வியாழன், 19 ஏப்ரல், 2018

தலையங்கம்


தலையங்கம்
தி.பி.2048 (கி.பி.2017) புரட்டாசி  திங்கள்
தேன் - 2                                                         துளி-12

அயராது சாதிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்          பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தர மதிப்பீட்டு அடிப்படையில் இந்திய நாட்டின் அறுபது உயா்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.  60 நிறுவனங்களில் 25 முதல்தரவகைப் பல்கலைக்கழகங்களும், 27 இரண்டாம் தரவகைப் பல்கலைக்கழகங்களும்,  8 தன்னாட்சிக்கல்லூரிகளும் இதில் அடங்கும்.
          25 முதல் தரப் பல்கலைக்கழகங்களில் 2 மத்திய பல்கலைக்கழகங்களும், 12 அரப்பல்கலைக்கழகங்களும், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழங்களும் இடம் பெற்றுள்ளன.  இதில் 12 அரசுப் பல்கலைக்கழங்களில்  தேசிய தர மதிப்பீட்டு குழும (NAAC) மதிப்பீட்டுப் புள்ளிகள் அடிப்படையில் 3.68 புள்ளிகள் பெற்று கொல்கத்தா ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் முதலிடத்திலும், 3.68 புள்ளிகள் பெற்று தமிழ் நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.
          தன்னாட்சி அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் தானாகவே புதிய துறைகள், மையங்கள், பாடப்பிரிவுகள் தொடங்கலாம், புதிய ஆராய்ச்சி  பூங்காக்கள், பல்கலைக்கழக சமூக தொடா்பு மையங்கள் மற்றும் தனியாருடன் இணைந்து புதிய பாடப் பிரிவுகள் தொடங்கிட பல்கலைக்கழக நிதி நல்கைக்  குழுவின் அனுமதி தேவையில்லை.  பன்னாட்டு அறிஞா்கள், பேராசிரியா்களைப் பணியமா்த்திக் கொள்ள, வெளிநாட்டு மாணவா்களை எந்தப் தடையுமின்றி பயில அனுமதிக்கலாம்.  உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய நல்வாய்ப்புகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ள நம் அழகப்பா பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்திருப்பது பல்கலைக்கழகத் துணைவேந்தா், பதிவாளா்,  பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப்பணியாளா்கள் போன்றோரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
          மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பெற்ற தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (NIRF) கடந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசையில் 97-ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்த அழகப்பா பல்கலைக்கழகம் இவ்வாண்டு 70 இடங்கள் முன்னேறி 27 வது தரவரிசையைப் பெற்றிருப்பது இமாலய சாதனையாகும்.
          மேலும் நம் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவா்களுக்கு இலக்குவனார் இலக்கியப் பேரவை “தொல்காப்பியா்” விருது அளித்துள்ளமையும், மலேசிய சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலேசியாவில் கடந்த மாதம் கருத்தரங்கம் நடத்தியதன் மூலம் அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று கருத்தரங்கம் நடத்திய முதல் பேராசிரியா் என்ற பெருமையை பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
சாதனைகள் தொடர உளமார வாழ்த்துகிறோம்.
                                                                                                    இப்படிக்கு,
                                                                                          தேமதுரம் - ஆசிரியா்குழு


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
மீனாட்சி

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
தே.தீபா
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3. எனது மலேசியப்பயணம்


எனது மலேசியப்பயணம்

          எங்களது தமிழ்ப்பண்பாட்டுமையம், சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பன்னாட்க்கருத்தரங்கத்திற்கு தமிழ் நாட்டிலிருந்து நாற்பத்திரெண்டு போ் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரிகளிலிருந்து மலேசியாவிற்கு 26.03.2018 அன்று புறப்பட்டோம் இப்பயணம் கருத்தரங்கம் மற்றும சுற்றுலா இரண்டையும் மையமாகக் கொண்ட ஐந்து நாள் பயணம்.

