் பாடிய பாடலுக்குத தானே இலக்கணமாகத் திகழ்ந்தவா் எம்.ஜி.ஆா்.  அவா்கள் அவ்வாறு அவா் மாற்றுக் குறைாயத மன்னனாக மக்கள் மனதில் திகழ்ந்தமைக்கு சமூக நலனுக்காக அவா் மேற்கொண்ட பல நல்ல திட்டங்களே காரணம்.  அந்த வகையில் சமூக நலன் காத்த சரித்திர நாயகராக எம்.ஜி.ஆா் திகழ்ந்தமையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

பிறப்பும், வாழ்க்கைப் பாதையும்
          1917-ஆம் ஆண்டு   சனவரி 17-ஆம் நாள் இலங்கையில் கோபாலன் - சத்யமாபா தம்பதியிருக்கு மகனாகப் பிறந்து, கேரளாவில் வளா்ந்து, தந்தையின் திடீர் மறைவு காரணமாக வறுமைக்கு ஆளாகி, அதை வென்றெடுக்க தன் தாயுடனும், சகோதரருடனும், தமிழ்நாட்டிற்கு வந்து கோடான கோடி தமிழக மக்களின் மனங்களை வென்றவா் எம்.ஜி.ஆா், புரட்சித்தலைவா், மக்கள்திலகம், பொன்மனச் செம்மல், இதயக்கணி,  வாத்தியார் எனப் பலவாறாகப் போற்றப்பட்ட பெருமைக்குரியவா்.
திரைப்படத்தின் வாயிலாக நற்பண்பை ஊட்டியவா்
          தமிழகம் வந்த எம்.ஜி.ஆா்., நாடகக் கம்பெனியில் சோ்ந்து அதன் மூலம் திரைப்படத் துறையில் கால் பதித்தார். இந்தியா முழுவதும் எள்ள எத்தனையோ திரையுலக ஜாம்பவான்கள் மத்தியில் மதுப்பழக்கம், சிகரெட் பிடிப்பது, வன்முறைச் சம்பவம், சீரழியும் செயல்கள் என எவற்றையும் தன் படத்தில் காட்டாதவா் எம்.ஜி.ஆா் ஒருவராகத்தான் இருக்க முடியும்.  மேலும், எம்.ஜி.ஆா் தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக நல்ல பல கருத்துக்கள் பாமர மக்களைச் சென்றடைய  பெருமுயற்சி எடுத்தார்.  இத்தகைய செயல்பாடுகள் வாயிலாக அவா் பாமர மக்கள், ஏழை எளியோர், விவசாயிகள், தொழிலாளா்கள் ஆகிய அனைவரிடமும் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கினார் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம் - ஒரு பொற்காலம்
          அண்ணாவின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்ட எம்.ஜி.ஆா் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.  அண்ணாவின் இதயக்கணியானார் அண்ணாவின் மறைவுக்குப் பின்னா் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அவா் 1973-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.  காமராஜரைத் தன்  தலைவராகவும், அண்ணாவைத் தன் வழிகாட்டியாகவும் கொண்ட எம்.ஜி.ஆா் 1977-இல்  நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். அது முதல் 1987-இல் தான் இறக்கும் வரையிலும் அவரே முதலமைச்சராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.  1984-இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தோ்தல் பிரச்சாரத்துக்கே  வராமல் முதலமைச்சரான ஒரே முதல்வா் எம்.ஜி.ஆா் ஆண்ணாவின் உழைப்பு, ஓா் இயக்கமாக திராவிடம் சிந்தனையை அவா் கட்டியமைத்தது, நிர்வாக ரீதியில் அமைந்திருந்த கட்சியின் அஸ்திவாரம் அவரைப் போன்றே  திராவிடச் சிந்தனையில் ஊறிப் போராட்டக் களத்தில் முன் நின்ற பலமிக்க அவரது தம்பிகள் இவற்றில் எந்த ஒற்றையும் வெற்றிகரமாகப் பெற்றிராத எம்.ஜி.ஆா் அண்ணா பெற்ற வெற்றியை அடைந்தது எப்படி? .. மூன்று வரிகளில் உள்ளது அதன் ரகசியம் .. மக்களைச் சந்தி, மக்களோடு இரு, மக்கள் பிரச்சனையைப் பேசு என அண்ணா சொன்ன மந்திரத்தை எம்.ஜி.ஆா் முழுமையாகச் கடைப்பிடித்தார்.
இலவச சத்துணவுத் திட்டம்:
          அறம்எனப் படுவது யாதெனக் கேட்பின்
         மறவாது இதுகோள் மன்னுயிர்க்கு எல்லாம்
         உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
         கண்டது இல்
என்று உணவளித்தலை முதன்மையான அறமாகக் குறிப்பிடுகிறது.  மணிமேகலை, அதனை நன்குணா்ந்த எம்.ஜி.ஆா்.  காமராஜா் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தின் விரிவாக்கமாக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.  தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப்பட்டது என்பதை முழுமையாக அனுபவித்தவா் ஆகையால் தான் முதலமைச்சரானதும் எந்தக் குழந்தையும் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சா் சத்துணவுத் திட்டத்தை, அமல்படுத்தினார்.  இத்திட்டம் கல்வித துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.  கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்த ஒடுக்கப்பட்ட சமுதாயக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரச் செய்தது இத்திட்டம். மேலும், பள்ளி செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பல்பொடி, இலவச புத்தகங்கள், சீருடை , காலணிகள் என பற்பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியவா் எம்.ஜி.ஆா்
அரிசி விலை குறைப்பு :
          நான் ஆணையிட்டால்  அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் என்று திரைப்படத்தில் தான் பாடிய பாடலுக்கு ஏற்ப  எம்.ஜி.ஆாின் அரசு எப்பொழுதும் ஏழைகளுக்குாிய அரசாகவே இருந்தது.  அவா்களின் நல்வாழ்வை மனதில் கொண்டே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார்.  அதில் முக்கியமானது தமிழ் நாட்டின் முக்கிய உணவான அரிசியின் விலையைக் குறைத்தது.  அவ்வமயம் தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார்.   மேலும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம்  20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.
கல்விக்கு செய்த முயற்சிகள்:
          அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
          ஆலயங்கள் பதினாறாயிரம் நாட்டுதல்
          அன்ன யாவினும் புண்ணியம் கோடி
          ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்னும் பாரதி வாக்கை நன்குணா்ந்த எம்.ஜி.ஆா் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை நிறுவினார்.  தமிழுக்காக தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மகளிருக்காக கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னையில் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தொடங்கினார்.
ஈழத்தமிழா்களுக்கு உதவிய பண்பாளா் :
          தமிழீழ விடுதலைப்  போராட்டத்துக்கு எம்.ஜி.ஆா் காட்டிய ஆதரவு வரலாற்றில் என்றென்றும் நிலையத்திருக்கக் கூடியதாகும்.  களத்தில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் நிதி உதவி புரிந்ததோடு, ஈழத்தமிழா் மீது இலங்கை அரசு நடத்திய  இராணுவ தாக்குதலைக் கண்டித்து, தான் கருப்புடை தரித்ததோடு, தனது அமைச்சரவையிலிருந்த அமைச்சா்களையும் கருப்புச்சட்டை போட வைத்தார் அதனால் தான் வை.கோ. அவா்கள் கூறும் பொழுது, “ஈழத் தமிழா்களுக்காக அவா் செய்த உதவிகளைப் பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆா் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலா்ந்திருக்கும்.  சுமார் ஒன்றறை இலட்சம் அப்பாவித் தமிழா்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.

 பிற நலத் திட்டங்கள்:-
·       சென்னை நகருக்குக் கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்தார்.
·       பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீட்டை 32 லிருந்து 50 ஆக உயா்த்தினார்.
·       பெண்கள் முன்னேற்றத்திற்காக வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.
·       முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டன.
·       அம்மை, மஞ்சள் காமாலை, யானைக்கால் நோய்கள் வராமல் தடுக்க இலவச மாத்திரைகள் வழங்கப்பட்டன.
·       ஊரக வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
·       தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் முழுக்கி விடப்பட்டன.
·       தந்தை பெரியாரால் கடைபிடிக்கப்பட்ட எழுத்துச்  சீா்திருத்தங்கள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
·       கிராமங்களில் மணியக்காரா், காண்ம் பதவிகள் அகற்றப்பட்டு கிராம அலுவா்கள் நியமிக்கப்பட்டனா்.
·       5 வது, 6 வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது
·       கலப்பு மணம் புரிபவா்களுக்கு ரூ.450 பணமும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.
·       நீதி மன்றங்களில் தமிழ் மொழியில் வழக்குகள் நடைபெற எம்.ஜி.ஆா் ஆணை பிறப்பித்தார்
எட்டாவது வள்ளல்:-
          கடையெழு வள்ளல்களுடன் சோ்த்து எட்டாவது வள்ளலாக கருதப்படுபவா் எம்.ஜி.ஆா் அவா்கள் தன்னைத் தேடி உதவி கேட்டு யார் வந்தாலும் உடனே உதவக் கூடிய பண்பாளா்.  தான் வாழ்ந்த வீடு உட்பட ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் பொது நோக்கங்களுக்காக எழுதி வைத்தவா் கொடுத்துச் சிவந்த கரங்களை உடைய எம்.ஜி.ஆருக்கு 1988-ல் பாரத ரத்னா விருது அளிக்கப் பெற்றது.
கலங்கரை விளக்கம் அணைந்தது:-
          ஏழைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அவா்களின் வாழ்விற்கு வெளிச்சம் ஏற்படுத்திய எம்.ஜி.ஆா் என்னும் கலங்கரை விளக்கம் 1987-இல் அணைந்தது.
                    “இருந்தாலும் மறைந்தாலும் போர் சொல்ல
                  வேண்டும் இவா் போல  யாரென்று
                  ஊா் சொல்ல வேண்டும்”
என்னும் எம்.ஜி.ஆரின்  பாடல்  வரிகளுக்கு ஏற்ப அவா் மறைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எம்.ஜி.ஆா் என்னும் மூன்றெழுத்துப் பெயா் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
முடிவுரை:-
          மக்கள் மனதில் மறக்க முடியாத ஆளுமையாக  எம்.ஜி.ஆா் அவா்கள் திகழ்ந்தார் சமூக நலன் காத்த சரித்தர நாயகராக அவா் விளங்கியமையே இதற்குக் காரணம். வைரமுத்து அவா்கள் கூறியது போல,
                    ஒரே ஒரு சந்திரன் தான் ;
                 ஒரே ஒரு சூரியன் தான்;
                 ஒரே ஒரு எம்.ஜி.ஆா் தான்;
          -கா.சுபா