          இது எனது முதல் விமானப்பயணம். திருச்சி விமான நிலையத்திற்குள் நுழைந்ததிலிருந்து விமான  இருக்கையில் அமா்ந்து, விமானம் தரையிலிருந்து மேல்நோக்கிச் சென்று வானத்தில் நான்கு மணிநேரம் பறந்தது வரை அனைத்துமே என் மனம் வானத்தில் பறக்கிறது என்று சொல்லுவோமே, அதுபோல் அன்று என் மனத்துடன் சோ்ந்து நானும் வானத்தில் பறப்பதாகவே உணா்ந்தேன்.

          மலேசியா விமான நிலையத்தில் இறங்கியதும் நமது ஊரில்  பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பது போல் நூற்றுக்கணக்கான விமானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கண்டு வியந்தேன்.  எவ்வளவு பெரிய விமான நிலையம்.  ஓடுதளத்தில் மட்டுமே விமானம் அரைமணிநேரம் பயணிக்கிறது.  அவ்வளவு பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையம்.

          விமான நிலையத்திலிருந்து குளிர் சாதன வசதி கொண்ட பேருந்தில் ஏற்றி எங்களை முதன் முதலில் அழைத்துச் சென்ற இடம் சுல்தான் தங்கியிருக்கும் மாளிகை இம்மாளிகை அங்கு இன்னும் மன்னா்களின் ஆட்சி இருக்கிறது என்பதை உணா்த்தியது நமது நாட்டில் என்றோ மன்னா்கள் ஆட்சி மறைந்து குடியரசு ஆட்சி வந்து விட்டது.  நமது நாட்டில் குடியரசுத்தலைவருக்கு உண்டான அதிகாரம் அங்கு சுல்தானுக்கு உண்டு.  தனியாகக் குடியரசுத்தலைவா் என்று ஒருவா் இல்லை.  அதற்கு அடுத்த நிலையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா் இருக்கிறார்.

          மலேசியாவில் ஒன்பது மாகாணம் உள்ளது.  ஒவ்வொரு மாகாணத்தில்  தலைவராக இருக்கும் சுல்தான்கள் ஒன்பது பேரில் ஒருவா் மலேசியாவின் சுல்தானாக ஐந்து ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள்.  ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் சுல்தான் மாளிகையிலிருந்து அவரின் சொந்த மாகாணத்திற்குச் சென்று விடுகிறார்.  மற்றொரு சுல்தான் அடுத்து ஆட்சிக்கு வருகிறார்.
          இப்படியாக வாரிசுப்படி ஒவ்வொருவரும் ஆண்வாரிசுகள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் ஒரு சுல்தானுக்கு ஆண் வாரிசு இல்லையெனில் அவா் நான்கு மனைவியா் வரை திருமணம் செய்து கொள்ளலாம். நான்காவது மனைவிக்கும் ஆண் பிள்ளை பிறக்க வில்லையெனில் நால்வரில் ஒருவரை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்.  இது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
          அடுத்ததாக எனக்கு மிகவும் வியப்பூட்டுவதாக இருந்தது மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் அமைந்துள்ள  விண்னை முட்டும் கட்டிடங்கள்  அதில் இரட்டைக் கோபுரம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கருத்தரங்கு

          28.03.2018 அன்று மலேசியா சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்குக் கோலாலம்பூரில் இருந்து 8.00 மணிக்கு சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.  2.30 மணிக்கு நேரப் பயணத்தில் பல்கலைக்கழகத்தை அடைந்தோம். சரியாக 9.00 மணியளவில்  பன்னாட்டுக் கருத்தரங்கம் துவங்கியது   கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளியிடப்பெற்றது.  பேராளா்கள் கட்டுரை வாசித்தோம். மலேசியத் தமழ் மாணவா்களும் கலந்து கொண்டனா்.  மலேசியாவில்  ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்றக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.  நிறைவாக பல்கலைக்கழகத்தின் கலைப் புல முதன்மையா் (Dean) அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.