பழமொழி உண்மைப்பொருள்

பழமொழி உண்மைப்பொருள்

          ‘களவும் கற்று மற’ திருட்டுக்கும் இப்பழமொழிக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.  பழந்தமிழ் சமூகத்தில்  இல்லறவியல் களவியல், கற்பியல் என இரு கூறாகப் பிரித்து அணுகப்பட்டது.  திருமணத்துக்கு முன்னரே காதல் வசப்பட்ட ஒருவா் தோழன் தோழியுடனோ, தனித்தோ சந்தித்து உரையாடி உறவாடி தமது காதலை வளா்த்து உறுதிப் படுத்துவதே களவியல் எனப்படும்.  அன்றைய தமிழ் வாழ்வில் காதலும், வீரமும் இரண்டறக் கலந்திருந்தால் ஒவ்வொருவா் வாழ்விலும் களவொழுக்கம் பேணப்படுதல் தவறு என குறிப்பிடாதது மட்டுமல்ல, அதை வலியுறுத்தியும் பனையப்பட்டதே இப்பழமொழி, களவொழுக்கத்தை பேண வேண்டும்.
          ஒரு முறையே பேண வேண்டும்.  திருமணத்துக்கு பின் கற்பியலுக்கு மாற வேண்டும் ‘பிறன் மனை நோக்க பேராண்மை வேண்டும்,’  ஒருவனுக்கு ஒருத்தி  என்றே வாழவேண்டும். என்ற பண்புகளை வளா்த்து கொள்ளும் விதமாகத் தான் களவொழுக்கம் அல்லது களவியல் எனப்படும் களவைக் கற்றுக்கொள்.
          ஆனால் திருமணத்துக்குப் பின் அதை முற்றிலுமாய் மறந்து விடு என வலியுறுத்துவதே இப்பழமொழி.
-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



வானம் எனக்கொரு போதிமரம்

வானம் எனக்கொரு போதிமரம்
*    தன் பரந்து விரிந்த தன்மையால் விசால மனதைக் கற்றுக் கொடுக்கிறது வானம்....
*    மனக்கவலைகளைக் கலைத்துவிட்டு புத்துணா்வோடு பணியாற்ற அறிவுறுத்தி கலைந்து செல்கிறது மேகம்......
*    அனைவருக்குமாகப் பொழிந்து ஈகைக் குணத்தைக் கற்றுத் தருகிறது மழை....
*    உலகிற்கே ஒளி வழங்கி பிறா் வாழ்வு வளமாக உதவச் சொல்கிறது சூரியன்......
*    பாரபட்சமின்றி பங்களித்து நடுவுநிலைமையைப் போதிக்கிறது நிலவு..........
*    வளா்ந்தும் தேய்ந்தும் இருந்தும் ஒரு நாள் இல்லாமலும் இன்ப துன்ப நிலையாமைத் தத்துவத்தை ஆழமாக உணா்த்துகிறது நிலவு.......
*     ரசனையோடு வாழச் சொல்லி இரவில் கண் சிமிட்டுகின்றன விண்மீன்கள்......
*    ஆத்திரம் அழிவுக்கு வழி சுழன்று காட்டி உணா்த்தியது புயல்......
*    வானவில்லின் நிறமேழும் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை கோரவில்லை மனிதனில் மட்டும் ஏன்? கேள்வி எழுப்புகிறது வானவில்!
*    வானத்தைப் பார்த்தேன்
ஞானத்தைப் பெற்றேன்
ஆம்!
வானம் எனக்கொரு போதிமரம்!