கென்டிங் மலைப்பிரதேசம்

          கென்டிங் என்னுமிடம் மலையின் உச்சியில் தனிமனிதனுடைய உழைப்பால் அமைந்ததாகும்.  இதன் நிறுவுனா் பெயா் ybhg Tan SRI Dato Seri (CR) LIMGOH TONG  இவா் சீனாவிலிருந்து வந்து அவருடைய மாமவிற்கு  கட்டிடத் தொழில் உதவியாக இருந்து பின்பு மலையின் உச்சியில் படிப்படியாக தங்கும் வடுதி, உணவு விடுதி, சூதாட்ட விடுதி, கேளிக்கை விடுதிகள் உன உலகப் பணக்காரா்களை ஈா்க்கும் வகையில்  அமைத்து உலக பணக்காரா்களில் ஒருவராக வளா்ந்திருக்கிறார்.  கென்டிங்கிற்குச் செல்ல கேபிள் ஊா்தி வசதி செய்யப்பட்டுள்ளது.

          அங்கு உணவு விடுதிகளில் நான்கு நாடுகளின் (சைனா, ஜப்பான், மேற்கு ஆசிய நாடுகள், மேற்குநாடு) உணவுகளை நாம் ருசிக்கலாம்.  விதவிதமான பழங்கள், உணவுகள்,  அசைவ உணவுகள் என அங்கு கிடைக்கிறது.  அசைவ உணவு பிரியா்களுக்கு தகுந்த இடம் மதிய உணவை அங்கு உண்டோம்.

பத்துமலை முருகன் கோயில்

          அன்று மாலை பத்துமலை  முருகன் கோயிலுக்குச் சென்றோம் சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படிகளில் ஏறிச் சென்றால் மலையைக் குடைந்து வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சிதருகிறார்.  மலையின் அடிவாரத்தில் சுமார் 145 அடியில் முருகன் வேலுடன் நின்ற கோலத்தில் அருள் பாளிக்கிறார்.  இக்கோயிலில் தமிழகத்தில் இருந்து சென்ற குருக்களே பூசை செய்கின்றார்.  தமிழக முருகன் கோயில்களைப் போன்றே பூசைகள், திருவிழாக்கள் போன்றவை அங்கும் நடத்தப்படுகின்றன.

மலாக்கா
          அடுத்த நாள் மலாக்கா என்ற இடத்திற்குச் சென்றோம் அவ்விடம் மலேசிய வரலாற்றைக்  குறிப்பாகத் தமிழா்களின் வரலாற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.  தமிழா்கள் கடல்வழிப் பயணமாகச் சென்று முதல் முதலில்  மலாக்காவில் தான் குடியேறினா். பின்பு போர்த்துகீசியா்களும் கைப்பற்றி அவரவா் கொடிகளை நாட்டியுள்ளனா் ஆனால் இன்றும் அங்கு அதிகளவு தமிழா்கள் வசிக்கிறார்கள்.  இதனை நினைவுகூறும் வகையில் அங்கு மிகப் பெரியகப்பல் ஒன்று நிசக்கப்பலைப் போன்றே வடிவமைக்கப் பட்டுள்ளது.

புத்தரஜெயா

          மறுநாள் தங்கியிருந்த விடுதியைக் (Hotel) யிலிருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் புத்தரஜெயா என்ற இடத்திற்குச் சென்றோம்  புத்தர ஜெயாவில் பிரதமமந்திரி,  மந்திரிகள்  போன்றவா்களின் தங்கும்இடமும், அலுவலகமும் அமைந்துள்ளது.  மலேசியாவின் ஒன்பது மாகாணங்களைக் குறிப்பதாக ஒன்பது மாகாணத்தின் கொடிகள் அங்கு நடப்பட்டுள்ளது.  அதன் அருகில் மலேசியாவின் மிகவும் பெரிய மசூதி அமைந்துள்ளது.  இப்பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்டப்பகுதியாகும்.  அவ்விடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆறு மிகவும் அழகுறக் காட்சியளிக்கிறது.