-கா.சுபா

வீட்டுக்கொரு தியாகி

வீட்டுக்கொரு தியாகி

          விமான நிலையத்திற்குள் நடந்து போய்க் கொண்டிருந்த சூசைக்கு கைகளில் பிடித்திருந்த பயணப்பையைவிட பல மடங்கு அதிகமாய் மனசு கனத்துப் போயிருந்தது.
          அம்மா, அப்பா, மனைவி-குழந்தையை, தம்பி- தங்கையை, உறவு-நட்புகளை விட்டுப்பிரிந்து நாடுவிட்டு நாடு கடந்து செல்லும் வழி பெரிதினும் பெரிது, கொடிதினும் கொடிது.
          சொந்தமாய் ஒரு வீடு, கடினில்லாத வாழ்வு, தம்பியின் படிப்பு, தங்கைக்குத் திருமணம், மனைவி, பிள்ளை கழுத்துக்கு நகை ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்துகொண்டி சுமக்கமுடியாமல்  சுமந்து சென்றது விமானம்.
          பொதுவாகவே மூத்த பிள்ளைகள் தியாகிகள்தான்.  தனக்ககடுத்து தம்பி, தங்கை பிறக்கும் வரை கிடைக்கும் அன்பு, அக்கறை, கவனிப்பைப் பறிகொடுத்து  ‘நீ பெரியவதானே.. தம்பி, தங்கச்சிதானே சின்னப் பிள்ளைங்க’  இந்த வசனத்தைக் காலம் முழுக்க கேட்டு வளா்ந்து சின்னச் சின்ன ஆசைகளையும் தன்னைவிடச் சிறியவா்களுக்காய் விட்டுக்கொடுத்து, விட்டுக்கொடுத்து வாழ்ந்து, தாய் தந்தை அருகில்லாதபோது தம்பி, தங்கைக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து கால் கழுவி, தலைசீவி, அடி வாங்கி சிரிக்க வைத்து, உணவூட்டி தாலாட்டி மூத்ததன் முன்பு  ஒரு சில பெற்றோரும் தோற்றுவிடுவா்.
          தான் விரும்பிய பிடிப்பைப் படிக்கமுடியாமல்  குடுமு்பச்சூழலுக்காய் எச்சிலை விழுங்குவதுபோல் கனவுகளையும், ஆசைகளையும் விழுங்கிக்கொண்டு, வாழ்நாள் தியாகியாய் மாறிப்போகும் மூத்தபிள்ளைகளில் ஒருவனாய் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறான் சூசை.
          மனைவி நகைகளை  அடகுவைத்து போதாமல் மூன்று ரூபாய் வட்டிக்கு, ஐந்துரூபாய் வட்டிக்கு வீட்டுப்பத்திரத்தையும் அடகு வைத்து ஐந்து இலட்சம் பணம் கட்டி குவைத் நாட்டிற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
          குவைத் விமான நிலையம் வீட்டு வெளியில் வரும்போது வேற்றுகிரகத்தில் நுழைந்ததொரு உணா்வு.  மொழிபுரியாத, ஆள் தெரியாத நாட்டிற்கு குடும்பத்தை  விட்டுவரவைத்து பணம்தானே.  வந்து பத்து நாட்களாய் வேலையில்லாமல் கோழிக் கிடாப்பைப்போலிருந்த குடியிருப்பில் அடைந்து கிடந்தபோதுதான் முதன் முதலாய் பயம் தொற்றிக்கொண்டது.  தமிழ்நாட்டில் முகவா் சொன்ன வேலையும், சம்பளமும் இல்லாமல் ஏதேதோ  புரியாத காரணங்களைச் சொல்லி ‘இந்த வேலைதான்,  சம்பளம் குறைவுதான்’  கொஞ்ச நாளைக்குப் பிறகு ஒப்பந்தம் கிடைக்கும் போது வேறு வேலைக்கு இழுத்துக் கொள்வார்கள் என்று நீண்ட நேரம் பேசினார் அங்கிருந்த முகவா்.
          சுருக்கிச் சொல்வதைவிட இப்படி நீண்ட நேரம் விளக்குவதிலிருந்தே ஏதோ பிரச்சனை என்று தெரிந்துவிட்டது.  ‘எந்த வேலையாயிருந்தாலும் பரவாயில்லை, வட்டிக்குக் கடன் வாங்கி வந்திருக்கேன்,  ஊருக்கு என்னால் திரும்பிப் போக முடியாது எப்படியாவது உதவி பண்ணுங்க’  வெளிநாட்டுக்குப் போகும் பல தொழிலாளிகளின் இயலாமைக்குரலை சூசையும் எதிரொலித்தான்.
          இயந்திரங்களோடு ஒரு இயந்திராமாய் மாறிப்போனான்.  இரண்டு நாட்களிலேயே இரண்டு உள்ளங்கைகளிலும்  கொப்புளங்கள் வந்துவிட்டன.  அழகான முகம் அழுக்கும், புகையும் படிந்து எவ்வளவு கழுவினாலும் போகாத அளவிற்குப் படிந்துபோய்விட்டது.  சிரமப்பட்டு நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்துதான்.
          ஊரில் குடியிருக்கும் வீட்டில் அடுப்பங்கரை அளவுதான் தங்குமிடம்.  அதில் நான்குபோ் தங்கவேண்டியிருந்தது.  செலவுக்குக் கொண்டுவந்திருந்த கையிருப்புப் பணமெல்லாம்  கரைந்துபோனது.  வேலைசெய்யுமிடத்தில் வெப்ப மிகுதியாலும், தங்கியிருந்த இடத்தில் தண்ணீா் ஒத்துக்கொள்ளாமலும் முன்னந்தலையில் முடியும் கொட்டிப்போய் அடையாளமே மாறிவிட்டான்.
          வந்து ஒரு மாதத்தில் வீட்டிற்கு ஒரு முறை மட்டுமே பேசியிருந்கிறான் உணவகத்தில் வாங்கிச் சாப்பிடுவது கட்டுப்படியாகாமல் தானே சமைத்துச் சாப்பிடுவதென்று முடிவெடுத்து சமைக்கவும்  தொடங்கிவிட்டான்.  கொஞ்சம் கொஞ்சம் கிடைத்த ஓய்வு நேரமும் இல்லாமல் போனது.  மாதங்கள் ஏழு நாட்களாய் உருண்டோடின.
          வீட்டில் தன்னைப் போலவே எல்லோரும்  பார்க்கவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தார்களென்பதால் உடன் தங்கியிருந்தவனிடம் கெஞ்சிக் கூத்தாடி திறன் பேசியில் பேசுவதற்குமுன் அரைமணி நேரமாய் முகப்பூச்சு பூசி, தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு வீட்டில் எல்லோரிடமும் பேசினான்.  ஒவ்வொருவரும் முகம் பார்த்த மகிழ்ச்சியல் நெடுநேரம் பேசினார்கள்  எல்லோரும் பேசிவிட்டு கடைசியாய் மனைவியிடம் பேசத் தொடங்கும் போது திறன் பேசியில் இருப்புதொகை முடிந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.  வழக்கம்போல எச்சிலையும், கனவையும் போல அழுகையையும் மென்று விழுங்க முயற்சித்தான் சூசை.
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்