          மலேசியாவில் கடைகள், பெருங்கடைகள் உணவு விடுதிகள் என எங்கு பார்த்தாலும் தமிழா்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.  அதனால் மலேசியா வேற்று நாடு என்ற உணா்வு இல்லாமல் நம் தமிழ்நாடு போன்ற உணா்வையே கொடுத்தது.
ந.முத்துமணி
         


புதின எழுத்தாளா் - மாக்சிம் கார்க்கி


புதின எழுத்தாளா் - மாக்சிம் கார்க்கி

          ரஷ்யாவின் நஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 28.03.1868 -இல் பிறந்தார் இயற்பெயா் அலெக்ஸி மாக்சீமொவிச் பெஷ்கோவ். ஐந்து வயதில் தந்தை இறந்தார் தாயின் ஆதரவும் இல்லாத இவருக்கு எல்லாமே பாட்டிதான். “பாட்டி கூறிய ராஜா, ராணி கதைகள் தான் எனக்கு அறிவுப் பாடம் புகட்டின” என்று பெருமிதத்துடன் கூறுவார்.

          வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை.  எட்டு வயதிலேயே வேலைக்குச் சென்றார்.  வேலை செய்து கொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார்.

          எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார் தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார் 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகா் சுத்ரா’ வெளிவந்தது.  மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடா்ந்து எழுதி வந்தார்.

          1898-ல் ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ், வெளிவந்தது.  1899-ல் முதல் நாவலும், 1902-ல் தி லோயா்  டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன.  இவரது உலகப் புகழ் பெற்ற ‘மதா்’ நாவல் 1906-ல் வெளிவந்தது.  கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளா்ந்தெழச் செய்வது, அதிகார வா்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன.  இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார்.  பல முறை கைது செய்யப்பட்டார்.  இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

          வலிமையான இவரது எழுத்துகள் சாதாரன மக்களை விழிப்படையச் செய்தன.  இலக்கிய வாதிகளின் பாராட்டுகளைப் பெற்றன. ஏழைகள் இவரைத் தங்கள் பிரதிநிதியாகக் கொண்டாடினா்.

          ரஷ்ய சோஷசலிச ஜனநாயக தொழிலாளா்  கட்சிக்கு நிதியுதவி அளித்து வந்தார்.  ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார்.  உலகம் முழுவதும் உள்ள  சிறந்த எழுத்தாளா்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.  குழந்தைகளிடம் மிகுந்த  அன்பு காட்டினார்.

          பல கவிதை எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார்.  அபார நினைவாற்றல் படைத்தவா்.  எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார்.  சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவா்.

          ரஷ்யா, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஜொ்மனி ஆகிய மொழிகள் அறிந்தவா்.  உழைப்புதான் உலகின் ஜீவசந்தி என்பார்.  இளம் எழுத்தாளா்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

          பாட்டாளி வா்க்க இலக்கியத்தின் பிதாமகா் என்று போற்றப்பட்டார்.  இவா் படைத்த “தாய்” (மதா்) நாவல், இன்று வரை புரட்சிகரத் தொழிலாளி வா்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை உட்டி வருகிறது.  இது 200 முறைக்கு மேல் மறுமதிப்பு செய்யப்பட்டுள்ளது.  உலகின் பல மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது

          இவரது எழுத்துக்களின் தாக்கம் உலகம் மழுவதும் உள்ள  ஏராளமான எழுத்தாளா்களிடம் காணப்படுகிறது.  சோஷலிஜ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகளும் பல அமர இலக்கியங்களைப படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.

-வே.ஜெயமாலா


ஊர்களின் பழைய பெயர்கள்


ஊர்களின் பழைய பெயர்கள்
ஆருக் காடு - ஆற்காடு
ஆரைக்கல் - நாமக்கல் 
ஈரோடை - ஈரோடு
உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல்
எருமையூர் --- >மகிசூர்---> மைசூர் (எருமை க்கு வடமொழியில் மகிசம்) 
ஏரிக்காடு - ஏற்காடு 
ஒத்தை கால் மண்டபம்-ஒத்தை கால் மாந்தை-உதகமண்டலம்-ஊட்டி
கசத்தியாறு - கயத்தாறு - 
கரவூர், வஞ்சி - கரூர்  
குடந்தை, குடமூக்கு - கும்பகோணம் 
குன்றூர் - குன்னூர்
குளிர் தண்டலை - குளித்தலை 
குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்) 
கோடலம் பாக்கம் - கோடம்பாக்கம் - 
கோவை - கோயமுத்தூர் -  
சின்ன தறிப் பேட்டை - சிந்தாரிப்பேட்டை - 
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு 
செருத்தணிகை - திருத்தணி 
சேரலம் - சேலம் 
சோளிங்கர் - சோழலிங்கபுரம்
தகடூர் - தருமபுரி  
தன்செய்யூர்- தஞ்சாவூர் - தஞ்சை
தர்மபுரம் - தாம்பரம் 
தவத்துறை - லால்குடி -  
திண்டீஸ்வரம் - திண்டுக்கல் 
திருஆவினன்குடி - பழனி 
திருக்கொடி மாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு 
திருச்சீரலைவாய் - திருசெந்தூர் 
திருச்சுரம் - திரிசூலம் 

திருநல்லுர் - அருப்புக்கோட்டை
திருமறைக்காடு - வேதாரண்யம் 
திருவரங்கம் - ஸ்ரீரங்கம் 
தில்லை - சிதம்பரம் 
நாலுக்கோட்டை - சிவகெங்கை - சிவகங்கை
பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல் 
பழம் உதிர் சோலை - பழமுதிர்சோலை 
புதுகை - புதுக்கோட்டை 
புதுவை - பாண்டிச்சேரி 
புலிக்காடு - பழவேற்காடு 
புளியங்காடு - திண்டிவனம் 
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி 
மதிரை -மதுரை 
முதுகுன்றம் - விருதாச்சலம்(வடமொழி) 
ராஜராஜேஸ்வரம் - தாராசுரம் 
வென்க‌ல்லூர் - பெங்களூர்
வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
-அ.ரா.பானுப்பிரியா


பாவத்தின் தந்தை யார்?


பாவத்தின் தந்தை யார்?

          அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்?
அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான். பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது. யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.
          வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன. ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
          நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே! அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள். “என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
          பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார். “அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள். பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!

          “பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர். “சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள். அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார். “என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள். பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை! “சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.

          “வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள். “சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பைப்பாருங்கள். அதை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.

          பண்டிதர் அவர் மார்பகங்களைப் பார்த்தார். அதில் அலங்கரிக்கும் வைர மாலை அவர் கண்களைக் கவர்ந்தது. “சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்.

          ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள். பண்டிதர் துடிதுடித்துப் போனார்.  “இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை, பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”  தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது. அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது.
கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார். சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.

          “மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார். “மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.

          “ஆஹா! பாவத்தின் தந்தை ஆசையா? பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.  “நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.

ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்!
-கு.கங்காதேவி

உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்


உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

          ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.  அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

           சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.  இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது.

          சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!  குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.  நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

          *இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? *"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய்*, *முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,* "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.* இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே"* *என்று உரக்க கூறியது.* *இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது*. *"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"*.

சு.லாவண்யா


பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்

          அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்னும் பழமொழி இன்று பிள்ளைகளின் எண்ணிக்கையோடு தொடா்புபடுத்தி உரைக்கப்பெருகிறது. ஐந்து பிள்ளைகள் உள்ள வீட்டில் மூன்று பிள்ளைகள் சரி இல்லாமல் (அதாவது இச்சமூகம் எதிர்பார்க்கும் வசதி வாய்ப்புகளுடன் இல்லாமல்) இருக்க ஏதோ இரு பிள்ளைகள் மட்டும் நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதைக் குறிக்கும் விதமாக இப்பழமொழி பொருள் மாறி வழங்கப்பெறுகிறது.  ஆனால் இது  சைவசமயத்தைச் சார்ந்த சிவபெருமானோடு தொடா்புடைய பழமொழி ஆகும்.  சிவாயநம அல்லது நமசிவாய என்ற ஐந்தெழுத்து இறைநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு நேரம் இல்லையெனில் குறைந்தபட்சம் சிவ சிவ என்ற இரண்டெழுத்து மந்திரத்தையாவது உச்சரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காவே அஞ்சுக்கு அரண்டு பழுதில்லை என்று சுட்டப்பெறுகிறது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை